பெரம்பலூரில் ஆலம்பாடி ரோடு அன்பு நகரை சேர்ந்தவர் மகேஸ்வரி. இவர் பெரம்பலூரில் தான் புதிதாக கட்டிய வீட்டிற்கு ரசீது போடுவதற்காக தனது உறவினர் மெய்யன் என்பவர் மூலமாக நகராட்சி அலுவலகத்தில் விண்ணப்பித்திருக்கிறார்.
பெரம்பலூர் நகராட்சியில், புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த 53 வயதாகும் கண்ணன் என்பவர் வருவாய் ஆய்வாளராக இருக்கிறார். இந்நிலையில், கண்ணன் மெய்யனிடம் வீட்டிற்கு நகராட்சியில் ரசீது போடுவதற்காக ரூ.25,000 லஞ்சமாக கேட்டதாக கூறப்படுகிறது.
லஞ்சம் கொடுக்க விரும்பாத மெய்யன் இது குறித்து பெரம்பலூர் மாவட்ட லஞ்ச ஒழிப்பு பிரிவு காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இந்த புகாரின் பேரில், ரசாயன பவுடர் தடவிய ரூ.25,000 கண்ணனிடம் கொடுக்க மெய்யனுக்கு லஞ்ச ஒழிப்பு பிரிவு போலீசார் அறிவுறுத்தியிருக்கிறார்கள்.
லஞ்ச ஒழிப்பு பிரிவு போலீசாரின் அறிவுறுத்தலின் பேரில் நேற்று தனது வீட்டில் பணத்துடன் கண்ணன் காத்திருந்தார். லஞ்ச ஒழிப்பு பிரிவு போலீசாரும் கண்ணனின் வருகைக்காக வீட்டினருகே ரகசியமாக கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருக்கிறார்கள்.
அப்போது வீட்டிற்கு வந்த நகராட்சி வருவாய் ஆய்வாளர் கண்ணன், மெய்யனிடம் லஞ்ச பணத்தை வாங்கிய போது, அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு பிரிவு போலீசார் விரைந்து சென்று கண்ணனை கையும், களவுமாக பிடித்து கைது செய்தனர்.
கண்ணனைக் கைது செய்ததும், அலுவலகத்திலும் சோதனையிட்டனர். தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.