கர்ப்பமான காதலி தனக்குதானே பிரசவம் ... பிறந்த குழந்தையை உயிருடன் புதைத்த நர்சிங் மாணவி!
Dinamaalai May 18, 2025 10:48 PM

புதுக்கோட்டை மாவட்டம் பனையப்பட்டி  பகுதியில் வசித்து வருபவர் ரவி. இவரது மகள் 21 வயது  வினோதா.   இவர் இலுப்பூர் அருகே உள்ள தனியார் கல்லூரியின் விடுதியில் தங்கி நர்சிங் இறுதியாண்டு படித்து வந்தார்.  இவருக்கு இன்னும் திருமணமாகாத நிலையில் இவரது காதலனுடன் பழகி கர்ப்பமானார்.  கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு வீட்டிற்கு வந்தார்.  இவரது தந்தை வெளிநாட்டில் இருப்பதாக கூறப்படுகிறது.  நிறைமாத கர்ப்பமாக இருந்த வினோதா இன்று அவரது வீட்டிலேயே தனக்குத்தானே பிரசவம் பார்த்து பெண் குழந்தையை பெற்றெடுத்துள்ளார்.   


இன்னும் வினோதாவிற்கு திருமணமாகாத நிலையில், பெண் குழந்தையினை பெற்றெடுத்ததால் குழந்தை பிறந்த உடனே அவரது வீட்டு வாசலிலேயே குழந்தையை உயிருடன் குழி தோண்டி புதைத்து விட்டார். அவ்வழியாக சென்ற பெண்மணி ஒருவர், குழந்தையின் அழுகுரல் கேட்டு பார்த்தபோது குழந்தையின் கை மட்டும் வெளியே தெரிந்துள்ளது. பின்னர் புதைக்கப்பட்ட குழந்தையை தோண்டி எடுத்த போது குழந்தை உயிருடன் இருந்ததால் உடனடியாக  அரசு சுகாதார நிலையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டு அங்கு முதலுதவி செய்யப்பட்டு  புதுக்கோட்டை ராணியார் அரசு மருத்துவமனைக்கு அந்த குழந்தை கொண்டு செல்லப்பட்டது.


தற்போது அந்த குழந்தைக்கு அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், இச்சம்பவம்  குறித்து   போலீசார் குழந்தையை பெற்றெடுத்த தாய் வினோதா மற்றும் அவரது காதலன்  சிலம்பரசன் இருவரிடமும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.  இருவர் மீதும் பனையப்பட்டி கிராம நிர்வாக அலுவலர் செந்தில் குமார் கொடுத்த புகாரின் அடிப்படையில் குற்ற எண் 37/2025 ன் படி  இயற்கைக்கு மாறாக பெற்ற குழந்தையை மறைத்தல் 49ன்படி குழந்தையை மறைக்க உடந்தையாக இருத்தல் ஆகிய இரு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.  இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.  

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.