சென்னை தரமணியில் இருந்து திருவான்மியூர் செல்லும் சாலை எப்போதும் பரபரப்பாக வாகனங்கள் வந்த வண்ணம் இருக்கும் . இந்நிலையில் நேற்று மாலை இங்கு திடீரென பெரிய பள்ளம் உண்டானது. சிக்னலில் நின்றுகொண்டிருந்த கார் ஒன்று பள்ளத்தில் திடீரென கவிழ்ந்து கோரவிபத்து ஏற்பட்டுள்ளது.
காரில் 5 பேர் பயணித்த நிலையில், அனைவரும் பள்ளத்தில் சிக்கினர். உடனடியாக கிரேன் உதவியுடன் பள்ளத்தில் விழுந்த காரை வெளியே எடுத்த போலீசார், காருக்குள் இருந்தவர்களையும் பத்திரமாக மீட்டனர். சாலை பள்ளத்தில் கார் கவிழ்ந்து விழுந்த விபத்தால் அப்பகுதியில் சுமார் ஒரு மணி நேரம் வரை போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
மெட்ரோ பணிகள் காரணமாக பள்ளம் ஏற்பட்டதாக தகவல்கள் வெளியானது. இந்நிலையில், அதனை மெட்ரோ நிர்வாகம் மறுத்துள்ளது. சாலையின் அடியில் பதிக்கப்பட்டுள்ள கழிவுநீர் குழாயில் ஏற்பட்ட கசிவு காரணமாகவே திடீர் பள்ளம் உண்டானதாக மெட்ரோ தரப்பு விளக்கம் அளித்துள்ளது.
இந்த விபத்து குறித்து கார் உரிமையாளர், “எனது கார் டிரைவர் வண்டியை ஓட்டிச் சென்ற நிலையில், இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. காரில் கணவன், மனைவி, குழந்தைகள் இருந்தனர். சிக்னலில் நின்றுகொண்டிருந்த வண்டி, அப்படியே பள்ளத்தில் விழுந்து விட்டது. டிரைவருக்கு தலையில் அடிபட்டு முதலுதவி சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.
கார் முழுவதும் சேதமடைந்துவிட்டது. தாலி முதற்கொண்டு அடமானம் வைத்து வாங்கிய கார் அது. கார் போனாலும் பிரச்னையில்லை. உயிர் போனா யார் பொறுப்பு? கார் சேதமடைந்திருந்தால் அரசிடம் முறையிட்டு வாங்கிக் கொள்ளலாம். எனது வாகனம் பழுதடைந்துவிட்டது என்பது என்னுடைய குற்றச்சாட்டு இல்லை.
எனக்கு ஏற்பட்ட நிலைமை யாருக்கும் ஏற்பட்டு விடக்கூடாது. ஓஎம்ஆர் சாலையில் மெட்ரோ பணிகள் மற்றும் மேம்பாலப் பணிகள் வந்ததற்குப் பிறகுதான் பள்ளங்கள் ஏற்பட்டு வருகின்றன. அரசு வாகனத்திற்கு பிரச்சனை என்றால் அரசு பொறுப்பு ஏற்கும். எங்களைப் போன்ற கூலித் தொழிலாளர்கள் வாகனம் பாதிக்கப்பட்டால் நாங்கள் என்ன செய்வது? இது போன்ற விஷயங்களில் அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும்” என வேண்டுகோள் விடுத்துள்ளார்.