ஜெர்மனியில் பிராங்பர்ட் நகரிலிருந்து ஸ்பெயினின் செவில்லே நகர் நோக்கி லுப்தான்ஸா ஏர்பஸ் ஏ321 விமானம் ஒன்று நடுவானில் சென்று கொண்டிருந்தது. அந்த விமானத்தில் 199 பயணிகள் மற்றும் 6 விமான ஊழியர்கள் பயணம் செய்தனர். இந்நிலையில், விமானி அறையில் இருந்து வெளியேறிய விமானி அவசரத்திற்காக கழிவறைக்கு சென்றிருந்தார். விமானம் முழுவதும் துணை விமானியின் கட்டுப்பாட்டில் இருந்துள்ளது. அப்போது, துணை விமானிக்கு லேசாக மயக்கம் வந்துவிட்டது. அவர், அப்படியே மயக்கத்தில் சரிந்து விட்டார். வெளியே சென்ற விமானி மீண்டும் விமானி அறைக்குள் வர முயன்றபோது, அதன் கதவு ஆட்டோமேட்டிக் காரணமாக லாக்காகிவிட்டது.
முறைகேடாக யாரும் உள்ளே வர கூடாது மற்றும் பாதுகாப்புக்காக விமானி அறை கதவு அந்த வகையில் வடிவமைக்கப்பட்டிருப்பது வழக்கமான ஒன்று தான். ஆனால் இங்கு விமானத்தில் நெருக்கடியான சூழல் ஏற்பட்டது. விமானத்தின் கேப்டன், கதவை திறக்க பலமுறை முயற்சித்தார். அவசரகால குறியீட்டு முறையை பயன்படுத்தியும் கதவை திறக்க முடியவில்லை. அப்போது, விமான ஊழியர் ஒருவர், துணை விமானியை தொலைபேசி வழியே தொடர்பு கொள்ள முயன்றார். ஆனால், சுயநினைவின்றி இருந்த அவரை தொடர்பு கொள்ள முடியவில்லை. இந்நிலையில், துணை விமானிக்கு லேசாக சுயநினைவு வந்ததும் மெதுவாக எழுந்து சென்று கதவை திறந்து விட்டார். உள்ளே வந்த கேப்டன் உடனடியாக விமானத்தின் கட்டுப்பாட்டை தன்வசம் கொண்டு வந்துள்ளார். இதனை தொடர்ந்து மாட்ரிட் நகருக்கு திருப்பி விடப்பட்டு, விமானம் பாதுகாப்பாக தரையிறங்கியது. துணை விமானிக்கு உடனடியாக சிகிச்சைக்கு கொண்டு செல்லப்பட்டார்.
நடுவானில் 10 நிமிடங்கள் வரை மனிதர்களின் கட்டுப்பாடின்றி விமானம் பறந்துள்ள விவரம் தெரிய வந்து பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த பதற்றம் நிறைந்த சூழலில், விமானம் ஆட்டோபைலட் எனப்படும் முறையில் இயங்கியதாக கூறப்படுகிறது. இதனால், விமானம் சீராக பறந்துள்ளது. தொழில் நுட்பத்தில் சாதக, பாதக அம்சங்கள் இருப்பது தெரிய வந்துள்ளது. ஆட்டோபைலட் முறையில் சீரான விமான இயக்கம் இருந்தபோதும், விமானி அறையின் கதவு பூட்டி கொண்ட சம்பவம் பாதுகாப்புக்காக என எடுத்து கொண்டாலும், அவசர காலத்தில் அது பயனற்ற ஒன்றாகி விட்டது. விமானத்தின் உள்ளே இருந்த பயணிகள் அனைவரும் பாதுகாப்பாக தரையிறங்கினர். பேரிடர் ஏற்படாமல் தவிர்க்கப்பட்டு இருப்பது பயணியரிடையே பெரும் நிம்மதியை ஏற்படுத்தியுள்ளது.