திமுக, பாஜகவுடன் என்றுமே கூட்டணி கிடையாது... தவெக துணை பொதுச் செயலாளர் நிர்மல் குமார் திட்டவட்டம்!
Dinamaalai May 19, 2025 08:48 PM

சென்னை திருவான்மியூரில் மே 18ம் தேதி முள்ளிவாய்க்கால் நினைவு தினம் தவெக சார்பில்  அனுசரிக்கப்பட்டது. இதில் அக்கட்சியின் பொதுச் செயலாளர் என்.ஆனந்த்,துணை பொது செயலாளர் சி.டி.நிர்மல்குமார் உட்பட  50 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.  இந்நிகழ்ச்சிக்கு பிறகு  செய்தியாளர்களிடம் பேசிய துணை பொது செயலாளர் சி.டி.நிர்மல்குமார், “எங்கள் வாயில் இருந்து வரும் வார்த்தை தலைவர் விஜய் சொன்ன வார்த்தை. தலைவருடைய அறிவுறுத்தலின் பேரில் தான் நிர்வாகிகள் செய்தியாளர்களை சந்திக்கின்றனர். 

எங்கள் தலைவர் முதலாம் ஆண்டு நிறைவு விழாவில் எங்கள் தலைவர் தெளிவாக சொல்லிவிட்டார். என்றுமே பாஜக, திமுகவுடன் கூட்டணி கிடையாது எனத்  தெளிவாக கூறிவிட்டார். இதில் எந்தவித மாற்றமும் இல்லை. இந்தக் கேள்வியை மீண்டும் மீண்டும் கேட்க வேண்டிய தேவை இல்லை” எனத் தெரிவித்துள்ளார்.  


முன்னதாக பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் கூட்டணி குறித்து தவெக தலைவர் விஜய்யிடம்  இருந்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வரவில்லை எனக் கூறி இருந்த நிலையில் அதற்கு பதில் அளிக்கும் வகையில் தவெக துணை பொதுச்செயலாளர் சி.டி.நிர்மல் குமார் இந்த கருத்தை தெரிவித்துள்ளார்.  

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.