பட்டியலின மாணவர்கள் மீதான தாக்குதல் சம்பவத்தை குறிப்பிட்டு, மாநிலத்தில் சட்டம்- ஒழுங்கு சீர்கெட்டு விட்டதாக எதிர் கட்சித் தலைவரும், ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் தலைவருமான ஜெகன் மோகன் ரெட்டி குற்றம் சாட்டியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
ஆந்திராவில் பட்டியலின மாணவர்களுக்கு எந்த ஒரு பாதுகாப்பும் இல்லை. மாநிலத்தில் சட்டம்- ஒழுங்கு கேள்விக்குறியாகிவிட்டது. பட்டியல் இன சமூக மாணவர்கள் மீதான தாக்குதல் ஆந்திராவில் அதிகரித்து விட்டது. போலீஸ் இயந்திரம் செயலிழந்துவிட்டதையே இது உணர்த்துகிறது. சமூகத்தில் பலவீனமான பிரிவினருக்கும் போதிய பாதுகாப்பு இல்லை.
அநீதிக்கு எதிராக பட்டியல் இன மக்கள் தங்களது குரலை எழுப்ப முயன்றால் உடனடியாக நசுக்கப்படுகின்றனர். ஆளுங்கட்சிக்கு ஆதரவாக போலீஸ் இயந்திரம் செயல்படுவதால், இது போன்ற சம்பவங்கள் ஆந்திராவில் அதிகரித்து காணப்படுகின்றன. மேலும் பாதிக்கப்பட்டவர்கள் காவல் நிலையத்தை அணுகினால், வழக்குப் பதிவு செய்யாமல் அவர்களை திருப்பி அனுப்பும் பழக்கம் ஆந்திராவில் வழக்கமாகிவிட்டது.
திருப்பதியில் பட்டியலின மாணவர் தாக்கப்பட்ட சம்பவம் காவல் துறையின் தோல்வி மட்டுமல்ல. இந்த விவகாரத்தில் காவல்துறை வழக்குப் பதிவு செய்யாமல் இழுத்தடிக்க அரசியல் குறுக்கீடும் இருக்கிறது. ஆகையால் இது தொடர்பாக போலீசார் முறையான வழக்கு பதிவு செய்து, தவறு செய்த மாணவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பாதிக்கப்பட்ட பட்டியல் இன மாணவர்களுக்கு நீதி நிலைநாட்டப்பட வேண்டும் என அந்த அறிக்கையில் ஆந்திர பிரதேச முன்னாள் முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி வலியுறுத்தியுள்ளார்.