இனி காமெடியனாக நடிப்பேனா மாட்டேனா என்பது… மனம் திறந்த சூரி…
Tamil Minutes May 20, 2025 06:48 AM

சூரி தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகர் ஆவார். ஆரம்பத்தில் பின்னணியில் கூட்டத்தோடு கூட்டமாக நடிக்க ஆரம்பித்த சூரி இன்று பலரும் பாராட்டப்படும் நடிகராக இருக்கிறார். மதுரையில் பிறந்து வளர்ந்த இவர் 1997 ஆம் ஆண்டு சென்னைக்கு வந்து சினிமாவில் பின்னணியில் நடித்துக் கொண்டிருந்தார். தனது வயிற்று பிழைப்புக்காக சிறு சிறு வேலைகளை செய்து வந்தார். அவ்வப்போது நாடகங்களிலும் நடித்து வந்தார் சூரி.

2009 ஆம் ஆண்டு வெண்ணிலா கபடி குழு திரைப்படத்தில் பரோட்டா சாப்பிடும் போட்டியில் நடித்து அந்த காட்சி பிரபலமானதால் பரோட்டா சூரி என்று பலராலும் அழைக்கப்பட்டார். இந்த படம் அவருக்கு திருப்புமுனையாக அமைந்தது. தொடர்ந்து நான் மகான் அல்ல, களவாணி, வேலாயுதம், வாகை சூடவா, மனம் கொத்தி பறவை, சுந்தரபாண்டியன் போன்ற பல முன்னணி நடிகர்கள் திரைப்படத்தில் நாயகனுக்கு நண்பனாக நகைச்சுவை கதாபாத்திரத்தில் தனது எதார்த்தமான நகைச்சுவையை வெளிப்படுத்தி பிரபலமானார் சூரி.

நகைச்சுவை நடிகராக இருந்த சூரியை வெற்றிமாறன் தனது விடுதலை படத்தின் மூலம் நாயனாக அறிமுகம் செய்தார். இந்த திரைப்படம் இரண்டு பாகங்களில் வந்து அவருக்கு பேரும் புகழையும் பெற்று தந்தது. அதைத் தொடர்ந்து கருடன், கொட்டுக்காளி போன்ற திரைப்படங்களில் நாயகனாக நடித்தார் சூரி. அவையெல்லாம் மக்களிடம் நல்ல வரவேற்பை பெறவே தொடர்ந்து பல திரைப்படங்களில் நாயகனாக கமிட் ஆகி பிஸியான நடிகராக இருந்து வருகிறார் சூரி. இவர் நடித்த மாமன் திரைப்படம் வெளியாகி நல்ல விமர்சனங்களை பெற்று வருகிறது.

இந்நிலையில் நடிகர் சூரி மாமன் திரைப்படத்திற்கு கிடைக்கும் வரவேற்பை தமிழக முழுவதும் உள்ள தியேட்டர்களில் நேரடியாக சென்று மக்களை சந்தித்து பேசி வருகிறார். அப்போது பத்திரிகையாளர்கள் சூரி அவர்களிடம் இனி காமெடியனாக நடிபீர்களா என்று கேட்டனர். அதற்கு பதிலளித்த சூரி, கைவசம் நடிகனாக நடிக்க பல கதைகள் உள்ளது, அதில் கவனம் செலுத்த உள்ளேன் அதனால் இனி காமெடியனாக நடிப்பதாக இல்லை என்று கூறியிருக்கிறார் சூரி.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.