%name%
— ஆர். வி. ஆர்
ப. சிதம்பரம் ஒரு நெடுநாள் காங்கிரஸ் தலைவர், அரசியல் புத்திசாலி, கெட்டிக்கார வக்கீல். அரசியலில் தரை தட்டாமல் பறப்பதும் உயர்வதும் மிதப்பதும் அவருக்குக் கைவந்த கலை.
சமீபத்தில் ஒரு புத்தக வெளியீட்டு விழாவில் பேசிய அவர் இரண்டு விஷயங்கள் சொன்னார்.
ஒன்று: “இண்டி கூட்டணி இன்னமும் ஒன்றிணைந்து இருப்பதாக இந்தப் புத்தகத்தின் இரு ஆசிரியர்களில் ஒருவர் சொல்கிறார். ஆனால் எனக்குச் சந்தேகமாக இருக்கிறது.”
இரண்டு: “பாஜக மாதிரி வலிமையாக, அசைக்க முடியாதபடி அமைக்கப் பட்ட (formidably organised) ஒரு அரசியல் கட்சி வேறெதுவும் இல்லை. இதை எனது அனுபவத்திலும் சரித்திரம் படித்ததன் வாயிலாகவும் நான் சொல்கிறேன்.”
இந்த இரண்டு விஷயங்களைச் சிதம்பரம் தெளிவாகச் சொன்னாலும், அவை அவர் மூலமாகப் பொதுவெளியில் தெரிவிக்கப் படுவது அதிர்ச்சி தரலாம், கட்சிக்குள் அவரே கேள்வி கேட்கப் படலாம் என்பதால், தனது பேச்சிலேயே சில ‘ஷாக் அப்சார்பர்’ வார்த்தைகளையும் சேர்த்து அவர் பேசி இருந்தார். என்ன இருந்தாலும், சிதம்பரமே சொன்னதால் அந்த இரண்டு விஷயங்களின் உண்மைத் தன்மைக்கு 200 சதவிகித உடனடி கேரண்டி உண்டு.
இண்டி கூட்டணியின் பல்வேறு கட்சிகளிடையே ‘நம்மில் யார் அடுத்த பிரதமர்?’ என்ற உள் போட்டி இருப்பதால், அந்தக் கூட்டணி கரைந்து கிடக்கிறது. அது ஊரறிந்தது. பாஜக-வின் வலிமை பற்றிச் சிதம்பரம் சொன்னதை மட்டும் உன்னிப்பாகப் பார்க்கலாம்.
ஒரு அமைப்பு அல்லது அரசியல் கட்சியின் வலிமை அதை வழிநடத்தும் மனிதர்களின் தலைமைப் பண்புகளிலிருந்து, அவர்களின் மதியூகத்திலிருந்து, ஆரம்பிக்கிறது – அங்குதான் பெரிதும் தங்கி இருக்கிறது.
காங்கிரஸ் மாதிரி சுயநலம் மிக்க தலைவர்கள், ஆட்சியில் முறைகேடுகளுக்கு வழிசெய்து கொடுக்கும் தலைவர்கள், குடும்பவழித் தலைமையை வளர்க்கும் தலைவர்கள், நிறைந்த கட்சி ஒரு ஜனநாயகத்தில் வலிமையான கட்சியாக நீடிக்க முடியாது. தில்லுமுல்லுகள் சில காலம் அவர்களின் கட்சியை உயர்த்தி வைத்திருக்கும் – அதாவது மக்களின் அறியாமை நீடிக்கும் காலம் வரை. மக்கள் விழித்துக் கொள்ளாத நிலையில், எந்த அரசியல் கட்சி போட்டிக் கட்சிகளை விடக் கில்லாடியாக அரசியல் நாடகங்கள் நடத்துமோ அது வலிமை பெறும் – தமிழகத்தில் திமுக மாதிரி.
சரி, பாஜக வலிமையான கட்சி என்று சிதம்பரம் சொல்கிறாரே, அப்படியானால் இந்தியாவின் பல மாநிலங்களின் அரசியல் களத்தில் அக்கட்சி முன்னிலை வகிக்கிறதே, அங்கெல்லாம் சாதாரண மக்களின் அறியாமை அகன்று விட்டதா? அங்கெல்லாம் இனிமேல் மக்களை எளிதில் ஏமாற்றி, ஜிகினா வாக்குறுதிகளை வாரி வழங்கி, ஒரு அரசியல் கட்சி தேர்தலில் வெல்ல முடியாதா? அதெல்லாம் இல்லை.
பாஜக-வின் அரசியல் வெற்றி ஏன் பிரமிக்கத் தக்கது என்றால், அந்தக் கட்சி மக்களின் அறியாமையைத் துஷ்பிரயோகம் செய்யாமல் வலிமை பெற்றிருக்கிறது. காங்கிரஸ் தலைவர் சிதம்பரத்தால், அந்த வழியில் பாஜக பெற்ற தேர்தல் வெற்றிகளையும் அதன் வலிமையையும் நினைத்தே பார்த்திருக்க முடியாது. இருந்தாலும் பாஜக-வின் வலிமையை உணர்ந்து அதைப் பொதுவெளியிலும் ஒப்புக் கொண்டுவிட்டார் – ஆள் ஒரு வினாடி அசந்திருந்தாலும் இருக்கலாம்!
அகில இந்திய அளவில், நரேந்திர மோடியின் தலைமையில், பாஜக படிப்படியாக வலிமை பெறும் போது பிற அரசியல் கட்சிகள் ஒன்றுக்கொன்று போட்டி போட்டு சாதாரண மக்களின் ஏழ்மையை, இயலாமையை, அறியாமையை, துஷ்பிரயோகம் செய்து குயுக்தி அரசியல் செய்து வருகின்றன. இந்திரா காந்தி காலம் தொடங்கி இன்று வரையிலான காங்கிரஸ் கட்சியும் அதில் அடக்கம். பாஜக அந்த வழியில் செல்லாமல் போட்டிக் கட்சிகளைத் தாண்டி அதிக மக்கள் செல்வாக்கைப் பெற்றுவிட்டது. 2014, 2019, 2024 ஆகிய மூன்று லோக் சபா தேர்தல்களிலும் கூட்டணிக் கட்சிகளோடு சேர்ந்து வெற்றி பெற்று மத்தியில் மோடி தலைமையில் ஆட்சி அமைத்தது. இது எப்படிச் சாத்தியம் ஆனது?
தன்னலம், தன் குடும்ப நலன், ஆகிய நோக்கங்களைக் கொண்டு, அரசியலில் கவர்ச்சி வார்த்தைகள் பேசி, ஏமாற்று வேலைகள் செய்து, பொய்யான தேர்தல் வாக்குறுதிகள் அளித்து, மற்ற அரசியல் கட்சிகள் இயங்கி வருகின்றன. சமீப காலம் வரை இவற்றில் ஒரு கட்சியை அல்லது ஒரு கூட்டணியைத் தேர்ந்தெடுத்து ஆட்சியில் அமர்த்துவதை விட சாதாரண மக்களுக்கு வேறு வழி இல்லாமல் போனது – மத்தியிலும் மாநிலங்களிலும். இன்னும் சாதாரண மக்களின் அறியாமை அவர்களுக்கு ஒரு விலங்காக இருக்கிறது.
பாஜக மாறுதலாகச் செயல் படுகிறது. தனது நேர்மையான ஆட்சியின் மூலம் சாதாரண மக்களுக்கு அசாத்திய நன்மைகள் செய்து கொடுத்து, அவர்கள் மனதில் இடம் பிடித்துத் தனது மக்கள் செல்வாக்கைக் கூட்டிக் கொள்கிறது பாஜக. அதன் மூலம் அந்தக் கட்சியின் வலிமையும் அதிகரிக்கிறது. இதைப் பெரிய அளவில் செய்து காட்டியது, நரேந்திர மோடி. இது நடந்தது, பன்னிரண்டரை ஆண்டுகள் (அக். 2001 முதல் மே 2014 வரை) அவர் தொடர்ச்சியாக குஜராத் மாநிலத்தின் முதல் அமைச்சராக இருந்த போது.
பின்னர் 2014-ல் இருந்து இன்றுவரை மோடி இந்தியாவின் பிரதமராக இருக்கையில் பாஜக-வின் வலிமை மேலும் கூடி வருகிறது. மோடியின் தனிப்பட்ட மனிதப் பண்புகளும் குணாதிசயமும் பாஜக-வின் வலிமைக்கு முக்கிய காரணங்கள்.
நிர்மலா சீதாராமன் பாஜக-வில் சேர்ந்த 6 ஆண்டுகளில் மத்திய மந்திரிசபையில் சேர்க்கப் பட்டார். ஜெய்சங்கர் மத்திய மந்திரிசபையில் வெளிவிவகார அமைச்சரான அடுத்த மாதம்தான் பாஜக-வில் சேர்ந்தார். அண்ணாமலை கட்சியில் சேர்ந்த பதினோரு மாதங்களில் தமிழக மாநிலத் தலைவர் ஆனார்.
திறமைசாலிகள் எங்கிருந்தாலும், அவர்கள் நீண்ட நாள் கட்சியில் உறுப்பினராக இல்லாவிட்டாலும், நாட்டு நலனையும் கட்சி நலனையும் முன்னிட்டு அவர்களை மத்திய மந்திரிகள் ஆக்கியது, மாநிலத் தலைவர் ஆகியது, மோடி. சோனியா காந்தியும் ராகுல் காந்தியும் கோலோச்சும் காங்கிரஸ் கட்சியில், அந்தக் கட்சி தலைமை ஏற்கும் ஆட்சியில், இதை எண்ணிப் பார்க்க முடியுமா?
நாட்டு நலனை நெஞ்சில் நிறுத்தி, அதற்காகத் தனது உடல், பொருள், ஆவி அனைத்தையும் வழங்குகிறார் மோடி. பொதுமக்களைச் சந்திக்கும் போது பெரும் பணிவை வெளிப்படுத்துகிறார். அதோடு, சாதாரண மக்களின் அன்றாட வாழ்வைத் தொடும் பல சவுகரியங்களை ஒவ்வொன்றாக அரசு மூலமாக ஏற்படுத்திக் கொடுக்கிறார்.
சாதாரண மக்கள் எளிதில் நேரடியாக உணர முடியாத ஒரு சக்தியும் மோடிக்கு உண்டு: குயுக்தியான எதிர்க் கட்சிகளை வீழ்த்த, அவர்களை விட இரண்டு மடங்கு சாமர்த்தியத்துடன் அரசியல் செய்கிறார். இதில் அமித் ஷா மோடியின் தளபதியாக இருப்பது மோடிக்கு யானை பலம்.
மோடியைப் போல் ஒரு உன்னதத் தலைவருடன் பணி செய்வது தங்களின் பாக்கியம் என்று கருதி, அதனால் உற்சாகமும் உத்வேகமும் கூடி, அவரது அமைச்சரவை சகாக்கள் வேலை செய்து சாதனைகள் புரிகிறார்கள். அதனாலும் பாஜக பெரும் வலிமை கொள்கிறது. வார்த்தைகளால் எளிதில் முழுவதும் விளக்க முடியாத மோடியின் பெருமை அந்த வலிமையின் மையம்.
சரி, கெட்டிக்கார சிதம்பரத்திற்கு பாஜக-வின் வலிமை மட்டும் தான் தெரியும், அதிலுள்ள மோடியின் பெரும் பங்கு தெரியாதா? தெரியும். ஆனால் மோடியின் தனிப்பட்ட பெருமையையும் பொதுவில் எடுத்துச் சொல்லி, ராகுல் காந்தியின் சீற்றத்துக்கு ஆளாகி நஷ்டப் படும் அளவுக்குச் சிதம்பரம் அப்பாவியோ அசடோ அல்லவே!
Author: R. Veera Raghavan – Advocate, Chennai
veera.rvr@gmail.com
https://rvr-india.blogspot.com
News First Appeared in