அவையெல்லாம் உயர்வானவை அல்ல… அரசமைப்பு சட்டம் தான் உயர்ந்தது… தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய்…!!!
SeithiSolai Tamil May 20, 2025 02:48 AM

உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக இருந்த சஞ்சீவ் கன்னானின் பதவி காலம் 13-ம் தேதி நிறைவடைந்தது. இதையடுத்து அவர் ஓய்வு பெற்றார். இந்தியாவின் 52 வது தலைமை நீதிபதியாக நீதிபதி பூசன் ராமகிருஷ்ண கவாய் பதவியேற்றுக்கொண்டார். அவருக்கு பாராட்டு விழா நடைபெற்றது. இதில் பங்கேற்று பேசிய நீதிபதி பி.ஆர் கவாய் நாடு வலுப்பட்டு உள்ளது, மட்டுமின்றி சமூக ரீதியாகவும் பொருளாதார ரீதியாகவும் வளர்ச்சி அடைந்துள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது.

நீதித்துறையோ, அரசோ, நாடாளுமன்றமோ உயர்ந்தது அல்ல. இந்தியாவின் அரசமைப்புச் சட்டமே உயர்ந்தது. அது 3 தூண்களும் அரசமைப்புச் சட்டத்தின் படி செயல்பட வேண்டும். நாட்டின் அடித்தளம் வலுவாக இருக்க வேண்டும். அரசியலமைப்புச் சட்டத்தின் 3 தூண்களும் சரிசமமானவை. அவை மூன்றும் பரஸ்பரம் மரியாதை அளித்து செயல்பட வேண்டும் என்று தெரிவித்தார். இந்நிலையில் தன்னை வரவேற்க மாநில தலைமைச் செயலாளர், காவல்துறை ஆணையர் ஆகியோர் வரவில்லை என்று நீதிபதி கவாய் தெரிவித்திருந்தார்.

இதுகுறித்து விசிக எம்.பி ரவிக்குமார் தனது எக்ஸ் பக்கத்தில் கூறியதாவது, மாண்பமை உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி அவமதிக்கப்பட்டாரா? தலைமை நீதிபதி கவாய் அவர்கள் மும்பையில் இன்று தனக்கு அளிக்கப்பட்ட வரவேற்பு நிகழ்வில் பங்கேற்றுப் பேசும்போது வழக்கமான அரசாங்க மரபு ஒழுங்குகளில் ( protocol) தனக்கு நம்பிக்கை இல்லை எனினும் “ அரசியலமைப்பின் அங்கங்கள் ஒவ்வொன்றும் மற்ற அங்கங்களுக்கு பரஸ்பர மரியாதை செலுத்த வேண்டும். இந்த மாநிலத்தின் மகன், நாட்டின் தலைமை நீதிபதியாகி முதல் முறையாக மகாராஷ்டிரா வரும்போது, மாநிலத்தின் தலைமைச் செயலாளர், காவல்துறை ஆணையர் முதலானவர்கள் அந்த நிகழ்வில் கலந்து கொள்ள விரும்பவில்லையென்றால், அதை அவர்களின் அறிவார்ந்த சிந்தனைக்கே விட்டுவிடுகிறேன்” என்று குறிப்பிட்டிருக்கிறார்.

“ இத்தகைய சிறிய பிரச்சனைகளில் நான் கவனம் செலுத்த விரும்பவில்லை. இருந்தாலும் இதை சுட்டிக்காட்டத் தோன்றியது” என அவர் தெரிவித்துள்ளார். மாண்பமை தலைமை நீதிபதியின் நிகழ்ச்சியைப் புறக்கணித்தது மகாராஷ்டிர மாநில தலைமைச் செயலாளர், காவல் ஆணையர் ஆகியோரின் தனிப்பட்ட முடிவா ? அல்லது மகாராஷ்டிர மாநில அரசு அவர்கள் அப்படி அவமரியாதை செய்ததை ஆதரிக்கிறதா? என்பதை மகாராஷ்டிர மாநில அரசு விளக்கினால்தான் நாட்டுக்குத் தெரியும் என்று கூறினார்.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.