சட்டவிரோத ஊடுருவல்காரர்களை வெளியேற்ற தமிழக அரசு நடவடிக்கை – உடனடித் தேவை!
Dhinasari Tamil May 20, 2025 02:48 AM

%name%

சட்டவிரோதமாக ஊடுருவல்காரர்களை வெளியேற்ற தமிழக அரசு தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் -என்று, இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சி. சுப்பிரமணியம் அறிக்கை வெளியிட்டுள்ளார். அவரது அறிக்கை:

தமிழகத்தில் தொடர்ந்து சட்டவிரோதமாக வெளிநாட்டினர் ஊடுருவி வருகின்றனர். குறிப்பாக பங்களாதேஷ் போன்ற வெளிநாட்டினர் தமிழகத்தில் பல்வேறு இடங்களில் சட்டவிரோதமான தங்கியுள்ளனர். இவர்களால் தமிழகத்தினுடைய உள்நாட்டுப் பாதுகாப்பு கடுமையாக பாதிக்கும் அபாயம் உள்ளது.

உதாரணமாக கடந்த காலங்களில் பல சட்டவிரோத செயல்களில், போதை மருந்து கடத்தல் சம்பவங்களில் இவர்கள் ஈடுபட்டுள்ளார்கள். குறிப்பாக பங்களாதேசை சேர்ந்தவர்கள் திருப்பூர், கோயம்புத்தூர், ஈரோடு, சேலம், சென்னை, தூத்துக்குடி போன்ற பகுதிகளில் சட்டவிரோதமாக போலி பாஸ்போர்ட், ஆதார் முதலியன தயார் செய்து இருந்து வருகின்றார்கள்.

சில நாட்களுக்கு முன்பு திருப்பூரில் மிகப் பெரிய நகைக்கடையில் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் பங்களாதேசத்தை சேர்ந்தவர்கள். அதேபோல் அவினாசியில் பூர்ணா தேவி என்ற பெண்ணை வேலை செய்யும் இடத்தில் காதலித்து பங்களாதேஷுக்கு அழைத்து சென்று திருமணம் செய்து கொண்டார்கள். அவர்களுக்கு எந்தவித பாஸ்போர்ட், விசா கிடையாது.

பின்பு அந்த பெண் மர்மமான முறையில் மரணமடைந்து விட்டாள். பூர்ணா தேவி உடல் சொந்த ஊருக்கு கொண்டு வர முடியவில்லை. அதேபோல திருப்பூர் மங்கலம் ரோட்டில் ஒரு மளிகை கடையில் வேலை செய்த பங்களாதேசை சேர்ந்த முசுருதீன் என்ற பயங்கரவாதி கைது செய்யப்பட்டார்.

சமீபகாலமாக கோயமுத்தூர் – தொண்டாமுத்தூர் பகுதியில் நூற்றுக்கணக்கான ரோஹிங்கியா, பங்களாதேஷிகள் ஊடுருவி வருகின்றனர்.

சில நாட்களுக்கு முன் மாண்புமிகு உயர்நீதிமன்ற விசாரணையில் 48,000 பங்களாதேஷிகள் தமிழகத்தில் உள்ளதாக மாண்புமிகு உயர்நீதிமன்ற நீதிபதி தண்டபாணி அவர்கள் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து ஈரோடு, பெருந்துறை,;திருப்பூர் பகுதியில் காவல்துறையினர் பங்களாதேசை சேர்ந்தவர்களை கைது செய்து சிறையில் அடைக்கிறார்கள். இதற்கு நிரந்தர தீர்வு வேண்டும். சட்ட விரோதமாக தமிழகத்தில் தங்கியுள்ள பங்களாதேஷிகளை கண்டுபிடித்து வெளியேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தமிழகத்தினைப் பாதுகாக்க வேண்டும். சாதாரண சட்டம்-ஒழுங்கு காவல்துறையினர் ரோந்து செல்லும் பொழுது விசாரித்து சட்டவிரோதமாக ஊடுருவியவர்களை கண்டுபிடிக்கின்றனர். ஆனால் இது நிரந்தரத் தீர்வாகாது. முழுமையான நடவடிக்கை ஆகாது.

பல்வேறு இடங்களில் தொழிலாளிகளைப் போல, வியாபாரிகளைப் போல ஊடுருவி வருகின்றனர். இவர்களை பெருக விட்டால் அசாம், மேற்கு வங்காளம் மாநிலங்களைப் போல நமது மாநிலத்திலும் பொருளாதாரத்திற்கும் வியாபார வர்த்தகம், பொது பாதுகாப்பிற்கும் மிகப் பெரிய அச்சுறுத்தல் ஏற்படும்.

இதற்காக காவல்துறையில் தனியாக ஒரு துறை ஏற்படுத்தி, சட்டவிரோதமாக தங்கியுள்ளவர்களை கைது செய்து நாடு கடத்துவதற்கு அந்த அதிகாரிகளுக்கு பயிற்சி கொடுக்க வேண்டும். இப்பொழுது சட்டம் ஒழுங்கு போலீசார் இவர்களை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் செய்து ஒவ்வொரு முறையும் சென்னை புழல் சிறையில் அடைத்து விசாரணை நடத்த பொழுது கைது செய்யப்பட்ட பங்களாதேஷ் கைதிகள் ஜாமீனில் வெளியே வந்து தலைமறைவாகிவிட்டார்.

இதை விசாரிக்கும் போலீசாருக்கு உள்ளூரில் வழக்கு விசாரணைகள், அன்றாட பணிகள் பாதிக்கப்படுகின்றன.

தமிழகத்தின் பாதுகாப்பிற்கு முதலிடம் கொடுக்க வேண்டும். எனவே தமிழக காவல்துறையில் இதனை தடுக்க சிறப்பு புலனாய்வு அமைப்பு ஒன்றை ஏற்படுத்திட வேண்டும். இந்த வெளிநாட்டு ஊடுருவக்காரர்களை கண்டுபிடித்து நாடு கடத்த வேண்டும் என்று இந்து முன்னணி சார்பில் கேட்டுக்கொள்கிறோம்.

News First Appeared in

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.