காவல் நிலைய ஏட்டு ஒருவர் ரயில் நிலையம் அருகே தீக்குளித்து தற்கொலைச் செய்துக் கொண்ட சம்பவம் சென்னையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை தரமணி காவல் நிலையத்தில் ஏட்டாக பணிபுரிந்து வந்தவர் செந்தில் . 48 வயதாகும் இவர் பரங்கிமலையில் உள்ள காவலர் குடியிருப்பில் குடும்பத்துடன் வசித்து வந்தார். இந்நிலையில் நேற்று முன் தினம், சாதாரண உடையில் கிண்டி மடுவின்கரை மேம்பாலத்தில் காரில் சென்ற போது முன்னால் சென்றுக் கொண்டிருந்த ஒரு பைக் மீது மோதி விட்டார்.
அந்த பைக் மேம்பாலத்தில் இருந்து விழுந்துள்ளது. இந்த விபத்தில் அந்த பைக்கை ஓட்டிவந்த சென்னை ஈக்காடுதாங்கல் பகுதியைச் சேர்ந்த முருகேசன் (55) என்பவர் படுகாயம் அடைந்தார். காயம் அடைந்தவரை மீட்டு உடனடியாக மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த விபத்துக்கு காரணமான காரை ஓட்டிவந்த ஏட்டு செந்திலை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர்.அப்போது அவர் குடிபோதையில் இருந்துள்ளதாக தெரிகிறது. இதையடுத்து அவரிடம் விசாரணை நடத்தி விட்டு வீட்டுக்கு அனுப்பி வைத்துள்ளதாக தெரிகிறது.
இந்நிலையில், நேற்று காலை தரமணி ரயில் நிலையம் அருகே, அவர் தான் கொண்டு வந்திருந்த மண்ணெண்ணெயை, திடீரென உடலில் ஊற்றி தீ வைத்துக் கொண்டார். பின்னர், கத்தி கூச்சலிட்டதால் அக்கம்பக்கத்தினர் ஓடி சென்று, அவரை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்ல ஏற்பாடு செய்வதனர். அதற்குள் ஏட்டு செந்தில் பரிதாபமாக உயிரிழந்தார். இதையடுத்து அவரது உடலை பிரேத பரிசோதனைக்கு ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.