மதுரை மாவட்டம், நாகமலை புதுக்கோட்டை பகுதியில் வசித்து வருபவர் கார்த்திக் ராஜா. இவரது மனைவி 28 வயது திவ்யபிரியா . பல் மருத்துவராக பணிபுரிந்து வரும் இவர், அதிமுக முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசனின் உறவினர்.
கார்த்திக் ராஜா, திவ்யபிரியா, உறவினர்கள் பரமேஸ்வரி (44), வளர்மதி (48) ஆகியோர் நீலகிரி மாவட்டம், உதகைக்கு காரில் சுற்றுலா சென்றிருந்தனர். அங்கு தங்கி பல்வேறு இடங்களைக் கண்டுகளித்துவிட்டு உதகையில் இருந்து கார் மூலம் மாலை மதுரை திரும்பினர். காரை மதுரையைச் சேர்ந்த பார்த்திபன் ஓட்டிவந்தார்.
மேட்டுப்பாளையம் - குன்னூர் மலைப் பாதையில் கல்லாறு அருகே முதலாவது கொண்டை ஊசி வளைவு அருகே வந்த போது, கார் திடீரென பிரேக் பிடிக்கவில்லை. சாலையோரத்தில் இருந்த மரத்தில் மோதி நின்றது. இந்த விபத்தில் படுகாயமடைந்த திவ்யபிரியா, பரமேஸ்வரி, வளர்மதி ஆகியோரை அப்பகுதி மக்கள் உதவியுடன் கார்த்திக் ராஜா, ஓட்டுநர் பார்த்திபன் ஆகியோர் மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
அங்கு திவ்யபிரியாவை பரிசோதனை செய்த மருத்துவர்கள், அவர் ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாக கூறிவிட்டனர். பரமேஸ்வரி, வளர்மதி ஆகியோருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது. இச்சம்பவம் குறித்து போலீஸார் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.