உஷார்... நெல்லை எக்ஸ்பிரஸ் ரயிலில் பயணியிடம் 30 சவரன் நகை திருட்டு!
Dinamaalai May 23, 2025 08:48 PM

தாம்பரம் ரயில் நிலையத்தில் நெல்லை எக்ஸ்பிரஸ் ரயிலில் பயணியிடம் 30 பவுன் நகையை மர்மநபர்கள் திருடிச் சென்று விட்டனர்.

சென்னையை அடுத்த சோழிங்கநல்லூர் நியூ குமரன் நகரைச் சேர்ந்தவர் தளவாய். அதே பகுதியில் மளிகை கடை நடத்தி வருகிறார். இவரது மனைவி லட்சுமி. இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர். இவர்கள் 4 பேரும் கடந்த சில நாட்களுக்கு முன்பு நெல்லை மாவட்டம் திசையன்விளையில் உள்ள உறவினர் வீட்டுக்கு சென்றுவிட்டு நெல்லை எக்ஸ்பிரஸ் ரயில் மூலம் நேற்று காலை தாம்பரம் ரயில் நிலையம் வந்திறங்கினர்.

முன்பதிவு இல்லாத பெட்டியில் பயணம் செய்ததால் வீட்டில் இருந்து புறப்படும்போதே நகைகளை கழட்டி ஒரு பையில் வைத்து, அந்த பைக்கு பூட்டு போட்டு ரயிலில் கொண்டு வந்தனர். தாம்பரம் ரயில் நிலையத்தில் இருந்து சோழிங்கநல்லூருக்கு காரில் சென்றனர். அப்போது நகை வைத்திருந்த பையை பார்த்தபோது மர்மநபர்கள் பிளேடால் பையை கிழித்து, அதில் வைத்திருந்த 30 பவுன் நகையை திருடிச் சென்று இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

இதுபற்றி தாம்பரம் ரயில்வே காவல் நிலையத்தில் புகார் செய்தனர். ஆனால் முதலில் புகாரை வாங்க மறுத்த ரயில்வே போலீசார், இதுபற்றி சோழிங்கநல்லூரில் புகார் அளிக்க சொன்னதாகவும், இதனால் நகையை இழந்ததுடன், புகார் கொடுக்க முடியாமல் தளவாய் குடும்பத்தினர் அலைந்தனர். பின்னர் ரயிலில்தான் நகை கொள்ளை போனதாக கூறியதையடுத்து தாம்பரம் ரயில்வே போலீசார் ரயில் நிலையத்தில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

ரயிலில் முன்பதிவு இல்லாத பெட்டியில் கழுத்தில் நகை அணிந்து பயணம் செய்தால் மர்மநபர்கள் நகையை பறித்து விடுவார்கள் என பயந்து அனைத்தையும் கழட்டி பையில் வைத்து பாதுகாப்பாக எடுத்து வரும்போது அதையும் கொள்ளையர்கள் திருடிச் சென்ற சம்பவம் ரயில் பயணிகள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.