ஈரோடு மாவட்டத்திலிருந்து நாமக்கல் வழியாக துறையூருக்கு அரசுப் பேருந்து இயக்கப்பட்டு வருகிறது. வழக்கம்போல் இன்று மே 23ம் தேதி வெள்ளிக்கிழமை காலை 9 மணிக்கு ஈரோட்டில் புறப்பட்ட அரசுப் பேருந்தை நவீன்ராஜ் ஓட்டி வந்தார்.இந்த பேருந்தில் 40க்கும் மேற்பட்ட பயணிகள் இருந்தனர். மதுபோதையில் இருந்த ஓட்டுநர் நவீன்ராஜ், பேருந்தை கட்டுப்பாடு இல்லாமல் இயக்கியதைக் கண்டு பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர். நடத்துநர் கண்டித்த போதும் அவர் கேட்கவில்லை.
நாமக்கல் அருகே எர்ணாபுரம் பகுதியில் பேருந்து வந்த போது, பயணிகள் அனைவரும் ஓட்டுநரைத் தாக்க முயன்றதையடுத்து, சாலையின் நடுவில் உள்ள சுவர் மீது மோதி பேருந்தை நிறுத்தினார். இதனையடுத்து, நல்லிபாளையம் காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
சம்பவ இடத்துக்கு விரைந்த போலீஸார், ஓட்டுநரைப் பிடித்து மருத்துவப் பரிசோதனைக்காக அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.மாற்று பேருந்து மூலம் பயணிகள் நாமக்கலுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அரசுப் போக்குவரத்துக் கழக நாமக்கல் பணிமனை கோட்ட மேலாளர் இச்சம்பவம் குறித்து ஓட்டுனர் நவீன் ராஜிடம் விசாரணை மேற்கொண்டுள்ளார்.