இஸ்ரேலின் புகழ்பெற்ற உளவாளி எலி கோஹன் மீண்டும் செய்திகளில் இடம்பிடித்துள்ளார்.
இஸ்ரேலிய அரசாங்கம், அதன் உளவுத்துறை அமைப்பான மொசாட், ஒரு நட்பு நாட்டின் உளவுத்துறை முகமையுடன் இணைந்து ஒரு ரகசிய மற்றும் சிக்கலான நடவடிக்கையை (Covert operation) மேற்கொண்டதாகக் கூறுகிறது.
இந்த நடவடிக்கையின் மூலம், எலி கோஹன் தொடர்பான அதிகாரப்பூர்வ ஆவணங்களை சிரியாவிலிருந்து இஸ்ரேலுக்குக் கொண்டு வர முடிந்தது.
இஸ்ரேலின் கூற்றுப்படி இந்த ரகசிய நடவடிக்கையில், எலி கோஹனின் புகைப்படங்கள் மற்றும் தனிப்பட்ட உடைமைகள் உள்பட சுமார் 2500 ஆவணங்கள் சிரியாவிலிருந்து இஸ்ரேலுக்கு கொண்டு வரப்பட்டுள்ளன.
இந்த ஆவணங்கள் அனைத்தும் இதுவரை சிரியா பாதுகாப்புப் படையினரிடம் இருந்ததாகவும், அவர்கள் அவற்றைத் தனியாக வைத்திருந்ததாகவும் மொசாட் கூறுகிறது.
மே 18, 1965 அன்று சிரியாவில் பொதுமக்கள் முன்னிலையில் எலி கோஹன் தூக்கிலிடப்பட்டார். கோஹனின் முழுப் பெயர் எலியாஹு பென் ஷால் கோஹன்.
அவர் இஸ்ரேலின் மிகவும் துணிச்சலான உளவாளி என்றும் அழைக்கப்படுகிறார். சிரியாவில் எதிரிகளிடையே நான்கு ஆண்டுகள் வாழ்ந்த எலி கோஹனால், அந்நாட்டின் அதிகாரத்தின் வட்டத்திற்குள் ஊடுருவி உயர் மட்டத்தை அடையவும் முடிந்தது.
எலி கோஹன் தொடர்புடைய எந்தெந்த பொருட்கள் கிடைத்துள்ளன?இஸ்ரேலிய பிரதமரின் அதிகாரப்பூர்வ எக்ஸ் கணக்கில் வெளியிடப்பட்டுள்ள புகைப்படங்கள் மற்றும் காணொளியில், எலி கோஹனின் உடைமைகளை, கோஹனின் மனைவி நதியா கோஹனுக்குக் காட்டுகிறார் பெஞ்சமின் நெதன்யாகு.
இதில் எலி கோஹனின் கடைசி உயில் என குறிப்பிடப்படும் ஆவணம், மரண தண்டனைக்கு சற்று முன்பு அவரால் எழுதப்பட்டது.
இந்த ரகசிய நடவடிக்கையின் மூலம் கோஹனின் விசாரணை கோப்புகளிலிருந்து ஆடியோ பதிவுகள் மற்றும் பிற பொருட்களும் மீட்கப்பட்டதாக மொசாட் கூறுகிறது. கோஹனுடன் தொடர்பில் இருந்தவர்கள் குறித்த கோப்புகளும் உள்ளன.
இது தவிர, சிரியாவில் அவரது பணியின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் (இதற்கு முன்பு பார்க்கப்படாதவை) கிடைத்துள்ளன என்றும் கூறப்பட்டுள்ளது. கைப்பற்றப்பட்ட ஆவணங்களில் கோஹன் தனது குடும்பத்தினருக்கு எழுதிய கடிதங்கள் மற்றும் அவர் கைது செய்யப்பட்ட பின்னர் அவரது இல்லத்தில் இருந்து மீட்கப்பட்ட பொருட்களும் அடங்கும்.
மொசாட்டின் கூற்றுப்படி, சிரியாவில் உள்ள கோஹனின் இல்லத்தில் இருந்து மீட்கப்பட்ட குறிப்பேடுகள் மற்றும் டைரிகளில், இஸ்ரேலிய உளவுத்துறை முகமையிடமிருந்து அவர் பெற்ற உளவுத்துறை பணி தொடர்பான வழிமுறைகளும் இருந்தன.
இது தவிர, சிரியாவில் உள்ள கோஹனின் அடுக்குமாடி குடியிருப்பின் சாவிகள், அவரது பாஸ்போர்ட் மற்றும் அவர் பணியின் போது பயன்படுத்திய போலி அடையாள ஆவணங்களும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இந்த ஆவணங்களில் ஒன்று கோஹனின் சொந்த கையெழுத்தில் உள்ளது, அதை அவர் மரண தண்டனைக்கு சற்று முன்பு எழுதினார்.
கோஹனின் மரண தண்டனைக்கான உத்தரவையும் மொசாட் கைப்பற்றியுள்ளது. அதில் டமாஸ்கஸில் உள்ள யூத சமூகத்தின் தலைவரான ரப்பி நிசிம் இண்டிபோவை சந்திக்க அவருக்கு அனுமதி வழங்கப்பட்டது குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த உளவு பணியின் போது கோஹன், அர்ஜென்டினா குடிமகன் கமில் என்ற அடையாளத்தில் வாழ்ந்தார்.
அவர் சிரிய அதிபருக்கு மிகவும் நெருக்கமானவராக மாறினார். ஒரு கட்டத்தில் சிரியாவின் துணை பாதுகாப்பு அமைச்சராக மாறுவதற்கான வாய்ப்பு கூட அவரை நெருங்கி வந்தது.
1967 அரபு-இஸ்ரேலியப் போரில் இஸ்ரேலின் வெற்றியில் கோஹன் சேகரித்த உளவுத் தகவல்கள் முக்கிய பங்கு வகித்ததாகக் கூறப்படுகிறது.
எலி கோஹன் இஸ்ரேலிலோ, சிரியாவிலோ அல்லது அர்ஜென்டினாவிலோ பிறந்தவரல்ல. அவர் 1924ஆம் ஆண்டு எகிப்தின் அலெக்ஸாண்ட்ரியாவில், ஒரு சிரிய-யூத குடும்பத்தில் பிறந்தார்.
அவரது தந்தை 1914ஆம் ஆண்டு சிரியாவின் அலெப்போவிலிருந்து எகிப்தில் குடியேறினார். இஸ்ரேல் நாடு உருவானபோது, எகிப்திலிருந்து பல யூத குடும்பங்கள் வெளியேறத் தொடங்கின.
1949ஆம் ஆண்டில், கோஹனின் பெற்றோரும் மூன்று சகோதரர்களும் அதே முடிவை எடுத்து இஸ்ரேலில் குடியேறினர். ஆனால் எலக்ட்ரானிக்ஸ் படித்துக்கொண்டிருந்த கோஹன், எகிப்திலேயே தங்கி தனது படிப்பைத் தொடர முடிவு செய்தார்.
என்சைக்ளோபீடியா பிரிட்டானிக்காவின் கூற்றுப்படி, அரபு, ஆங்கிலம் மற்றும் பிரெஞ்சு மொழிகளில் அவருக்கு இருந்த சிறந்த புலமை காரணமாக இஸ்ரேலிய உளவுத்துறை அவர் மீது ஆர்வம் காட்டியது.
1955ஆம் ஆண்டு, உளவுப் பயிற்சி பெற இஸ்ரேல் சென்ற அவர், அடுத்த ஆண்டு எகிப்து திரும்பினார். இருப்பினும், சூயஸ் நெருக்கடியைத் தொடர்ந்து எகிப்திலிருந்து பலர் வெளியேற்றப்பட்டனர், அதில் கோஹனும் ஒருவர். பிறகு 1957இல் அவர் இஸ்ரேலுக்கு குடிபெயர்ந்தார்.
இஸ்ரேல் வந்து இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு, ஈராக்கிய-யூதரும், எழுத்தாளர் சாம்மி மைக்கேலின் சகோதரியுமான நதியா மஜ்தாலை மணந்தார். 1960இல் இஸ்ரேலிய உளவுத்துறையில் சேருவதற்கு, முன்பு அவர் மொழிபெயர்ப்பாளராகப் பணியாற்றி வந்தார்.
அடுத்தகட்ட பயிற்சியை முடித்த பிறகு, கோஹன் 1961இல் அர்ஜென்டினா தலைநகரான பியூனஸ் அயர்ஸை அடைந்தார். அங்கு அவர், சிரியா வம்சாவளியைச் சேர்ந்த ஒரு தொழிலதிபர் என்ற அடையாளத்தில் தனது உளவுப் பணியை தொடங்கினார்.
கமில் அமின் தாபெட் என்ற பெயருடன், கோஹன் அர்ஜென்டினாவில் உள்ள சிரியா சமூகத்தினரிடையே பல முக்கிய தொடர்புகளை ஏற்படுத்திக் கொண்டார். வெகு சீக்கிரமாக சிரியா தூதரகத்தின் மூத்த அதிகாரிகளுடன் நட்பாக பழகி, அவர்களின் நம்பிக்கையைப் பெற்றார்.
அவர்களில் சிரியா ராணுவ உயரதிகாரி அமின் அல்-ஹஃபிஸும் ஒருவர். பின்னாளில் அவர் சிரியாவின் அதிபரானார். கோஹன் தனது 'புதிய நண்பர்களுக்கு' சிரியாவுக்கு விரைவில் 'திரும்ப' விரும்புவதாக ஒரு செய்தியை அனுப்பியிருந்தார்.
1962 ஆம் ஆண்டு தலைநகர் டமாஸ்கஸில் குடியேற அவருக்கு வாய்ப்பு கிடைத்தபோது, அர்ஜென்டினாவில் அவருக்கு இருந்த தொடர்புகள் சிரியாவின் அதிகாரப் பாதைகளுக்கான அற்புதமான வாய்ப்பை அளித்தன.
சிரியாவில் தன்னை நிலைநிறுத்திக் கொண்ட உடனேயே, சிரியா ராணுவம் பற்றிய உளவுத்துறை தகவல்களையும் திட்டங்களையும் கோஹன் இஸ்ரேலுக்கு அனுப்பத் தொடங்கினார்.
1963ஆம் ஆண்டு சிரியாவில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டபோது, உளவுத்துறையில் கோஹனின் பணிகள் மிகவும் முக்கியமானதாக மாறியது. சிரியாவில் பாத் கட்சி ஆட்சிக்கு வந்தது, அதன் உறுப்பினர்களில் பலர் கோஹனின் அர்ஜென்டினா வாழ்க்கையின் போது அவருக்கு நண்பர்களாக இருந்தவர்கள்.
இந்த ஆட்சிக் கவிழ்ப்புக்கு அமின் அல்-ஹஃபிஸ் தலைமை தாங்கினார், அவர் அதிபரானார். ஹஃபிஸ், கோஹனை முழுமையாக நம்பினார். ஒரு கட்டத்தில் கோஹனை சிரியாவின் துணைப் பாதுகாப்பு அமைச்சராக்க அவர் முடிவு செய்ததாகக் கூறப்படுகிறது.
கோஹனுக்கு ரகசிய ராணுவ விளக்கக் கூட்டங்களில் கலந்து கொள்ளும் வாய்ப்பு கிடைத்தது மட்டுமல்லாமல், கோலன் குன்றுகள் பகுதியில் உள்ள சிரியா ராணுவத் தளங்களையும் பார்வையிடும் வாய்ப்பும் வழங்கப்பட்டது.
அந்த சமயத்தில் கோலன் குன்றுகள் பகுதி தொடர்பாக சிரியாவிற்கும் இஸ்ரேலுக்கும் இடையே அதிக பதற்றம் நிலவியது.
1967ஆம் ஆண்டு மத்திய கிழக்குப் போரில் இஸ்ரேலிடம் சிரியா தோல்வியடைந்ததற்கு, கோலன் குன்றுகள் தொடர்பாக கோஹன் அனுப்பிய உளவுத் தகவல்களும் முக்கிய காரணம் கூறப்படுகிறது.
இந்த தகவல்கள் காரணமாக, சிரியா வீரர்களின் இருப்பிடத்தைக் கண்டுபிடிப்பதில் இஸ்ரேலுக்கு நிறைய உதவி கிடைத்தது.
யூத டிஜிட்டல் நூலகத்தின் , கோஹனுக்கு உளவுத்துறையில் நிபுணத்துவம் இருந்தபோதிலும், அவர் சில விஷயங்களில் கவனக்குறைவாகவும் இருந்தார்.
இஸ்ரேலில் இருந்த மொசாட் அதிகாரிகள், வானொலி தகவல் பரிமாற்ற முறையில் கவனத்துடன் இருக்குமாறு கோஹனை பலமுறை எச்சரித்துள்ளனர்.
ஒரு நாளைக்கு இரண்டு முறைக்கு மேல் தகவல் பரிமாற்றங்களை செய்ய வேண்டாம் என்றும் அவருக்கு அறிவுறுத்தப்பட்டது. ஆனால் கோஹன் இந்த எச்சரிக்கைகளை மீண்டும் மீண்டும் புறக்கணித்தார், ஒருகட்டத்தில் இந்த கவனக்குறைவு அவரது வீழ்ச்சிக்கு வழிவகுத்தது.
ஜனவரி 1965இல், சிரியா புலனாய்வு அதிகாரிகள் அவரது வானொலி சமிக்ஞைகளை இடைமறித்து, அவர் தகவல்கள் அனுப்புவதை கையும் களவுமாகப் பிடித்தனர். கோஹன் கைது செய்யப்பட்டு, விசாரிக்கப்பட்டு, பின்னர் ராணுவ நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். இறுதியில் அவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது.
கோஹன் மே 18, 1965 அன்று டமாஸ்கஸில் ஒரு பொது இடத்தில் தூக்கிலிடப்பட்டார். அவரது கழுத்தில் 'சிரியாவில் உள்ள அரபு மக்களின் சார்பாக' என்று எழுதப்பட்ட ஒரு பதாகை தொங்க விடப்பட்டது.
ஆரம்பத்தில் அவரது மரண தண்டனையைத் தடுக்க இஸ்ரேல் ஒரு சர்வதேச பிரசாரத்தைத் தொடங்கியது, ஆனால் சிரியா அதற்கு உடன்படவில்லை. கோஹனின் மரணத்திற்குப் பிறகு, அவரது உடலையும் உடமைகளையும் திருப்பித் தருமாறு இஸ்ரேல் பலமுறை கோரியது, ஆனால் சிரியா ஒவ்வொரு முறையும் மறுத்துவிட்டது.
- இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு