சூரியன் இப்போது இயல்பை விட அதிகமாக செயல்படுகிறது. இதன் எதிரொலியாக இந்த ஆண்டு மிகப்பெரிய சூரிய எரிப்பு ஏற்பட்டுள்ளது. இது நாசாவின் சூரிய இயக்கவியல் ஆய்வகத்தால் .
சூரியன் அதிக வீரியத்துடன் செயல்படும் காலகட்டங்களில், சூரியக் காற்று எனப்படும் சூரியனில் இருந்து வரும் மின்னூட்டத் துகள்கள் தொடர்ச்சியாக பூமியை தாக்கி வருகின்றன.
இந்த நிகழ்வு விண்வெளி வானிலை அல்லது சூரிய புயல்கள் என்று அழைக்கப்படுகிறது. இதனால் பூமியில் தொழில்நுட்பம் பாதிக்கப்படலாம், மின்வெட்டுகள் ஏற்படலாம். விண்வெளியில் இருக்கும் விண்வெளி வீரர்களையும் கூட பாதிக்கலாம். ஆனால் தரையில் உள்ள மனிதர்களுக்கு இவை தீங்கு விளைவிப்பதில்லை.
சூரிய எரிப்பு என்றால் என்ன?சூரிய புயல்கள் என்பது, நமது சூரியனின் சுழற்சியின் ஒரு சாதாரண பகுதியாகும். சூரிய எரிப்புகள் மற்றும் கொரோனல் நிறை வெளியேற்றங்கள் (CMEs) போன்ற வடிவில் மிகப்பெரிய வெடிப்புகளை சூரியன் வெளியிடும் போது அவை ஏற்படுகின்றன.
இவை, ஒளி, ஆற்றல் மற்றும் சூரியப் பொருட்களை விண்வெளியில் உமிழ்கின்றன.
சூரிய எரிப்புகள் என்பது மின்காந்த கதிர்வீச்சு ஆகும். அவை சூரியனில் இருந்து ஒளியின் வேகத்தில் பயணித்து எட்டு நிமிடங்களுக்குள் பூமியை அடைந்துவிடுகின்றன.
சூரிய புயல்கள் வெவ்வேறு பலத்துடன் பூமியை அடையலாம்.
சூரியனிலிருந்து வரும் ஆற்றல் வானத்தில் பிரகாசமான வெளிச்சத்தை உருவாக்க முடியும். இது அரோராஸ் என்று அழைக்கப்படுகிறது. இவை, வடக்கு விளக்குகள் அல்லது தெற்கு விளக்குகள் என்றும் அழைக்கப்படுகின்றன.
சூரிய எரிப்புகளும், வெடிப்புகளும் பூமியில் வானொலி தகவல் தொடர்புகள், மின்சார கட்டமைப்புகள் மற்றும் நேவிகேஷன் சிக்னல்களை பாதிக்கலாம் என்று நாசா கூறுகிறது.
2017ஆம் ஆண்டில், சூரியனின் மேற்பரப்பில் இருந்து இரண்டு பெரிய சூரிய எரிப்புகள் வெளிப்பட்டன. அவை ஜிபிஎஸ் அமைப்பின் செயல்பாடுகளில் பாதிப்பை ஏற்படுத்தின.
2011 பிப்ரவரி மாதத்தில், சக்திவாய்ந்த சூரிய எரிப்பு ஒன்றால், சீனா முழுவதும் உள்ள வானொலி தகவல் தொடர்புகள் பாதிக்கப்பட்டன.
1989ஆம் ஆண்டில், சூரிய எரிப்பு ஒன்றினால், கனடாவின் குவிபெக்-ல் ஒன்பது மணிநேர மின் தடை ஏற்பட்டது.
1859ஆம் ஆண்டில் ஏற்பட்ட ஒரு பெரிய சூரிய வெடிப்பு புவி காந்த புயலை ஏற்படுத்தியது. இது, விக்டோரியன் ரயில்வே சிக்னலிங் மற்றும் தந்தி இணைப்புகளில் பாதிப்பை ஏற்படுத்தியது.
அதேபோன்று தற்போதும் மிகப்பெரிய அச்சுறுத்தல் ஏற்படலாம் என்று தெரிகிறது.
லான்காஸ்டர் பல்கலைக்கழகத்தின் ஒரு ஆய்வு, சூரிய புயல் பிரிட்டன் ரயில் நெட்வொர்க்கை சீர்குலைக்கலாம் என்று எச்சரிக்கை விடுத்துள்ளது. இது அரிதானது என்றாலும் அதை எதிர்கொள்ள தயாராக இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
சூரியன் நகரக்கூடிய மின்னூட்டப்பட்ட சூடான வாயுவால் ஆனது. இந்த வாயு நகரும் போது சக்திவாய்ந்த காந்தப்புலத்தை உருவாக்குகிறது.
இந்த காந்தப்புலம் சூரிய சுழற்சி எனப்படும் சுழற்சி ஒன்றின் வழியாக செல்கிறது. இதன் விளைவாக, சூரியனின் மேற்பரப்பில் இயல்பான மற்றும் அசாதரணமான புயல் நடவடிக்கைகள் நடைபெறுகின்றன.
தோரயமாக 11 வருடங்களுக்கு ஒருமுறை, சூரிய சுழற்சியின் உச்சத்தில், சூரியனின் வடக்கு மற்றும் தெற்கு துருவங்களில் உள்ள காந்தப்புலம் தனது இடங்களை மாற்றுகிறது.
சூரிய சுழற்சி 25 எனப்படும் தற்போதைய சுழற்சி டிசம்பர் 2019 இல் தொடங்கியதாக, அமெரிக்க தேசிய பெருங்கடல் மற்றும் வளிமண்டல நிர்வாகம் (NOAA) மற்றும் நாசாவுடன் இணைந்து இயங்கும் சர்வதேச நிபுணர்கள் குழுவினர் கூறுகின்றனர்.
குறைந்தபட்ச சூரிய புள்ளியில் தொடங்கும் சூரிய சுழற்சியின் தொடக்க காலகட்டத்தில், சூரியனில் மிகக் குறைந்த அளவிலேயே சூரிய புள்ளிகள் இருக்கின்றன. இவை, நமது நட்சத்திரத்தின் செயல்பாட்டை விஞ்ஞானிகள் கண்காணிக்க உதவும் கரும்புள்ளிகள் ஆகும்.
சூரியனின் செயல்பாடு அதிகரிக்கும் போது, சூரிய புள்ளிகளின் எண்ணிக்கையும் அதிகரிக்கிறது.
சூரிய சுழற்சியின் நடுப்பகுதி சோலார் மேக்சிமம் (solar maximum) என்று அழைக்கப்படுகிறது, சூரியன் அங்கு இருக்கும்போது, அதில் அதிக சூரிய புள்ளிகள் இருக்கும் என்பதுடன் அதன் காந்த துருவங்கள் இடங்களை மாற்றிக் கொள்ளும்.
சூரியனின் தற்போதைய சுழற்சியின் சோலார் மேக்சிமம் காலம் கடந்த ஆண்டில் சூரியன் அடைந்ததாக நாசா மற்றும் தேசிய பெருங்கடல் மற்றும் வளிமண்டல நிர்வாகம் (NOOA) கூறுகின்றன.
சூரிய புள்ளிகளில் மிகப்பெரிய ஒளி மற்றும் ஆற்றல் வெடிப்புகள் ஏற்படுகின்றன. ஏனெனில் அவை, தங்களது சுற்றுப்புறங்களை விட குளிர்ச்சியாக இருப்பதால் அவை கருமையாகத் தோன்றுகின்றன. அவற்றில் பெரும்பாலானவை, பூமியின் அளவு அல்லது அதைவிடப் பெரிய பகுதியை உள்ளடக்கியவை என்பது குறிப்பிடத்தக்கது.
11 ஆண்டு சுழற்சியில், சூரியன் உச்சத்தில் இருக்கும் சோலார் மேக்ஸிமம் காலத்தில் சூரிய புயல்கள் அதிக அளவில் ஏற்பட வாய்ப்புள்ளது.
- இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு