காருடன் எரிந்த வாலிபர்... டிஎன்ஏ பரிசோதனை நடத்த போலீசார் திட்டம்!
Dinamaalai May 23, 2025 07:48 PM

தூத்துக்குடி மாவட்டம் வல்லநாடு அருகே காருடன் எரிந்த வாலிபர் யார்? என போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். டி.என்.ஏ. பரிசோதனை நடத்தவும் திட்டமிட்டுள்ளனர்.

தூத்துக்குடி மாவட்டம் வல்லநாடு துப்பாக்கி சுடும் தளம் அருகே நெல்லை-தூத்துக்குடி நான்குவழி சாலை ஓரமாக காருடன் வாலிபர் எரிந்து பிணமாக கிடந்த சம்பவம் குறித்து தனிப்படை போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். காரில் எரிந்த வாலிபரின் மண்டை ஓடு மற்றும் இடுப்பு பகுதியில் எஞ்சி இருந்த சதைப்பகுதியை மீட்டு போலீசார் தடயவியல் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

அந்த கார், ஸ்ரீைவகுண்டம் அருகே பொன்னன்குறிச்சி பகுதியில் உள்ள பெட்ரோல் பங்க் உரிமையாளருக்கு ெசாந்தமானது என தெரிய வந்தது. இதை தொடர்ந்து அவரது குடும்பத்தினரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் இந்த சம்பவத்தை தொடர்ந்து அந்த பெட்ரோல் பங்க்கையும் போலீசார் பூட்டி சீல் வைத்துள்ளனர்.

இது தொடர்பாக தனிப்படை போலீசாரின் விசாரணையில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளன. பெட்ரோல் பங்கை உரிமையாளர் தனது உறவினரான பிரதீப் (40) என்பவரிடம் ஒப்படைத்து இருந்தாா். அவர் தான் சமீபகாலமாக பெட்ரோல் பங்க்கை நிர்வகித்து வந்துள்ளார். இந்த நிலையில் சம்பவத்திற்கு முதல் நாள் இரவில் அவர், கிருஷ்ணாபுரம் பரும்பு பகுதியில் உள்ள மற்றொரு பங்கிற்கு சென்று 40 லிட்டர் கேனில் பெட்ரோல் வாங்கியுள்ளார். 

இந்த காட்சி அங்குள்ள கண்காணிப்பு கேமராவிலும் பதிவாகியுள்ளது. இந்த கேமரா பதிவுகளை போலீசார் கைப்பற்றியுள்ளனர். பின்னர் அவர் பெட்ரோல் கேனுடன் காரில் பயணித்துள்ளார். மறுநாள் அதிகாலை சுமார் 5 மணியளவில் வல்லநாடு அருகே அந்த கார் தீப்பிடித்து எரிந்துள்ளது. இதில் அந்த கார் முற்றிலுமாக எரிந்து சேதமைடந்துள்ளது.

இதற்கிடையில் காரில் சென்ற பிரதீப், அதிகாலை சுமார் 6 மணியளவில் அவரது குடும்பத்தினருக்கு செல்போனில் குறுஞ்ெசய்தி அனுப்பியுள்ளார். அதில், ‘அத்தையையும், மாமாவையும் நன்றாக பார்த்து கொள்ளுங்கள்’ என குறிப்பிடப்பட்டு இருந்ததாகவும் கூறப்படுகிறது. தொடர்ந்து அவரது செல்போன் சுவிட்ச்-ஆப் செய்யப்பட்ட நிலையில் இருக்கிறது. 

இந்த அடிப்படையில் பிரதீப் வேறு எங்கேனும் இருக்கிறாரா? என போலீசார் சந்தேகிக்கின்றனர். அவரையும், வேறு சிலரையும் மர்மநபர்கள் கடத்தி சென்று, ஒருவரை காருடன் எரித்திருக்கலாம் என்றும், பிரதீப்பை தொடர்ந்து மர்மநபர்கள் கடத்தி வைத்திருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தி உள்ளனர்.

அதே சமயம் பிரதீப் தனது பெட்ரோல் பங்க்கை விட்டு விட்டு, மற்றொரு பங்க்கில் பெட்ரோல் வாங்கி சென்றது ஏன்? என்ற சந்ேதகமும் எழுந்துள்ளது. இந்த பின்னணியிலும் போலீசார் விசாரணை நடத்துகின்றனர். மேலும் காரில் இறந்து கிடந்தது பிரதீப்பாக இருக்கலாம் என்ற கோணத்திலும் விசாரணையை முடுக்கி விட்டுள்ளனர். இதற்காக டி.என்.ஏ. பரிசோதனை நடத்தவும் திட்டமிட்டுள்ளனர்.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.