பாலிவுட் நடிகர் சல்மான் கான் வீட்டிற்குள் நுழைய முயன்ற பெண்ணுக்கு 14 நாட்கள் நீதிமன்ற காவல்..!
Newstm Tamil May 24, 2025 04:48 AM

நடிகர் சல்மான் கான் மும்பையின் பாந்த்ரா பகுதியில் வசித்து வருகிறார். பாலிவுட் உலகின் டாப் ஸ்டாராக இருக்கும் சல்மான் கானுக்கு லாரன்ஸ் பிஷ்னோய் கும்பல் கொலை மிரட்டல் விடுத்து வருகிறது. இதனால், அவருக்கான பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. இதற்கிடையே, கடந்த ஆண்டு ஏப்ரல் 14-ம் தேதி அதிகாலை சல்மான் கான் வீடு அருகே துப்பாக்கிச்சூடு நடந்தது. இச்சம்பவம் தொடர்பாக இரண்டு பேரை போலீசார் கைது செய்தனர். இதனைத்தொடர்ந்தும் பல்வேறு முறை சல்மான் கானுக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டு வருகிறது.

லாரன்ஸ் பிஷ்னோய் கும்பலில் சல்மான் கானை கொல்லும் சதித்திட்டத்தில் ஈடுபடுத்தப்பட்டிருந்த 5 பேர் அளித்த வாக்குமூலத்தில், அவரைக் கொல்வதற்காக தலா ரூ. 25 லட்சம் அளிக்கப்பட்டதாகவும், பிஷ்னோய் கும்பலைச் சேர்ந்த சுமார் 70 பேர் 24 மணி நேரமும் சல்மான் கானை கண்காணித்து வருவதாகவும் தெரிவித்தனர்.இதனைத் தொடர்ந்து, சல்மான்கானுக்கு மத்திய அரசின் சார்பில் ஒய்-பிளஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டது.

கடந்த ஆண்டு டிசம்பர் 5ம் தேதி சல்மான் கான் படப்பிடிப்பு தளத்தில், ஒருவர் சட்டவிரோதமாக நுழைய முயன்றது பரபரப்பை ஏற்படுத்தியது. படப்பிடிப்பு தளத்தில் இருந்த ஊழியர்கள் அந்த நபரை பிடித்து விசாரித்தனர். அப்போது சல்மான் கான் ரசிகர் எனவும் அவரை பார்க்க வந்ததாகவும் கூறியிருக்கிறார். ஊழியர்கள் அவர்களை விட மறுத்ததால், லாரன்ஸ் பிஷ்னோயிடம் நான் சொல்லட்டுமா? என மிரட்டியுள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த ஊழியர்கள் உடனடியாக ஷிவாஜி பார்க் காவல் நிலையத்தில் தகவல் அளித்தனர். இதையடுத்து அங்கு வந்த போலீசார், படப்பிடிப்பு தளத்தில் அத்து மீறி நுழைந்த நபரை கைது செய்தனர்.

தொடர்ச்சியாக இவ்வாறு நடைபெறும் அச்சுறுத்தல் சம்பவங்களால் நடிகர் சல்மான் கான் தனது வீட்டின் பாதுகாப்பை மேம்படுத்துவதற்காக பால்கனி பகுதியில் குண்டு துளைக்காத கண்ணாடிகளைப் பொருத்துவதாகக் கூறப்படுகிறது. மேலும் வீட்டின் முன் ஒரு உயர் தொழில்நுட்ப 'சிசிடிவி' கேமரா நிறுவப்பட்டுள்ளது, மேலும் வீட்டை சுற்றி ரேஸர் கம்பி வேலி அமைக்கப்பட்டு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் நடிகர் சல்மான் கான் வீட்டிற்குள் அத்துமீறி நுழைய முயன்ற பெண் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்நிலையில், கைது செய்யப்பட்ட இஷா இன்று கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டார். இந்த வழக்கை விசாரித்த கோர்ட்டு இஷா சாம்ராவை 14 நாட்கள் நீதிமன்ற காவலில் அடைக்க உத்தரவிட்டது. இதையடுத்து அவர் சிறையில் அடைக்கப்பட்டார்.

கைது செய்யப்பட்ட இஷா சாம்ராவிடம் மும்பை காவல் துறையினர் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.