உச்ச நீதிமன்றத்தின் மூத்த நீதிபதி அபய் ஸ்ரீனிவாஸ் ஓகா என்னும் ஏ.எஸ். ஓகா இன்றுடன் பணி ஓய்வுபெறுகிறார். இவர் தனது கடைசி வேலை நாளான இன்றும், அவர் தான் விசாரித்து வந்த 10 வழக்குகளில் தீர்ப்பு அளித்துள்ளார். ஓகாவின் தாய் இறந்து 2 நாள்களில் மீண்டும் பணிக்குத் திரும்பியுள்ளார். இவர் இன்று மே 24ம் தேதியுடன் பணி ஓய்வுபெறும் நிலையில் அவரது கடைசி பணி நாளாக அமைந்துவிட்டது.
உச்ச நீதிமன்ற நீதிபதியாக பணியாற்றி ஓய்வுபெறும் ஏ.எஸ். ஓகா, தனது பணிக்காலத்தில் வெளிப்படுத்திய அர்ப்பணிப்பால் நீதிபதிகளுக்கு எடுத்துக்காட்டாக அமைந்துள்ளார். இந்தியாவுக்கு அவர் ஆற்றிய சேவைக்கும் அநீதியை எதிர்த்துப் போராடும் திறனுக்கும் வழக்குரைஞர்கள் அவருக்கு நன்றி தெரிவித்துக்கொண்டனர்.
மே 21ம் தேதி உச்ச நீதிமன்ற பதிவு பெற்ற வழக்குரைஞர்கள் சங்கம் சார்பில் அவருக்கு பிரியாவிடை நிகழ்ச்சியின்போதுதான், நீதிபதி ஏ.எஸ். ஓகா, தனது தாய் வசந்தி ஓகா காலமானதாகவும், வியாழக்கிழமை அவரது இறுதிச் சடங்குகள் தாணேவில் நடைபெறவிருப்பதாகவும் அறிவித்தார். நேற்று தாயாரின் இறுதிச் சடங்குகள் நடைபெற்று முடிந்திருக்கும் நிலையில், இன்று பணிக்குத் திரும்பிய நீதிபதி ஏ.எஸ். ஓகா, தான் விசாரித்து வந்த 10 வழக்குகளில் தீர்ப்பையும் வெளியிட்டுள்ளார்.
கொல்கத்தா உயர் நீதிமன்றம், இளைஞர்களின் தனியுரிமை குறித்து வெளியிட்ட கருத்துகளின் பின்னணியில், உச்ச நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரணைக்கு ஏற்ற வழக்கும், இன்று நீதிபதி ஏ.எஸ். ஓகா அமர்வில் விசாரிக்கப்பட்டுள்ளது. தீர்ப்புகளை வழங்கிய பிறகு, நீதிபதி ஏ.எஸ். ஓகா, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆர். கவாய் அமர்வுக்கு வந்தார்.
பிரியாவிடை நிகழ்வில் பேசிய ஏ.எஸ். ஓகா, உச்ச நீதிமன்றத்தில், பணி ஓய்வுபெறும் நீதிபதிகளின் கடைசி பணி நாளில் அவர்களுக்கு எந்தப் பணியும் ஒதுக்கப்படுவதில்லை என்ற வழக்கத்தை நான் ஏற்றுக்கொள்ள மறுத்துவிட்டேன். அந்த மரபிலிருந்து விடுபட நமக்கு சிறிது காலம் ஆகலாம். ஆனால், எனது கடைசி பணி நாளில், நான் வழக்கமான அமர்வில் இருந்து சில தீர்ப்புகளை வாசித்திருப்பது எனக்கு திருப்தியை அளித்துள்ளது என பேசியுள்ளார்.