மாமியாரை வெட்டிக் கொலை செய்த மருமகனுக்கு ஆயுள் சிறை... மகிளா நீதிமன்றம் தீர்ப்பு!
Dinamaalai May 24, 2025 10:48 PM

தூத்துக்குடி மாவட்டத்தில் மாமியாரை வெட்டிக் கொலை செய்த மருமகனுக்கு ஆயுள் தண்டனை விதித்து  மகிளா நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

தூத்துக்குடி மாவட்டம் பசுவந்தனை அருகே உள்ள நாகம்பட்டியை சேர்ந்த கைலாசம் மகன் நல்லகண்ணு (56). இவருடைய மனைவி ஆனந்தவள்ளி. இவர்களுக்கு 2 மகள்களும், ஒரு மகனும் உள்ளனர். நல்லகண்ணு, தனது மனைவி மீது சந்தேகப்பட்டு அடிக்கடி தகராறு செய்து வந்ததால், ஆனந்தவள்ளி பிரிந்து சென்று விட்டாராம். 

இதனால் மனம் உடைந்த நல்லகண்ணு, மனைவி பிரிந்து சென்றதற்கு மாமியார் பேச்சிம்மாள்தான் காரணம் என்று கருதி, அவரிடம் அடிக்கடி தகராறு செய்து வந்தாராம். இந்நிலையில், கடந்த 2019ஆம் ஆண்டு மாமியார் பேச்சியம்மாள் வீட்டுக்கு சென்ற நல்லகண்ணு, மனைவியை தன்னோடு வாழ அனுப்பி வைக்குமாறு கூறி தகராறு செய்தாராம். மேலும் ஆத்திரமடைந்த நல்லகண்ணு, தான் மறைத்து வைத்திருந்த அரிவாளால் பேச்சியம்மாளை வெட்டிக் கொலை செய்ததாகக் கூறப்படுகிறது.

இது குறித்த புகாரின் பேரில் பசுவந்தனை போலீசார் வழக்கு பதிவு செய்து நல்லகண்ணுவை கைது செய்தனர். இந்த வழக்கு விசாரணை, தூத்துக்குடி மகிளா நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி எம்.பி.முருகன், குற்றம்சாட்டப்பட்ட நல்லகண்ணுவுக்கு ஆயுள் தண்டனையும், ரூ.5,000 அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார். இந்த வழக்கில் அரசு தரப்பில் வழக்கறிஞர் எல்லம்மாள் ஆஜரானார்.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.