நண்பர்களுடன் ஏரியில் குளிக்கச் சென்ற 2 சிறுவர்கள் உயிரிழப்பு!
Dinamaalai May 25, 2025 02:48 AM

நண்பர்களுடன் விடுமுறை நாளையொட்டி ஏரியில் குளிக்க சென்ற 2 சிறுவர்கள் பரிதாபமாக நீரில் மூழ்கி உயிரிழந்தனர்.

சேலம் மாவட்டம், கெங்கவல்லியைச் சேர்ந்த ஷாஜகான் என்பவரின் மகன் சமீர் (15). இவர், திருச்சியில் மாணவர் விடுதியில் தங்கியிருந்தபடியே 9ம் வகுப்பு முடித்து தற்போது பத்தாம் வகுப்பு செல்ல இருக்கிறார். இவருடைய உறவினரான கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் பகுதியைச் சேர்ந்த சர்புதீன் என்பவரின் மகன் ரியாஸ் (13). உட்பட நான்கு சிறுவர்கள் கெங்கவல்லி அருகே உள்ள வலசக்கல்பட்டி ஏரியில் குளிப்பதற்காக சென்றுள்ளனர்.

இதையடுத்து குளித்துக் கொண்டிருந்த போது, சமீர் மற்றும் ரியாஸ் ஆகிய இருவரும் நீரில் மூழ்கியுள்ளனர். அருகில் இருந்தவர்கள் சிறுவர்களை மீட்க முயற்சித்தனர். இருந்த போதும் நீரில் மூழ்கி இருவரும் பரிதாபமாக உயிரிழந்தனர். இதைத் தொடர்ந்து அருகில் இருந்தவர்கள் சமீர் உடலை மீட்ட நிலையில், ரியாஸ் உடலை மீட்க முடியாமல் தவித்தனர்.

இது குறித்த தகவல் அறிந்து வந்த கெங்கவல்லி தீயணைப்புத் துறையினர் நீண்ட போராட்டத்திற்கு பின் ரியாஸ் உடலை மீட்டனர். கெங்கவல்லி போலீசார் இருவரது உடலையும் மீட்டு உடற்கூறாய்வுக்காக ஆத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அங்கு சோகத்தை ஏற்படுத்தியது.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.