"புதுக்கோட்டை ரயில் நிலையம் சென்றபோது, அங்கிருந்த நிலைய மேலாளருக்கு தமிழும் ஆங்கிலமும் தெரியவில்லை. ராஜஸ்தானை சேர்ந்த அவர் 3 ஆண்டுகளாக அங்கு பணிபுரிகிறார். மொழி தெரியாத போது மக்கள் குறைகளை எப்படி நிவர்த்தி செய்ய முடியும்?" எனக் கேள்வி எழுப்புகிறார், திருச்சி எம்.பி துரை வைகோ.
கடந்த ஏப்ரல் 24-ஆம் தேதி நடந்த சம்பவத்தை இவ்வாறாக அவர் பிபிசி தமிழிடம் தெரிவித்தார்.
ரயில் நிலையம், வங்கிகள், தபால்துறை என மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனங்களில் இந்தப் பிரச்னை நீடிப்பதாகவும் அவர் கூறினார்.
தமிழ்நாடு மட்டுமல்ல, கர்நாடகா உள்ளிட்ட இந்தி பேசாத பிற மாநிலங்களில் மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனங்களில் மொழிப் பிரச்னை அவ்வப்போது எழுவது உண்டு.
இந்தி Vs கன்னடம் சர்ச்சைகர்நாடக மாநிலம் பெங்களூருவில் சூர்யா நகரில் உள்ள பாரத ஸ்டேட் வங்கிக் கிளையில் வாடிக்கையாளர் ஒருவருடன், பெண் அதிகாரி ஒருவர் வாக்குவாதம் செய்யும் காட்சி அண்மையில் இணையத்தில் பரவியது.
வங்கி சேவைக்காக பெண் அதிகாரியை வாடிக்கையாளர் அணுகியபோது, இந்தியில் அவர் பதில் அளித்துள்ளார். கன்னடத்தில் பேசுமாறு வலியுறுத்தவே, அந்த அதிகாரி பேச மறுத்துவிட்டார்.
"இது கர்நாடக மாநிலம்" என வாடிக்கையாளர் கூற, "இது இந்தியா" என பெண் அதிகாரி பதில் அளித்துள்ளார்.
'பெண் அதிகாரி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்' எனக் கூறி இந்திய நிதி அமைச்சர், எஸ்.பி.ஐ வங்கி ஆகியவற்றை டேக் செய்து பலரும் எக்ஸ் தளத்தில் கோரிக்கை வைத்தனர்.
தற்போது பெண் அதிகாரியை இடமாற்றம் செய்து வங்கி நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா வெளியிட்டுள்ள அறிக்கையில், 'இதுபோன்ற சம்பவங்கள் நடக்கக் கூடாது. அனைத்து வங்கி அதிகாரிகளும் வாடிக்கையாளர்களை கண்ணியத்துடன் நடத்த வேண்டும்' எனக் கூறியுள்ளார்.
'உள்ளூர் மொழிகளில் பேசுவதற்கு போதுமான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்' எனவும் அவர் குறிப்பிட்டார்.
சமூக ஊடகங்களில் மொழி தொடர்பான விவாதத்தை ஏற்படுத்திய பெண் அதிகாரியும், 'கன்னடத்தில் பேச முயற்சிப்பேன். என்னால் யாருக்கு பாதிப்பு ஏற்பட்டிருந்தாலும் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன்' எனப் பேசும் காணொலி ஒன்று வெளியானது.
மேற்கண்ட சம்பவத்தை மேற்கோள் காட்டி பிபிசி தமிழிடம் பேசிய திருச்சி எம்.பி துரை வைகோ, "வங்கிப் பணிகள், வருமான வரித்துறை, ஜிஎஸ்டி உள்பட மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனங்களில் வட இந்தியர்கள் அதிகம் பணிபுரிகின்றனர். அவர்கள் தமிழ்நாட்டுக்குப் பணி செய்ய வருவதைக் குறை கூறவில்லை. தமிழ்நாட்டினரும் வட இந்தியா சென்று தொழில் செய்கின்றனர். இங்கு வருகிறவர்களுக்கு மாநில மொழி தெரிவதில்லை." எனக் கூறினார்.
"புதுக்கோட்டை ரயில் நிலையத்தில் இதன் பாதிப்புகளை என்னால் உணர முடிந்தது" எனக் கூறும் துரை வைகோ, "அங்கு குடிநீர், கழிப்பறை ஆகியவை முறையான வசதிகளுடன் இல்லை. ரயில் நிலைய மேலாளருக்கு தமிழ், ஆங்கிலம் என இரு மொழிகளும் தெரியவில்லை" எனக் கூறுகிறார்.
"தமிழில் பேசிய போது அவருக்குப் புரியாததால் ஆங்கிலத்தில் பேசினேன். ஆனால், அதுவும் அவருக்குப் புரியவில்லை. ஒரு கேள்விக்குக் கூட அவரால் பதில் சொல்ல முடியவில்லை," என்கிறார் துரை வைகோ.
"அவருடன் இருந்த உதவியாளரும் வட மாநிலத்தைச் சேர்ந்தவர். அவருக்கும் நான் பேசியது புரியவில்லை," என்று கூறிய அவர், "ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த நிலைய மேலாளர், மூன்று ஆண்டுகளாக இங்கு பணியில் இருப்பதாகக் கூறினார்" என்றார்.
"புதுக்கோட்டையைச் சுற்றியுள்ள மக்கள், தங்களுக்குத் தேவையான விஷயங்களைக் கூறும்போது அதிகாரிகளுக்கு அந்த மொழி புரிந்தால் தான் தீர்வு கிடைக்கும்" எனவும் துரை வைகோ குறிப்பிட்டார்.
"புதுக்கோட்டை ரயில் நிலையம் என்பது ஒரு உதாரணம்," எனக் கூறும் துரை வைகோ, "தமிழ்நாட்டுக்கு மட்டுமல்ல, அனைத்து மாநிலங்களிலும் அந்தந்த மாநில மொழிகளைத் தெரிந்தவர்களுக்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும்" எனக் கூறுகிறார்.
திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கத்தில் அம்ரித் பாரத் திட்டத்தின் கீழ் மேம்படுத்தப்பட்ட ரயில் நிலையத்தை வியாழன் அன்று (மே 22) காணொலி மூலமாக பிரதமர் நரேந்திர மோதி திறந்து வைத்தார்.
இந்த நிகழ்வைக் குறிப்பிட்டுப் பேசிய துரை வைகோ, "விழாவில் சில காணொலிகளை ஒளிபரப்பினர். ஆனால், அவை அனைத்தும் இந்தி மொழியில் இருந்தன. சுற்றுவட்டாரத்தில் இருந்து ஏராளமான பொதுமக்களும் நிகழ்ச்சியில் பங்கேற்றனர். இந்தி மொழியில் மட்டும் ஒளிபரப்புவதால் மக்களுக்கு புரிய வாய்ப்பில்லை. இந்தியில் பேசுவதை தமிழில் சப் டைட்டிலுடன் வெளியிட்டால் மக்களுக்குச் சென்று சேரும் என அங்கிருந்த அதிகாரிகளிடம் தெரிவித்தேன்" எனக் கூறுகிறார்.
'கட்டாயம்' - 'தெரிந்தால் நல்லது'வங்கிகளில் மொழி தொடர்பான பிரச்னை தொடர்ந்து நீடிப்பதாகக் கூறுகிறார், இந்திய வங்கி ஊழியர் சம்மேளனத்தின் தமிழ் மாநில துணைத் தலைவர் சி.பி.கிருஷ்ணன்.
பிபிசி தமிழிடம் பேசிய அவர், "வங்கிப் பணிகளுக்கு இந்திய அளவில் தேர்வு (IBPS) நடத்தப்படுகிறது. அதில், மொழி தொடர்பாக அதிகாரிகளுக்கு எந்த விதிகளும் இல்லை. கணக்கர் (clerk) பணியிடங்களில் குறிப்பாக கவுன்டர்களில் அமரும் நபர்களுக்கு வட்டார மொழி தெரிந்திருக்க வேண்டும். அவ்வாறு தெரியாவிட்டால் ஆறு மாதங்களுக்குள் கற்றுக் கொள்வதாக உறுதிமொழி அளிக்க வேண்டும். ஆனால், இந்த விதி நீக்கப்பட்டுவிட்டது" என்கிறார்.
'கட்டாயம்' என்பதை 'தெரிந்தால் நல்லது' (desirable) என மாற்றப்பட்டுவிட்டதாகக் கூறும் சி.பி.கிருஷ்ணன், "இதன்மூலம், கிளர்க் பணிகள், அதிகாரிகள் என இருவருக்குமே அந்தந்த மாநில மொழிகள் தெரிவதில்லை. இது தான் பிரச்னைகளுக்குக் காரணம்" எனக் குறிப்பிட்டார்.
"வங்கியின் கொள்கை எப்படி இருந்தாலும் ஒரே மாநிலத்தில் பணியமர்த்தினால் தவறுகள் நடக்கும் என நினைத்தால் அதே மாநிலத்தில் வேறு கிளைகளில் பணியமர்த்தலாம். வட்டார மொழி அல்லது மாநில மொழியை தெரிந்திருக்க வேண்டும் என மக்கள் நினைப்பது நியாயமானது" எனக் கூறுகிறார் சி.பி.கிருஷ்ணன்.
தொடர்ந்து பேசும்போது, "வட்டார மொழி தெரிந்தவர்களை அதிகாரிகளை நியமிக்க வேண்டும். அவ்வாறு தெரியாதவர்களை நியமித்தால் அங்கு மேலாளர் என்ற பணியிடமே இல்லை என்று தான் கணக்கில் எடுத்துக் கொள்ள முடியும்" என்கிறார்.
வங்கிப் பணி மட்டுமல்லாமல், அஞ்சலக சேவைகளிலும் இதேபோன்ற நிலை நீடிப்பதாகக் கூறுகிறார், தமிழ் தேசியப் பேரியக்கத்தின் துணைப் பொதுச்செயலாளர் அருணபாரதி.
"வாடிக்கையாளர்கள் சந்திக்கும் இடங்களில் தமிழ் பேசும் பணியாளர்கள் இருப்பதில்லை. இந்தி அல்லது ஆங்கிலத்தில் பேசுமாறு கூறுவதால் பொதுமக்களுக்கும் அவர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்படுகிறது" எனவும் அவர் குறிப்பிட்டார்.
செங்கல்பட்டு மாவட்டம், திருப்போரூரில் துணை தபால் நிலையம் ஒன்று செயல்படுகிறது. இங்கு துணை தபால் அலுவலர் பிரிவில் வட மாநிலத்தைச் சேர்ந்த ஒருவர் பணிபுரிகிறார்.
"இவருக்கு தமிழ் தெரியாததால் மக்களுக்கும் துணை தபால் அலுவலருக்கும் இடையில் தகவல்களை கூறிக் கொள்வதில் சிரமம் ஏற்படுகிறது. ஆனால், இதுவரையிலும் இது மிகக் பெரிய பிரச்னையாக மாறவில்லை," எனக் கூறுகிறார், அப்பகுதியில் வசிக்கும் சரவணன்.
அஞ்சலகத்தைப் போல ரயில் நிலையங்களிலும் பொதுமக்கள் பல்வேறு சிரமங்களை எதிர்கொள்வதாகவும் அருணபாரதி கூறினார்.
பிபிசி தமிழிடம் பேசிய அவர், "ரயில் முன்பதிவு விண்ணப்பத்தை ஆங்கிலத்தில் எழுதிக் கொடுத்தால் அதை கவுன்டரில் இருந்த ஊழியர் விசிறியடித்த நிகழ்வுகளும் நடந்துள்ளன" எனக் கூறுகிறார்.
"திருப்பூர் ரயில் நிலையத்தில் இந்தியில் அறிவிப்பு பலகை வைக்கப்பட்டது சர்ச்சையை ஏற்படுத்தியது. அடுத்து, சென்னை மயிலாப்பூர் ரயில் நிலையத்தில் முன்பதிவு விண்ணப்பத்தை ஆங்கிலத்தில் எழுதிக் கொடுத்ததற்காக பயணிக்கும் ரயில் நிலைய ஊழியருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது" என்கிறார்.
"தமிழ்நாட்டில் படித்தவர்களை மத்திய அரசுப் பணிகளில் பணியமர்த்தும் சூழல் முன்பு இருந்தது. கடந்த ஏழு ஆண்டுகளில் வட இந்தியர்களை அதிகளவில் பணியமர்த்துகின்றனர். இதனால் மக்கள் பிரச்னைக்கு தீர்வு கிடைப்பதில்லை," எனக் கூறுகிறார் துரை வைகோ.
"இந்தியா பன்முகத்தன்மை கொண்ட நாடாக உள்ளது. மொழி சார்ந்த விவாதங்கள் எழுவதற்குக் காரணம், தங்கள் மாநிலத்திலும் இந்தியை திணிக்க முற்படுகிறார்களோ என்ற அச்சம் எழுதுவது தான்" எனவும் அவர் குறிப்பிட்டார்.
ஆனால், இந்தக் கூற்றுகளை மறுக்கும் தமிழக பா.ஜ.க மாநில பொதுச்செயலாளர் பேராசிரியர் இராம.சீனிவாசன், "இவை செயற்கையாக உருவாக்கப்படும் பிரச்னைகள். மொழி தெரிந்திருக்க வேண்டும் எனக் கட்டாயப்படுத்த வேண்டியதில்லை. அவர்களுக்கு விருப்பம் இருந்தால் கற்றுக் கொள்ளலாம்," எனக் கூறுகிறார்.
பிபிசி தமிழிடம் தொடர்ந்து பேசிய அவர், "இந்திய அளவில் நடத்தப்படும் தேர்வில் அனைத்து மாநிலங்களுக்கும் அதிகாரிகளை நியமிப்பது வழக்கம். தமிழ் தெரியவில்லை என்பதற்காக எந்த அதிகாரிக்கும் நீதி மறுக்கப்படுவதில்லை. சொல்லப் போனால், தமிழ்நாட்டில் வடமாநில ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் தான் பிரபலமாக உள்ளனர்," எனக் கூறுகிறார்.
"இதற்கான தீர்வை மத்திய அரசு தர முடியாது" எனக் கூறும் இராம.சீனிவாசன், "மொழிகளைக் கற்றுக் கொள்வதில் எந்த பிரச்னையும் இல்லை. வேற்று மாநிலங்களில் இருந்து தமிழ்நாட்டுக்கு வந்தவர்களுக்கு மாநில அரசு மொழிப் பயிற்சி கொடுப்பது தான் தீர்வாக இருக்க முடியும்" என்கிறார்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு