நம்மில் பலரும் சிக்கன் மட்டுமின்றி மட்டன், மீன் போன்ற இறைச்சிகளை குளிர்சாதனப் பெட்டியில் வைத்து பல நாட்கள் வரை உட்கொள்கிறோம். ஆனால் இது நமது ஆரோக்கியத்திற்கு உகந்ததா என்றும் சிந்திக்க வேண்டும்.
சிக்கனை எவ்வளவு நாள் நீங்கள் குளிர்சாதன பெட்டியில் வைத்து உட்கொள்ள வேண்டும் என்பதைப் பற்றி முதலில் தெரிந்து கொள்ள வேண்டும்.
சமைக்கப்பட்ட சிக்கனை இரண்டு மணி நேரத்துக்குள் காற்றுபுகாத டப்பாக்களில் அடைத்து ப்ரிட்ஜில் வைத்து, மூன்று அல்லது நான்கு நாட்கள் வரை அதனை சாப்பிடலாம். அதேபோல் ப்ரீசரில் வைத்தும் தேவைப்படும்போது எடுத்துக் கொள்ளலாம்.
சமைக்காத சிக்கனை எவ்வளவு நாட்கள் வரை சேமிக்கலாம் என்பது உங்கள் வீட்டின் குளிர்சாதன பெட்டியின் ப்ரீசரின் தன்மை தன்மை மற்றும் கடையில் சிக்கன் எத்தனை நாட்கள் இருந்தது என்பதை பொறுத்து மாறுபடும். பொதுவாக சமைக்காத சிக்கன் ஒன்று அல்லது இரண்டு நாட்கள் வரை கெடாமல் இருக்கும்.
சிக்கனை நீண்ட நாட்கள் கெடாமல் சேமிப்பது எப்படி?
குளிர்சாதனப் பெட்டியின் தன்மை: சமைக்காத சிக்கனை நீங்கள் சேமிக்க உங்கள் வீட்டின் குளிர்சாதன பெட்டியின் ப்ரீசர் தன்மை நன்றாக இருக்க வேண்டும்.குளிர்சாதன பெட்டியை 4.4 டிகிரி செல்சியஸ் அல்லது அதற்கும் குறைவான வெப்பநிலையில் சேமிக்கும் போது, சிக்கனை கெட்டுப் போக செய்யும் பாக்டீரியாக்களின் வளர்ச்சி குறையும்.
சிக்கனை சுத்தப்படுத்தி தயார்படுத்துதல்
சிக்கனை ப்ரிட்ஜில் சேமிக்கும் முன் நீங்கள் கடையிலிருந்து வாங்கி வந்த சிக்கனை முதலில் நன்றாக கழுவி அதனை சுத்தப்படுத்திக் கொள்ள வேண்டும். பின்பு சிக்கனை வெதுவெதுப்பான நீரில் ஊற வைக்கவும். சிறிது நேரம் கழித்து சிக்கனை எடுத்து குளிர்ந்த நீரில் நன்றாகக் கழுவவும். கழுவிய சிக்கன் உலர்ந்த பின்பு அதனை குளிர்சாதனப் பெட்டியில் சேமிக்கலாம்.
மேரினேட் செய்தல்
சமைக்காத சிக்கனை நீண்ட நாட்கள் வரை கெடாமல் பாதுகாக்க அதனை முறையாக மேரினேட் செய்த பின்பே சேமிக்க வேண்டும். கழுவிய சிக்கனில் உப்பு மற்றும் மஞ்சள் சேர்த்து மேரினேட் செய்த பின்னர், காற்று போகாத டப்பாக்களில் அடைத்து சேமிக்கலாம். மஞ்சளில் உள்ள பாக்டீரியா எதிர்ப்புப் பண்புகள் சிக்கனை நீண்ட நாட்கள் வரை கெடாமல் பாதுகாக்க உதவும்.
காற்றுபுகாத ஜிப் லாக் கவர்களில் சேமிக்கலாம்
சிக்கனை கழுவி அதனை மேரினேட் செய்து சேமிக்க உங்களுக்கு சோம்பேறித்தனமாக இருந்தால், கடைகளில் வாங்கும் சிக்கனை சிறிது குளிர்ந்த நீரில் கழுவி பின்னர் காற்றுபுகாத ஜிப் லாக் கவர்கள் அல்லது காற்றுபுகாத கொள்கலன்களில் வைப்பதன் மூலமும் அதனை நீண்ட நாட்கள் வரை சேமிக்க முடியும்.
மற்ற பொருட்களுடன் வைப்பதை தவிர்க்கவும்
குளிர்சாதன பெட்டியில் சிக்கனை சேமிக்க நீங்கள் விரும்பினால் இறைச்சியுடன் மற்ற பொருட்கள், காய்கறிகள் மற்றும் பழங்கள் போன்றவற்றுடன் சேர்த்து வைப்பதைத் தவிர்க்கவும்.
ஏனெனில் குளிர்சாதன பெட்டியில் உள்ள மற்ற பொருட்களின் மூலம் உருவாகும் பாக்டீரியாக்களால் இறைச்சிகள் கெட்டுப் போகும் வாய்ப்புள்ளது. எனவே மற்ற பொருட்களுடன் இறைச்சியை சேர்த்து வைப்பதை தவிர்ப்பது நல்லது. அதேபோல் நீங்கள் குளிர்சாதனப் பெட்டியை திறந்த உடன் கெட்ட வாசனை வீசுகிறது என்றால், நீங்கள் வைத்துள்ள இறைச்சி கெட்டுவிட்டது என்பதைத்தான் அந்த கெட்ட வாசனை குறிக்கிறது.