நேற்று மே 29ம் தேதி தமிழ்நாடு அரசின் தலைமை காஜி முப்தி சலாவுதீன் முகமது அயூப், உடல் நலக் குறைவு காரணமாக அல்லாஹ்வின் அழைப்பை ஏற்றுக் கொண்டார். அவருக்கு வயது 84. அவரது மறைவுக்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
பக்ரீத் பண்டிகை நெருங்கும் நிலையில், தலைமை காஜி காலமான செய்தி முஸ்லிம் சமூகத்தினரிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
அரபு மொழி மற்றும் இலக்கியத்தில் எம்.ஏ., எம்.ஃபில்., பி.எச்.டி. பட்டங்களைப் பெற்றுள்ள முப்தி சலாவுதீன் முகமது அயூப், எகிப்து நாட்டின் அல்-அஸ்ஹர் பல்கலைக்கழகத்தில் அல் இஜாசதுல் ஆலியா என்ற பட்டத்தைப் பெற்றுள்ளார்.
இவர் தலைமை காஜியாக பதவியேற்பதற்கு முன்னதாக, சென்னை கல்லூரியில் அரபு பேராசிரியராகவும் இருந்தார். ஓர் உண்மையான இஸ்லாமிய அறிஞருக்கான சிறந்த எடுத்துக்காட்டாகத் திகழ்ந்ததுடன், இவரின் பரந்த அறிவு, நிபுணத்துவம் மற்றும் சமூக சேவை மீதான ஆர்வம் ஆகியவை ஈடு இணையற்றவை என்று போற்றப்பட்டார்.