"விபச்சாரியாக உணரச் செய்தனர்"- ஹைதராபாத் உலக அழகி போட்டியிலிருந்து வெளியேறிய மிஸ் இங்கிலாந்து குற்றச்சாட்டு
BBC Tamil May 25, 2025 08:48 PM
@milla.magee/instagram மிஸ் வேர்ல்ட் இங்கிலாந்து மில்லா மேகி

இந்தியாவில் நடைபெறும் உலக அழகிப் போட்டியை சர்ச்சை சூழ்ந்துள்ளது. தெலங்கானாவில் நடைபெறும் இந்தப் போட்டியில் இருந்து பாதியிலேயே விலகிய 'மிஸ் இங்கிலாந்து 2025' அழகி மில்லா மேகி, கொடுத்த ஒரு பேட்டியில் அழகிப் போட்டிக்கான ஏற்பாடுகள் தொடர்பாக வெளியிட்ட கருத்துகள் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.

"அவர்கள், நான் ஒரு விபச்சாரி என்று நினைக்க வைத்தார்கள்" என மில்லா மேகி "தி சன்" என்ற பத்திரிகைக்கு அளித்த பேட்டியில் கூறியிருந்தது தெலங்கானா மாநில அரசியலில் கொந்தளிப்பை உருவாக்கி வருகிறது.

72வது உலக அழகி போட்டி தெலங்கானாவில் நடைபெற்று வருகிறது. மே 7ஆம் தேதி தொடங்கிய இந்தப் போட்டிகள் மே 31ஆம் தேதி வரை நடைபெறுகிறது. அரசு ஏற்பாடு செய்த பிரமாண்டமான தொடக்க விழா மே 10ஆம் நாளன்று கச்சிபெளலி மைதானத்தில் நடைபெற்றது.

மிஸ் இங்கிலாந்து வெற்றியாளர் மில்லா மேகி, மிஸ் வேர்ல்ட் போட்டியில் கலந்துக் கொள்வதற்காக ஹைதராபாத் வந்தவர்களில் ஒருவர். போட்டியில் கலந்துக் கொள்வதற்காக மே 7ஆம் தேதியன்று ஹைதராபாத் வந்த அவர், மே 16ஆம் தேதி நாடு திரும்பினார்.

Bamboophotolab/Instagram மிஸ் வேர்ல்ட் இங்கிலாந்து மில்லா மேகி 'தி சன்' பத்திரிகைக்கு மில்லா மேகி பேட்டி

போட்டியில் இருந்து விலகி தனது தாயகத்திற்கு சென்ற அவர், 'ஒரு நோக்கத்திற்கு உதவும் அழகு' ('beauty with a purpose') என்ற எண்ணத்துடன் இந்தியாவில் நடைபெறும் அழகிப் போட்டிக்கு சென்றேன். ஆனால், நான் அங்கே பதுமை போல உட்கார வேண்டியிருந்தது. என்னுடைய ஒழுக்கமும் அறநெறியும் என்னை அங்கே இருக்க விடவில்லை. நான் அங்கு வேடிக்கைக்காகவும் பொழுதுபோக்குக்காகவும் வந்திருப்பதாக போட்டி ஏற்பாட்டாளர்கள் நினைத்துவிட்டார்கள். அவர்கள் என்னை ஒரு விபச்சாரி என்று நினைக்க வைத்துவிட்டார்கள். "இந்த உலக அழகி போட்டியை நடத்த நிதி வழங்கியதற்கு நன்றி தெரிவிக்கும் வகையில் பணக்கார ஆண் விளம்பரதாரர்கள் முன் அணிவகுத்து செல்லவைக்கப்பட்ட பிறகு, நான் உறுதியான முடிவை எடுக்கவேண்டிய நிலை ஏற்பட்டது" என்று மில்லா மேகி கூறினார்.

'தி சன்' பத்திரிகை எழுதியுள்ள கட்டுரையில், நன்றியுணர்வின் பெயரில் நடுத்தர வயது ஆண்கள் சிலரை மகிழ்விக்கச் சொன்னதில் மில்லாவுக்கு வருத்தம் ஏற்பட்டதாக குறிப்பிட்டுள்ளது.

"உலக அழகி போட்டிகளுக்கான நேரம் முடிந்துவிட்டது. உலகை மாற்றுவதற்காக உங்கள் குரல் ஒலிக்காவிட்டால், அந்த கிரீடங்களும் பட்டங்களும் பயனற்றவை. காலையில் சமையலறையில் அமர்ந்திருக்க வேண்டும், நாள் முழுவதும் மேக்கப் அணிந்து பால் கவுண் அணிந்திருக்க வேண்டும் என கூறினார்கள்." என்று மில்லா மேகி கூறினார்.

@milla.magee/instagram மிஸ் வேர்ல்ட் இங்கிலாந்து மில்லா மேகி

"ஒவ்வொரு மேசையிலும் ஆறு விருந்தினர்களுடன் இரு பெண்களை அமர வைத்தார்கள். மாலை முழுவதும் அவர்களுடன் அமர்ந்து அவர்களை மகிழ்விக்க வேண்டும் என்று கூறினார்கள். அது தவறு, எனக்கு பிடிக்கவில்லை. யாரையும் மகிழ்விப்பதற்காக நான் அழகிப் போட்டிக்கு செல்லவில்லை. உலக அழகி போட்டிக்கு என சில விழுமியங்களும் மதிப்பும் இருக்க வேண்டும். ஆனால், அந்தப் போட்டிகள் மிகவும் பழைய முறைகளிலேயே இருந்தன. அவை காலாவதியாகிவிட்டன, அவர்கள் என்னை ஒரு விபச்சாரியைப் போல உணர வைத்தனர்," என்று மில்லா மேகி கூறினார்.

"நான் எதை ஊக்குவிக்கவேண்டும் என்று நினைக்கிறேனோ அதைப் பற்றி பேச விரும்பும்போது, அங்குள்ள ஆண்கள் தேவையற்ற மற்றும் தொடர்பில்லாத விஷயங்களைப் பற்றிப் பேசுவார்கள், என்னுடைய நோக்கத்தைப் பற்றி பேசுவதை கடினமாக்கியது." நான் இப்படிப்பட்ட சூழ்நிலையை எதிர்பார்க்கவில்லை. "அவர்கள் எங்களை வளர்ந்தவர்களைப் போல அல்ல, குழந்தைகளைப் போலவே நடத்தினார்கள்," என்று மேகி கூறினார்.

தன்னுடைய அம்மாவுக்கு போன் செய்து வருத்தத்தை பகிர்ந்துக் கொண்டதாக மில்லா மேகி, தன்னை தவறாக பயன்படுத்த நினைப்பதாக தாயிடம் தெரிவித்ததாக சன் செய்தித்தாள் செய்தி வெளியிட்டுள்ளது.

இந்த செய்தி வெளியானதும், பிஆர்எஸ் கட்சி, 'தி சன்' செய்தியைப் பகிர்ந்துகொண்டு எக்ஸ் வலைதளத்தில் பதிவிட்டுள்ளது.

"தெலங்கானா மக்களின் பணம் 250 கோடி ரூபாயை செலவளித்து காங்கிரஸ் அரசும், தரகர் ரேவந்த்தும், மாநிலத்தின் பெயரையும், ஹைதராபாத்தின் நற்பெயரையும் சர்வதேச அளவில் கெடுத்துவிட்டார்கள்! "மிஸ் இங்கிலாந்து, அழகுப் போட்டியை பாதியிலேயே விட்டுவிட்டு ஹைதராபாத்திலிருந்து சென்றுவிட்டார். 'மிஸ் வேர்ல்ட் 2025 ஏற்பாட்டாளர்கள் தன்னை ஒரு விபச்சாரி போல நடத்தியதாக குற்றம் சாட்டியுள்ளார்'" என்று பிஆர்எஸ் கட்சி மாநில அரசை விமர்சித்துள்ளது.

மில்லா மேகியின் குற்றச்சாட்டுகள் பொய்யானவை என, மிஸ் வேர்ல்ட் அழகிப் போட்டியை ஏற்பாடு செய்த ஏற்பாட்டாளர்கள் பதிலளித்துள்ளனர்.

"மிஸ் இங்கிலாந்து 2025 வெற்றியாளரான மில்லா மேகி, தனது தாயின் உடல்நிலை சரியில்லாத காரணத்தால், அவசர காரணங்களைச் சுட்டிக்காட்டி போட்டியில் இருந்து விலக அனுமதிக்க வேண்டும் என இந்த மாத தொடக்கத்திலேயே கேட்டுக் கொண்டார். அவருடைய இக்கட்டான நிலைமையைப் புரிந்துகொண்டு, மிஸ் வேர்ல்ட் அமைப்பின் தலைவரும் தலைமை நிர்வாக அதிகாரியுமான ஜூலியா மோர்லி, அவரை திருப்பி அனுப்புவதற்கான ஏற்பாடுகளைச் செய்தார்".

"அவருக்கு பதிலாக சார்லோட் கிராண்ட் என்பவர் இங்கிலாந்தின் சார்பில் தெலங்கானா அழகிப் போட்டியில் கலந்துக் கொண்டார். அவர் புதன்கிழமை ஹைதராபாத் வந்துவிட்டார்," என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

@milla.magee/instagram மிஸ் வேர்ல்ட் இங்கிலாந்து மில்லா மேகி

"துரதிர்ஷ்டவசமாக, சில ஊடகங்கள் இந்தியாவில் மில்லா மேகியின் அனுபவங்களைப் பற்றிய தவறான செய்திகளை வெளியிட்டிருப்பது தெரிய வந்துள்ளது. ஆனால், உண்மைக்கும் அந்தச் செய்திக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. செய்தியில் வெளியான கருத்துக்கள் முற்றிலும் மாறுபட்டிருக்கிறது. ஹைதராபாத்தில் இருந்தபோது அந்தப் பெண் பேசும் திருத்தப்படாத வீடியோக்களை நாங்கள் வெளியிடுகிறோம். அவர் அனைவருக்கும் நன்றி சொல்வதையும், இங்கே எல்லாம் நன்றாக இருக்கிறது என்று சொல்வதையும் தெளிவாகக் காணலாம்.

"இந்தியாவில் இருக்கும்போது அந்தப் பெண் சொன்னதற்கும், அங்கு சென்ற பிறகு அவர் சொன்னதாக சொல்லி வெளிவரும் கதைகளுக்கும் எந்தவித தொடர்பும் இல்லை" என்று நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

"உண்மையில், மிஸ் வேர்ல்ட் போட்டி, கண்ணியம் மற்றும் அழகின் மதிப்புக்கு உறுதிபூண்டுள்ளது, நல்ல நோக்கத்துடன் நடத்தப்படுகிறது," "இதுபோன்ற தவறான செய்திகளை வெளியிடுவதற்கு முன்பு ஊடக நிறுவனங்கள் பத்திரிகை தர்மத்தை கடைப்பிடிக்க வேண்டுமென்று கேட்டுக்கொள்கிறோம்" என்று மிஸ் வேர்ல்ட் அமைப்பு வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உலக அழகி அமைப்பின் தலைவரும் தலைமை நிர்வாக அதிகாரியுமான ஜூலியா மோர்லியின் பெயரில் வெளியாகியுள்ள இந்த அறிக்கை, இங்கே எல்லாம் சரியாக இருக்கிறது என்று மில்லா மேகி முன்பு கூறிய வீடியோவுடன் சேர்த்து வெளியிடப்பட்டுள்ளது.

சௌமஹல்லா அரண்மனையில் நடைபெற்ற விருந்தில் மில்லா மேகி ஒரு முறை மட்டுமே பங்கேற்றதாகவும், அது அரசாங்கத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட விருந்து என்றும் கூறும் ஏற்பாட்டாளர்கள், அது தொடர்பான வீடியோக்களை வெளியிட்டுள்ளனர்.

அந்த வீடியோவில், மில்லா மேகி அமர்ந்திருந்த மேசையின் இருபுறமும் பெண்கள் அமர்ந்திருந்ததும், ஒரே ஒரு ஆண் மட்டுமே அவர்களின் எதிரில் அமர்ந்திருப்பதும் தெரிகிறது.

தற்போது, மில்லா மேகிக்குப் பதிலாக மிஸ் இங்கிலாந்து ரன்னர்-அப் சார்லோட், தெலங்கானா அழகிப் போட்டியில் இங்கிலாந்தைப் பிரதிநிதித்துவப்படுத்துகிறார்.

-இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.