140 கோடி மக்களின் கனவுகளையும் நிறைவேற்றுவதற்கு அனைவரும் ஒரு குழுவாக செயல்பட வேண்டும்... பிரதமர் மோடி வேண்டுகோள்!
Dinamaalai May 26, 2025 02:48 AM

  மத்திய அரசு திட்டக்குழுவுக்கு பதிலாக நிதி ஆயோக் திட்டத்தை அமல்படுத்தி செயல்படுத்தி வருகிறது. இத்திட்டத்தின் படி ஒவ்வொரு ஆண்டும் நாட்டின் நிதி நிர்வாகம், வளர்ச்சி திட்ட இலக்குகள் குறித்து ஆலோசிக்க நிதி ஆயோக் கூட்டம் என்பது நடைபெற்று வருகிறது. அந்த வகையில், இந்த ஆண்டுக்கான ஆயோக் கூட்டம் பிரதமர்  மோடி தலைமையில் டெல்லியில் நடைபெற்றது. இது 10-வது ஆண்டு நிதி ஆயோக் கூட்டம். இந்த கூட்டத்தில் பிரதமர் மோடி சில முக்கிய விஷயங்கள் குறித்து பேசியிருந்தார்.

அதில் ” மத்திய மற்றும் மாநில அரசுகள் ஒரு குழுவாக இணைந்து செயல்பட்டால், எந்தவொரு இலக்கையும் அடைவது சாத்தியமாகும். அப்படி ஒன்றாக இணைந்து செயல்பட்டது என்றால் ஒவ்வொரு மாநிலமும் தனித்தனியாக வளர்ச்சி அடையும்போது, இந்தியா ஒட்டுமொத்தமாக வளர்ச்சி பெறும். வளர்ச்சி அடைந்த இந்தியாவை உருவாக்குவது 140 கோடி இந்தியர்களின் பொதுவான இலக்கு இந்த இலக்கை அடைய, அனைவரும் ஒருமித்து முன்னேற வேண்டும்.

இது ஒரு தனிப்பட்ட அரசின் பணி மட்டுமல்ல, மாநில அரசுகள் மற்றும் மக்களின் கூட்டு முயற்சியாக இருக்க வேண்டும். அதைப்போல, ஒவ்வொரு மாநிலமும் குறைந்தபட்சம் ஒரு உலகத் தரம் வாய்ந்த சுற்றுலா தலத்தை உருவாக்க வேண்டும். இதன் மூலம் பொருளாதார வளர்ச்சி மேம்படும்.  உள்ளூர் மக்களுக்கு வேலைவாய்ப்புகளை உருவாக்கும்.  இந்தியாவின் பன்முகத்தன்மையை உலகிற்கு காட்டுவதற்கு சுற்றுலா ஒரு முக்கிய வழியாக இருக்கும்.இந்தியா வேகமாக நகரமயமாக்கப்பட்டு வருவதாகவும், எதிர்காலத்திற்கு தயாராக இருக்கும் நகரங்களை உருவாக்க வேண்டும்.

இதற்கு உள்கட்டமைப்பு, தொழில்நுட்பம், மற்றும் நிலையான வளர்ச்சியில் கவனம் செலுத்த வேண்டும். நவீன மற்றும் திறமையான நகரங்களை உருவாக்குவது, இந்தியாவின் வளர்ச்சியை இன்னும் அதிகமாக்கும்.சாதாரண குடிமக்களின் வாழ்க்கையில் உண்மையான மாற்றத்தைக் கொண்டுவருவதே அரசின் முதன்மை நோக்கமாக இருக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார். 140 கோடி மக்களின் விருப்பங்களையும், கனவுகளையும் நிறைவேற்றுவதற்கு அனைவரும் ஒரு குழுவாக செயல்பட வேண்டும் எனவும்  பிரதமர் மோடி அழைப்பு விடுத்தார்.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.