மணிரத்னம் இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகியிருக்கும் திரைப்படம் தக் லைஃப். இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா, சமீபத்தில் சென்னை உள்விளையாட்டு அரங்கில் நடைப்பெற்றது. இந்த விழாவில், பல்வேறு பிரபலங்கள் கலந்து கொண்டனர் தக் லைஃப் இசை வெளியீட்டு விழாவில், கமல்ஹாசன், சிலம்பரசன், அபிராமி, த்ரிஷா, ஏ.ஆர்.ரஹ்மான் உட்பட பலர் கலந்து கொண்டனர். இதில் ஸ்ருதிஹாசனின் பாடல், ஏ.ஆர்.ரஹ்மானின் நெகிழ வைக்கும் இசை என பல விஷயங்கள் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது.
நடிகர் கமல்ஹாசன் , தான் அரசியலுக்கு வந்ததற்கான காரணம் குறித்து என பல விஷயங்களை பேசியிருந்தார். த்ரிஷாவின் அழகு, சிம்புவின் திறமை, ஜோஜூ ஜார்ஜ்ஜின் நடிப்பு, அன்பு-அறிவு ஆகியோரின் சண்டை காட்சிகள் என ஒன்றுவிடாமல் குறிப்பிட்டு பேசினார். தனது கடைக்கோடி ரசிகனைக்கூட தெரிந்து கொள்ளும் ஆர்வம் காரணமாகத் தான் அரசியலுக்கு வந்ததாகவும், முதலமைச்சர் ஆக வேண்டும் என்ற எண்ணத்தோடு அரசியலுக்கு வரவில்லை எனவும் கூறினார்.
தனது படத்தில் வேலை பார்த்த அனைவருக்கும் நன்றி தெரிவித்த மணிரத்னம், தக் லைஃப் திரைப்படத்தில் 2ஆக இருந்த பாடல்களை 9ஆக மாற்றியதற்கு நன்றி என்றும் கூறியிருந்தார். நாயகன் படத்தால்தான் தனக்கு சினிமாவில் மிகப்பெரிய பிரேக் கிடைத்ததாகவும் அதற்காக கமலுக்கு நன்றி சொல்வதாகவும் கூறியிருந்தார்.
நடிகையும், கமல்ஹாசனின் மகளுமான ஸ்ருதிஹாசன் பட விழாக்களில் பாடுவது வழக்கம். அந்த வகையில், தக் லைஃப் பட விழாவிலும் விண்வெளி நாயகா பாடலை பாடியிருந்தார். இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான், விழா மேடையில் பேசியதோடு மட்டுமல்லாமல், படத்தில் இடம் பெற்றிருந்த பாடல்களையும் பாடினார். மேலும், படத்தின் அனைத்து பாடல்களிலும் தனக்கு விண்வெளி நாயகா பாடல்தான் மிகவும் பிடித்தது என்றும், படத்தின் பின்னணி இசையமைக்கும் பணியும் தனக்கு மிகவும் பிடித்ததாகவும் கூறியிருந்தார்.
சிலம்பரசன், தக் லைஃப் திரைப்படத்தின் படப்பிடிப்பில் கமலின் கழுத்தை பிடிப்பது போல எடுக்கப்பட்ட காட்சியில் நடித்தது எவ்வளவு கடினமாக இருந்தது என்பதையும், மணிரத்னம் தான் அவரது கழுத்தை இறுக்கமாக பிடிக்கும் வரை தன்னை விடவில்லை எனவும் கூறி கலகலப்பூட்டினார். த்ரிஷா-கமல் ஜோடி போல பல சர்ப்ரைஸ்கள் படத்தில் காத்துக்கொண்டு இருப்பதாக தெரிவித்தார். தனக்கு ரெட் கார்ட் கொடுத்திருந்த சமயத்தில் தனக்காக நின்ற மணிரத்னத்திற்கும் பீப் சாங் சர்ச்சையின் போது தன்னுடன் நின்ற ஏ.ஆர்.ரஹ்மானிற்கும் நன்றி தெரிவித்தார்.
நடிகை த்ரிஷா பொன்னியின் செல்வன் படத்தில் வந்த குந்தவை கேரக்டருக்கு அப்படியே எதிர்மாறான கேரக்டரில் தக் லைஃப் படத்தில் நடித்திருப்பதாகவும், படத்தை அனைவரும் தியேட்டருக்கு வந்து பார்க்க வேண்டும் எனவும் பேசியிருந்தார். கன்னட நடிகர் சிவராஜ்குமார், தக் லைஃப் திரைப்பட விழாவில் சிறப்பு விருந்திரனாக கலந்து கொண்டார். கமல்ஹாசனின் மிகப்பெரிய ரசிகர்களுள் தானும் ஒருவன் . கமலின் படங்களை எப்போதும் முதல் நாள் முதல் காட்சி பார்த்துவிடுவேன் என்று கூறியிருந்தார். மேலும், “ஒரே நாள் உனை நான் நிலாவில் பார்த்தது..” பாடலை பாடினார். ஒரு முறை கமல்ஹாசனை கட்டிப்பிடிக்கும் வாய்ப்பு கிடைத்ததாகவும், அதன் பிறகு தான் 3 நாட்கள் குளிக்கவே இல்லை எனவும் கூறியிருந்தார்.