கொடுமை... 20 வயசு பசங்க... கஞ்சா விற்பனையில் 5 இளைஞர்கள் கைது!
Dinamaalai May 26, 2025 03:48 AM

கொடுமை... அத்தனைப் பேருமே 20 வயதிற்குள்ளான பசங்க. தமிழகத்தில் சமீபமாக போதைப் பொருட்களின் புழக்கம் அதிகரித்து வரும் நிலையில், தூத்துக்குடி மாவட்டத்தில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டதாக 5 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அவர்களிடம் இருந்து 3  பைக்குகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. 

தூத்துக்குடியில் தாளமுத்துநகர் காவல் நிலைய உதவி ஆய்வாளர் முத்துராஜா மற்றும் போலீசார் நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போது மாப்பிள்ளையூரணி காமராஜ் பள்ளி அருகேயுள்ள ரோட்டில் சந்தேகப்படும்படியாக பைக்குடன் நின்று கொண்டிருந்த 2 பேரிடம் சோதனை செய்த போது 30 கிராம் கஞ்சாவை மறைத்து வைத்து இருப்பது தெரிய வந்தது. 

இது தொடர்பாக திரேஸ்புரம் மாதவன் காலனி யோனஸ் மகன் மரிய ஜெபஸ்டின் (20), முனியசாமி மகன் மாடசாமி (19) ஆகிய 2பேரை போலீசார் கைது செய்தனர். இதுபோல் மாதா நகர் 1வது தெரு அருகே கஞ்சா விற்பனை செய்த மாதா நகரைச் சேர்ந்த சுந்தரம் மகன் சந்தனகுமார் (20), தாளமுத்துநகர் குணசேகரன் மகன் முத்துக்குமார் 19 ஆகிய 2 பேரை கைது செய்தனர். 

அவர்களிடம் இருந்து 20 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.  இதுபோல் ராமதாஸ் நகரில் உள்ள திருமண மண்டபம் அருகே சந்தேகத்தின் பேரில் போலீசார் ஒரு வாலிபரை பிடித்து சோதனை செய்ததில் அவரிடம் 25 கிராம் கஞ்சா இருப்பது தெரிய வந்தது. 

இது தொடர்பாக தாளமுத்துநகர் சுனாமி காலனியைச் சேர்ந்த குணசீலன் மகன் கனகராஜ் (19) என்பவரை போலீசார் கைது செய்தனர். கைதானவர்களிடம் இருந்து மூன்று இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

 

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.