ஐபிஎல் 2025 இறுதிப் போட்டியில் ஆர்சிபி - 10 ஓவர்களில் பஞ்சாப் கதையை முடித்தது எப்படி?
BBC Tamil May 30, 2025 06:48 AM
Getty Images

முலான்பூரில் இன்று(மே 29) நடந்த ஐபிஎல் டி20 தொடரின் ப்ளே ஆஃப் சுற்றில் முதல் தகுதி ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் அணியை 8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது ஆர்சிபி அணி.

இதன் மூலம் ஆர்சிபி அணி 4வது முறையாக ஐபிஎல் இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றுள்ளது. 2009, 2011, 2016 ஆகிய ஆண்டுகளில் இறுதிப் போட்டிக்கு முன்னேறிய பிறகு, ஏறக்குறைய 9 ஆண்டுகள் கழித்து ஆர்சிபி பைனலுக்கு தகுதியாகியுள்ளது.

டாஸ் வென்ற ஆர்சிபி கேப்டன் ரஜத் பட்டிதார் பீல்டிங்கை தேர்வு செய்தார். முதலில் பேட் செய்த பஞ்சாப் அணி, 14.1 ஓவர்களில் 101 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. 102 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய ஆர்சிபி 10 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 106 ரன்கள் சேர்த்து 8 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது.

ஆர்சிபி தொடக்க ஆட்டக்கார்ர பில் சால்ட் 23 பந்துகளில் அரைசதம் அடித்து 56 ரன்களிலும், கேப்டன் பட்டிதர் 15 ரன்களிலும் ஆட்டமிழக்காமல் இருந்து அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றனர்.

3 விக்கெட்டுகளை இழந்து பஞ்சாப் திணறல்

பஞ்சாப் அணி பவர்ப்ளே ஓவருக்குள் 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.

யஷ் தயால் வீசிய முதல் ஓவரிலேயே 2வது பந்தில் பிரியன்ஸ் ஆர்யா 7 ரன்னில் குர்னல் பாண்டியாவிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார்.

பிரப்சிம்ரன் அதிரடியாக புவனேஷ்வர் ஓவரில் 2 பவுண்டரி அடித்து விக்கெட் கீப்பர் ஜிதேஷிடம் கேட்ச் கொடுத்து 18 ரன்னில் வெளியேறினார்.

Getty Images பிரப்சிம்ரன் அதிரடியாக புவனேஷ்வர் ஓவரில் 2 பவுண்டரி அடித்தார்

ஹேசல்வுட் 4வது ஓவரை வீச வந்தபோது, ஜோஸ் இங்கிலிஸ், ஷ்ரேயாஸ் இருவரும் களத்தில் இருந்தனர்.

ஷ்ரேயாஸ் அய்யரை ஏற்கெனவே 3 முறை ஆட்டமிழக்கச் செய்துள்ள ஹேசல்வுட் இந்த முறையும் கட்டுக்கோப்பாகவே பந்துவீசினார். ஹேசல்வுட் வீசிய 4வது பந்தில் விக்கெட் கீப்பர் ஜிதேஷிடம் கேட்ச் கொடுத்து ஒரு ரன்னில் ஷ்ரேயாஸ் ஆட்டமிழந்தார்.

இதன் மூலம் ஐபிஎல் தொடரில் ஷ்ரேயாஸை அதிகமுறை ஆட்டமிழக்கச் செய்த பந்துவீச்சாளர்களில் ரஸலுக்கு (5) அடுத்தார்போல் 4 முறை ஹேசல்வுட் ஆட்டமிழக்கச்செய்துள்ளார்.

ஐந்து ஓவர்கள் முடிவில் பஞ்சாப் அணி 3 விக்கெட் இழப்புக்கு 38 ரன்கள் சேர்த்துள்ளது. ஜோஸ் இங்கிலிஸ், நேபல் வதேரா களத்தில் உள்ளனர்.

10 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து திணறல் Getty Images ஷ்ரேயாஸ் அய்யர் ஆட்டமிழந்தார்

ஷ்ரேயாஸ் அய்யர் ஆட்டமிழந்த பிறகு ஹேசல்வுட் வீசிய 2வது ஓவரில் ஜோஸ் இங்கிலிஸும் (4) ரன்னில் விக்கெட்டை பறிகொடுத்தார். ஹேசல்வுட் தனது இரு ஓவர்களிலும் இரு விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

அடுத்து யஷ் தயால் வீசிய 7வது ஓவரில் பந்தை அடிக்க முயன்றபோது இன்சைட் எட்ஜ் எடுத்து க்ளீன் போல்டாகி நேஹல் வதேரா 8 ரன்னில் ஆட்டமிழந்தார்.

பிறகு சூயஷ் ஷர்மா பந்துவீச அழைக்கப்பட்டார். சுழற்பந்துவீச்சாளர் சூயஸ் ஷர்மா வீசிய 2வது பந்தில் பெரிய ஷாட்டுக்கு முயன்று சஷாங் சிங் 3 ரன்னில் கிளீன் போல்டானார்.

அடுத்து வந்த முசீர் கான் அதே ஓவரின் 5வது பந்தில் கால்காப்பில் வாங்கி சூயஷ் சர்மாவிடம் விக்கெட்டை இழந்தார். 9 ஓவர்களில் பஞ்சாப் அணி 7 விக்கெட் இழப்புக்கு 61 ரன்கள் என்று தடுமாறியது.

ஸ்டாய்னிஷ் மட்டுமே நம்பிக்கை தரக்கூடிய நிலையில் ஆடி வந்தார். ஆனால் விரைவாகவே சூயஷ் ஷர்மா வீசிய 11வது ஓவரில் ஸ்டாய்னிஷ் க்ளீன் போல்டாகி 26 ரன்னில் ஆட்டமிழந்தார்.

பஞ்சாப் அணியை காலி செய்த ஆர்சிபி Getty Images ஓமர்சாய் ஆட்டமிழந்த மகிழ்ச்சியில் ஹேசல்வுட்

பஞ்சாப் அணி பரிதாபகரமான நிலையில் இருக்கவே, ஹர்பிரித் பிரார், ஓமர்சாய் களத்தில் இருந்தனர். சூயஸ் ஷர்மா ஓவரில் ஓமர்சாய் ஒரு சிக்ஸர் விளாசி அணியை மீட்க முயன்றார். ஓமர்சாய் பேட் செய்யும் அளவுக்கு பிரார் பேட் செய்யக்கூடிய பேட்டர் இல்லை. இதனால் ஹர்பிரித் பிராரை ஸ்டிரைக்குக்கு வரவழைக்க ஆர்சிபி திட்டமிட்டது.

இதற்காக ஷெப்பர்ட் 14வது ஓவரை வீசினார். பவுண்டரி அடித்த ஓமர்சாய், அடுத்த பந்தில் ஒரு ரன் எடுத்து பிராரிடம் ஸ்டிரைக்கை கொடுத்தார். சரியான தருணத்துக்காக காத்திருந்த நிலையில் பிரார் க்ளீன் போல்டாகி ஷெப்பர்ட் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.

அடுத்ததாக 15வது ஓவரை ஹேசல்வுட் வீசினார். முதல் பந்திலேயே ஓமர்சாய் 18 ரன்னில் விக்கெட் கீப்பர் ஜிதேஷிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். ஹேசல்வுட் 3 ஓவது ஓவரில் 3வது விக்கெட்டை வீழ்த்தினார். சிறிய காயத்துக்குப் பிறகு மீண்டு வந்த ஹேசல்வுட் கலக்கலாகப் பந்துவீசி 3 விக்கெட்டுகளை வீழ்த்தி பஞ்சாப் அணி சிதறடித்தது.

பஞ்சாப் அணி 14.1 ஓவர்களில் 101 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. பஞ்சாப் பேட்டர்களில் 3 பேட்டர்கள் தவிர மற்ற அனைத்து பேட்டர்களும் ஒற்றை இலக்க ரன்னில் ஆட்டமிழந்தனர். அதிகபட்சமாக ஸ்டாய்னிஷ் 28 ரன்கள் சேர்த்தார்.

ஐபிஎல் வரலாற்றிலேயே ப்ளே ஆஃப் சுற்றில் சேர்க்கப்பட்ட 2வது குறைந்தபட்ச ஸ்கோர் இது. ஆர்சிபி ப்ளேயிங் லெவனில் ஹேசல்வுட் சேர்க்கப்பட்டதற்கான காரணத்தை இந்த ஆட்டம் வெளிப்படுத்திவிட்டது.

Getty Images கோலி விக்கெட்டை வீழ்த்திய ஜேமிஸன்

ஆர்சிபி அணி, 102 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கியது.

கோலி, சால்ட் பவுண்டரி அடித்து 11 ரன்கள் சேர்த்து இன்னிங்ஸை தொடங்கினர். அர்ஷ்தீப் வீசிய 3வது ஓவரில் சால்ட் பவுண்டரி, சிக்ஸர் என 13 ரன்கள் சேர்த்தார்.

ஜேமிஸன் வீசிய 4வது ஓவரில் டெஸ்ட் கிரிக்கெட் லென்த்தில் வீசப்பட்ட பந்தில் கோலி 12 ரன்னில் விக்கெட் கீப்பர் இங்கிலிஸிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார்.

ஓமர்சாய் வீசிய 5வது ஓவரில் சால்ட் 2 பவுண்டரிகள் அடிக்கவே, 5 ஓவர்கள் முடிவில் ஆர்சிபி ஒரு விக்கெட் இழப்புக்கு 40 ரன்கள் சேர்த்தது.

ஜேமிஸன் பந்துவீச்சை வெளுத்த சால்ட்

பவர்ப்ளேவில் கடைசி ஓவரை வீசிய ஜேமிஸனுக்கு, சால்ட் அதிர்ச்சி மேல் அதிர்ச்சியளித்தார். மூன்று பவுண்டரி ஒரு சிக்ஸர் என 21 ரன்கள் சேர்த்து பஞ்சாப் அணியை மிரள வைத்தார்.

பிரார் வீசிய 7வது ஓவரிலும் சால்ட் சிக்ஸர் அடித்து ஆர்சியை வெற்றிக்கு அருகே அழைத்துச் சென்றார். சால்ட் பிரார் பந்துவீச்சில் பவுண்டரி அடித்து 23 பந்துகளில் அரைசதம் அடித்தார்.

முசிர்கான் பந்துவீச்சில் சிக்ஸர் பவுண்டரி அடித்த அகர்வால் அதே ஓவரின் கடைசி பந்தில் பிளிக் ஷாட் அடிக்க முயன்றார். விக்கெட் கீப்பர் ஜிதேஷின் கால்காப்பில் பட்டு ஸ்லிப்பில் நின்றிருந்த ஸ்ரேயாஸிடம் கேட்சாக மாறியது. இதையடுத்து, மயங்க் 19 ரன்னில் ஆட்டமிழந்தார்.

முசிர் கான் வீசிய 10வது ஓவரில் பட்டிதார் சிக்ஸர், பவுண்டரி அடிக்கவே, ஆர்சிபி அணி 2 விக்கெட் இழப்புக்கு 106 ரன்கள் சேர்த்து 8 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது. ஐபிஎல் வரலாற்றில் ப்ளே ஆஃப் சுற்றில் பெறப்பட்ட மிகப்பெரிய வெற்றி இது.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.