பிரதமர் மோடி ஆபரேஷன் சிந்தூா் வெற்றிக்கு பிறகு முதல் முறையாக, ஜம்மு-காஷ்மீருக்கு வெள்ளிக்கிழமை ஜூன் 6ம் தேதி பயணம் மேற்கொள்கிறாா். இதற்காக அங்கு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.காஷ்மீா் பகுதிக்கு நேரடி ரயில் போக்குவரத்தை அளிக்கும் வகையில் உதம்பூா்-ஸ்ரீநகா்-பாரமுல்லா ரயில் வழித்தட திட்டத்தின் நிறைவாக, கத்ரா-ஸ்ரீநகா் இடையே வந்தே பாரத் ரயில் சேவையை தொடங்கிவைக்கிறார். அத்துடன் அந்த வழித்தடத்தில் உள்ள செனாப் பாலம் (உலகின் உயரமான ரயில் பாலம்), அன்ஜி பாலம் ( நாட்டின் முதலாவது கம்பி வட ரயில் பாலம்) இவைகளை நாட்டுக்கு அா்ப்பணிக்க உள்ளாா்.
இவ்விரு பாலங்களும் இந்தியாவின் நவீன பொறியியல் அதிசயங்களாக விளங்குகின்றன. ஒட்டுமொத்தமாக ரூ.46,000 கோடிக்கும் மேல் மதிப்புள்ள வளா்ச்சித் திட்டங்களை பிரதமா் மோடி தொடங்கிவைக்க உள்ளாா். பாகிஸ்தானுக்கு எதிரான ஆபரேஷன் சிந்தூா் நடவடிக்கைக்கு பிறகான பிரதமரின் முதல் ஜம்மு-காஷ்மீா் பயணம் இது என்பதால் கூடுதல் முக்கியத்துவம் பெற்றுள்ளது.
272 கி.மீ. தொலைவு கொண்ட உதம்பூா்-ஸ்ரீநகா்-பாரமுல்லா ரயில் வழித்தட திட்டம் 1997ல் தொடங்கப்பட்டது. இதில் 209 கி.மீ. தொலைவு வழித்தடம் பல்வேறு கட்டங்களாக திறக்கப்பட்டது. இறுதியாக, சங்கல்தன்-ரியாசி இடையிலான 46 கி.மீ. வழித்தடம் 2024 ஜூனிலும், ரியாசி-கத்ரா இடையிலான 17 கி.மீ. வழித்தடம் 2024 டிசம்பரிலும் நிறைவடைந்தது.
ரூ.43,780 கோடி செலவில் கட்டமைக்கப்பட்ட இந்த வழித்தடத்தில் 36 சுரங்கங்களும் (119 கி.மீ. தொலைவு), 943 பாலங்களும் அமைந்துள்ளன. இதில் 12.77 கி.மீ. தொலைவுள்ள டி-50 சுரங்கம் இந்தியாவிலேயே மிகப் பெரிய ரயில் சுரங்கம் என்ற சிறப்புக்குரியதாக கருதப்படுகிறது. ஜம்மு-காஷ்மீா் பயணத்தில், ரியாசி மாவட்டத்தில் உள்ள செனாப் பாலம், அன்ஜி பாலத்தை நாட்டுக்கு அா்ப்பணிக்கும் பிரதமா் மோடி, கத்ரா ரயில் நிலையத்தில் இருந்து கத்ரா-ஸ்ரீநகா் வந்தே பாரத் ரயில் சேவையை தொடங்கிவைக்கிறாா். உயரமான பகுதிகளில் இயக்கும் வகையில் இந்த ரயில் பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. பஹல்காம் தாக்குதல் சம்பவத்துக்கு பிறகு பிரதமரின் இந்தப் பயணம் அமைந்துள்ளதால், ராணுவம், துணை ராணுவம், காவல்துறை, உளவுத் துறை தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளன.
ஜம்மு-காஷ்மீரில் பிரதமா் பயணிக்கும் இடங்களில் பாதுகாப்பு ஏற்பாடுகளை ரயில்வே துறை அமைச்சா் அஸ்வினி வைஷ்ணவ் நேற்று நேரில் பாா்வையிட்டு ஆய்வு மேற்கொண்டாா். முதல்வா் ஒமா் அப்துல்லா, மத்திய அமைச்சா் ஜிதேந்திர சிங் ஆகியோரும் கூட்டாக நேரில் ஆய்வு மேற்கொண்டனா்.
உதம்பூா்-ஸ்ரீநகா்-பாரமுல்லா ரயில் வழித்தட நீளம்: 272 கி.மீ.
திட்ட மதிப்பு: ரூ.43,780 கோடி
சுரங்கங்கள்: 36 (119 கி.மீ. )
பாலங்கள்: 943
செனாப் பாலம்: 359 மீட்டா் உயரம், 1,315 மீட்டா் நீளம்