இந்தியாவில் உள்ள மாநில மொழிகள் அனைத்தும் ஆட்சி மொழிகள் ஆக்க வேண்டும் ... வைகோ!
Dinamaalai June 21, 2025 08:48 PM

கோவை விமான நிலையத்தில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ செய்தியாளர் சந்திப்பில் “மதிமுகவின் 31வது பொதுகுழு நாளை பெரியாரை வழங்கிய ஈரோட்டில் நடைபெற உள்ளது. அந்த பொதுக்குழுவில் சிறந்த முடிவுகள் தீர்மானங்களாக அறிவிக்கப்படும். ஆங்கில மொழி குறித்த அமித்ஷாவின் உளறல்களுக்கு எல்லையே இல்லை. ஆங்கிலம் உலக மொழி, ஆங்கிலம் தெரிந்தால் உலகில் பல நாடுகளுக்கும் சென்று வளரலாம். அதனால்தான் பேரறிஞர் அண்ணா தாய் தமிழும் ஆங்கிலமும் தான் தமிழ்நாட்டில் இருக்கும் என்று கூறினார். அதுமட்டுமின்றி இந்தியாவில் உள்ள மாநில மொழிகள் அனைத்தும் ஆட்சி மொழிகள் ஆக்க வேண்டும் என்று மாநிலங்களவையிலேயே அவர் பேசினார். திராவிட இயக்கம் இந்த தீர்மானத்தை முன்வைக்கிறது.

அதனை மதிமுகவும் வலியுறுத்தி வருகிறது. அதே சமயம் பாஜகவிற்கு இதில் விருப்பமும் இல்லை, இந்தியையும் சமஸ்கிருதத்தையும் திணிக்க வேண்டும் என்பதிலேயே தீவிரமாக இருக்கிறது. அதில் அவர்கள் தோற்றுப் போவார்கள். பாஜக, ஆர்எஸ்எஸ் போன்ற அமைப்புகள் இந்தியா என்று அழைக்கக்கூடாது, பாரத் என்று தான் அழைக்க வேண்டும். தலைநகர் டெல்லிக்கு பதில் வாரணாசியை மாற்ற வேண்டும். கிறிஸ்தவர்களுக்கும், இஸ்லாமியர்களுக்கும் ஓட்டுரிமை கொடுக்கக் கூடாது. இந்தியும் சமஸ்கிருதம் மட்டும்தான் இந்தியா முழுவதும் பரப்பப்பட வேண்டும் என்று நினைக்கின்றனர். பல மாநிலங்கள் அதனை ஏற்றுக் கொள்ளவில்லை. இந்தி எதிர்ப்பில் ஈடுபடாத மாநிலங்களான கர்நாடகா, மராட்டியம், பஞ்சாப், மேற்குவங்கம் ஆகியவை தற்போது இந்தி வேண்டாம் என தீர்மானம் போடுகின்றனர். இவர்கள் திணிக்க நினைக்கும் பொழுது அதற்கான எதிர்ப்புகள் வலுத்து வருகிறது.
 
2017 ம் ஆண்டு திமுகவுடன் கரம் கோர்ப்பது என்று மதிமுக எடுத்த தீர்மானத்தில் எந்த மாற்றமும் இல்லை. வேறு எந்த கட்சியுடன் சேர்வதற்கான அவசியமும் இல்லை.  இதைப் பற்றி ரகசியமாக பேசுகின்ற பழக்கமும் எங்களுக்கு இல்லை பாமக ஒரு வலுவான கட்சி, தற்போது அங்கு நிலவி வருவது உட்கட்சி பிரச்சனை. அதைப்பற்றி எந்த கருத்தையும் கூறுவதற்கு விரும்பவில்லை. தற்பொழுது தந்தைக்கும், மகனுக்கும் இடையே கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டு இருப்பதால் 2 அணி போன்று தெரிகிறது. காலப்போக்கில் அதனை எல்லாம் மாற்றிக் கொண்டு கருத்து வேறுபாடுகளை மறந்து ஒன்றாவதற்கும் வாய்ப்பு இருக்கிறது” என தெரிவித்துள்ளார்.  

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.