அதே டெய்லர் அதே வாடகை!.. ட்ரோலில் சிக்கிய ஜனநாயகன் கிளிம்ப்ஸ் வீடியோ!..
CineReporters Tamil June 22, 2025 03:48 PM

Jananayagan: கோட் படத்திற்கு பின் ஹெச்.வினோத் இயக்கத்தில் விஜய் நடித்திருக்கும் திரைப்படம்தான் ஜனநாயகன். விஜய் அரசியலுக்கு போவதால் இதுவே அவரின் கடைசிப்படம் என சொல்லப்பட்டது. எனவே, விஜய் ரசிகர்களிடம் இந்த படத்தின் மீது அதிக எதிர்பார்ப்பு இருக்கிறது. தெலுங்கு சினிமாவில் முன்னணி தயாரிப்பு நிறுவனமாக இருக்கும் கேவிஎன் புரடெக்ஷன் இப்படத்தை தயாரித்திருக்கிறது.

அனிருத் இசையமைத்துள்ள இந்த படத்தில் பூஜா ஹெக்டே, பாபி தியோல், மமிதா பைஜூ, பிரகாஷ்ராஜ் உள்ளிட்ட பலரும் நடித்திருக்கிறார்கள். இந்த படம் துவங்கப்பட்ட போதே தெலுங்கில் பாலகிருஷ்ணா நடித்து ஹிட் அடித்த பகவந்த் கேசரி படத்தின் ரீமேக் என சொல்லப்பட்டது.


படப்பிடிப்பு துவங்கி நடந்து வந்த நிலையில் இது பகவந்த் கேசரி படத்தின் ரீமேக் இல்லை. வேறு கதை என சிலர் சொன்னார்கள். பகவந்த் கேசரியில் ஒரு காட்சியை மட்டுமே படத்தில் பயன்படுத்தி இருக்கிறார்கள். அதற்காகவே படத்தின் ரீமேக் உரிமையை வாங்கி இருக்கிறார்கள் என சொன்னார்கள். எனவே, இதில் குழப்பம் நீடித்து வந்தது.

ஜனநாயகன் தொடர்பான போஸ்டர்களில் தொண்டர்களுடன் விஜய் செல்பி எடுப்பது போலவும், கையில் சாட்டையை வைத்துக்கொண்டிருப்பது போலவும் போஸ்டர்களை வெளியிட்டார்கள். எனவே, இது அரசியல் தொடர்பான படம் எனவும் கருதப்பட்டது.

இந்நிலையில், இன்று விஜயின் பிறந்தநாள் என்பதால் நள்ளிரவு 12 மணியளவில் ஜனநாயகன் படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோவை படக்குழு வெளியிட்டிருக்கிறது. அதில், போலீஸ் உடையில் விஜய் ஸ்டைலாக நடந்து வரும் காட்சிகள் இடம் பெற்றிருக்கிறது.

இதேபோன்ற காட்சிகள் பாலையாவின் பகவந்த் கேசரி படத்திலும் இடம் பெற்றிருந்தது. எனவே, இரண்டு காட்சிகளையும் ஒப்பிட்டு இது பகவந்த் கேசரி படத்தின் ரீமேக்தான் என ரசிகர்கள் சொல்ல துவங்கிவிட்டனர். விஜய் அரசியலுக்கு வந்துவிட்டதால் பகவந்த் கேசரி கதையில் அரசியல் தொடர்பான சில காட்சிகளை சேர்த்து ஜனநாயகன் படத்தை எடுத்திருப்பார்கள் என்றே நம்பப்படுகிறது.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.