வால்பாறையில் திடீர் மண்சரிவு: தேசிய பேரிடர் மீட்பு குழு ஆய்வு: பாதுகாப்பற்ற நிலையில் காணப்பட்ட வீடுகளில் உள்ளவர்கள் நிலை..?
Seithipunal Tamil June 28, 2025 11:48 AM

கனமழை காரணமாக வால்பாறை பகுதியில் திடீர் மண்சரிவு ஏற்பட்டுள்ளது. இதனால் நேற்று நள்ளிரவு பரபரப்பு நிலவியுள்ளது. இதனை தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் ஆய்வு செய்துள்ளனர்.

கோவை மாவட்டம், வால்பாறை அடுத்துள்ள சோலையார் அணை செல்லும் வழியில் சேடல் அணை உள்ளது. சோலையார் அணையில் 160 அடி நீர் மட்டம் உயர்ந்தால், அணை நீர் தானாக வழிந்து பரம்பிக்குளம் அணைக்கு செல்லும் சேடல் பகுதியாகும். இங்கு சாலை பணிகளின் போது சில இடங்களில் செங்குத்தாக மண் வெட்டி எடுக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து கனமழை காரணமாக நேற்று அதிகாலை பல இடங்களில் மண்சரிவு ஏற்பட்டுள்ளது. அங்கு மண் மற்றும் பாறை சாலையில் விழுந்துள்ளன.

இது தொடர்பில் அறிந்த தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் சம்பவ இடத்திற்கு சென்று ஆய்வு செய்துள்ளனர். அங்கு பாதுகாப்பற்ற நிலையில் காணப்பட்ட 03 வீடுகளில் வசித்தவர்களை அப்புறப்படுத்தி, அவர்களை உறவினர் வீடுகளுக்கு அனுப்பி வைத்துள்ளனர். 

இந்நிலையில், நேற்று அப்பகுதிக்கு சென்ற வால்பாறை நகராட்சி தலைவர், தாசில்தார், நகராட்சி ஆணையர், நெடுஞ்சாலை துறை அதிகாரிகள், நகராட்சி பொறியாளர் மேற்பார்வையில், பாறைகள் அகற்றப்பட்டு, முதற்கட்ட பாதுகாப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு உள்ளது.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.