மத்திய பிரதேச மாநிலம் இந்தூரைச் சேர்ந்த புகழ்பெற்ற போக்குவரத்து தொழிலதிபர் ராஜா ரகுவன்ஷி கொலை செய்யப்பட்ட வழக்கு நாடு முழுவதும் பெரும் அதிர்வை ஏற்படுத்தியுள்ளது. இந்தக் கொலை வழக்கில் அவரது மனைவி சோனம் ரகுவன்ஷி உட்பட ஐந்து பேர் தற்போது ஷில்லாங் காவல்துறையால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில், சோனமின் சகோதரரான கோவிந்த் ரகுவன்ஷி, ஊடகங்களுக்கு அளித்த பேட்டியில் தனது உணர்வுகளை வெளிப்படுத்தியுள்ளார். “என் சகோதரியை ஒருமுறை மட்டுமே சந்திக்க விரும்புகிறேன். அவரிடம் ஒரே கேள்வி தான்.. ஏன் ராஜாவை கொன்றாய்?” என கோவிந்த் கூறினார். மேலும், “திருமணத்தின் போது ராஜாவின் குடும்பத்தினர் சோனத்திற்கு 15 லட்சம் ரூபாய் மதிப்பிலான நகைகளை வழங்கினர்.
அந்த நகைகள் அனைத்தும் மீண்டும் ராஜா குடும்பத்திற்கே திருப்பித் தரப்பட்டுள்ளன. இப்போது சோனத்தின் எந்த உடைமையும் எங்களிடம் இல்லை,” என்றும் அவர் கூறினார். இதற்கிடையே ராஜா ரகுவன்ஷியின் குடும்பத்தினர், சோனத்தின் பிண்டதானத்தை செய்வதற்குத் தயார் எனக் கூறியதைக் குறிப்பிட்ட கோவிந்த், “அவர் என் சகோதரி மட்டுமல்ல, ராஜாவின் குடும்பத்தின் மருமகளும் கூட.
எனவே அந்த குடும்பம் பிண்டதானம் செய்ய விரும்பினால், நாங்களும் அவர்களுடன் நிற்போம்” என தெரிவித்தார். இது அவரது குடும்பத்தின் உருக்கமான முடிவாக இருக்கிறது. முக்கியமான சான்றுகளாக சோனத்தின் துப்பாக்கியும், நகைகளும் இந்தூரில் போலீசாரால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. மேலும், சோனம் ராஜாவை கொன்ற பிறகு ஷில்லாங்கிலிருந்து இந்தூருக்குச் செல்லும் போது அணிந்திருந்த புர்கா இப்போது வரை கண்டுபிடிக்கப்படவில்லை என போலீசார் தெரிவித்துள்ளனர்.
வழக்கின் விசாரணையை முடித்த ஷில்லாங் போலீசார் விரைவில் குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்யவுள்ள நிலையில், இந்த வழக்கு மேலும் சிக்கலாகும் முன் அதற்கான முடிவு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.