மே 9 ஆம் தேதி இரவு அமெரிக்க துணை அதிபர் ஜே.டி. வான்ஸ் பிரதமர் நரேந்திர மோதியை தொலைபேசியில் அழைத்தபோது, தானும் அதே அறையில் இருந்ததாக இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் செவ்வாய்க்கிழமையன்று தெரிவித்துள்ளார்.
பாகிஸ்தானின் அச்சுறுத்தல்களுக்கு இந்தியா பயப்படாது, மாறாக அதற்குப் பதிலடி கொடுக்கும் என்று பிரதமர் அப்போது தெளிவாகக் கூறியதாகக் குறிப்பிட்டார் ஜெய்சங்கர்.
மே மாத தொடக்கத்தில் இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையே தொடங்கிய ராணுவ மோதலை நிறுத்திவிட்டதாக, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தொடர்ந்து கூறி வருகிறார்.
இந்தியா மற்றும் பாகிஸ்தானுடனான வர்த்தகத்தை நிறுத்துவதாக மிரட்டியதாகவும், அதன் பிறகு இரு நாடுகளும் போர் நிறுத்தத்திற்கு ஒப்புக்கொண்டதாகவும் அப்போது டிரம்ப் தெரிவித்தார்.
ஆனால் டிரம்ப் கூறிய இந்த கருத்துக்களை இந்தியா தொடர்ச்சியாக நிராகரித்து வருகிறது.
கடந்த மாதம், பிரதமர் மோதி ஜி-7 உச்சி மாநாட்டில் கலந்து கொள்ள கனடா சென்றார், அங்கிருந்து அவர் அதிபர் டிரம்புடன் தொலைபேசியில் பேசினார்.
இந்த உரையாடலின் விவரங்களை அளித்த இந்திய வெளியுறவு செயலாளர் விக்ரம் மிஸ்ரி, பாகிஸ்தானுடனான சண்டை நிறுத்தம் இருதரப்பு ஒப்பந்தம் என்றும், எந்த மூன்றாவது நாட்டின் தலையீட்டாலும் அது நடக்கவில்லை என்றும் பிரதமர் மோதி டிரம்பிடம் தெளிவாகக் கூறியதாகக் குறிப்பிட்டார்.
சண்டை நிறுத்தம் தொடர்பாக, அமெரிக்காவுடன் வர்த்தகம் குறித்து எந்தப் பேச்சுவார்த்தையும் நடத்தப்படவில்லை என்று டிரம்பிடம் பிரதமர் மோதி கூறியதாகவும் விக்ரம் மிஸ்ரி கூறியிருந்தார்.
தற்போது இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ். ஜெய்சங்கர், குவாட் நாடுகளின் வெளியுறவு அமைச்சர்கள் கூட்டத்தில் கலந்து கொள்ள அமெரிக்கா சென்றுள்ளார்.
இந்தப் பயணத்தின் போது, அமெரிக்க பத்திரிகையான நியூஸ் வீக்கிற்கு, எஸ். ஜெய்சங்கர் அளித்த பேட்டியில், போர் நிறுத்தம் முற்றிலும் இருதரப்பு சார்ந்தது என்று மீண்டும் ஒருமுறை கூறியுள்ளார்.
மே மாத தொடக்கத்தில், இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையே நடந்த ராணுவ மோதலின் போது, அமெரிக்க துணை அதிபர் ஜே.டி. வான்ஸ் பிரதமர் நரேந்திர மோதியுடன் பேசினார்.
அமெரிக்கா இந்த உரையாடலை ஒரு சண்டை நிறுத்தமாக முன்வைத்தது. உண்மையில், சண்டை நிறுத்தத்தை ட்ரூத் சோசியல் தளத்தில் அறிவித்தவரும் அமெரிக்க அதிபர் டிரம்ப் தான்.
பின்னர் மே 10 அன்று இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையே சண்டை நிறுத்தம் அறிவிக்கப்பட்டது.
செவ்வாய்க்கிழமை, இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் அமெரிக்க பத்திரிகையான 'நியூஸ் வீக்'-க்கு பேட்டி அளித்தார் .
அப்போது, பஹல்காம் தாக்குதல் முதல் 'ஆபரேஷன் சிந்தூர்' மற்றும் சண்டை நிறுத்தம் வரை கேட்கப்பட்ட பல்வேறு கேள்விகளுக்கு அவர் பதிலளித்தார்.
"அதிபர் டிரம்ப் மற்றும் பிரதமர் மோதிக்கு இடையேயான பேச்சுவார்த்தைக்குப் பிறகு இந்தியா வெளியிட்ட அறிக்கையில், இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் எந்த மூன்றாவது நாட்டின் மத்தியஸ்தமும் ஏற்றுக்கொள்ளத்தக்கது அல்ல என்று கூறப்பட்டது"
"ஆனால், மோதலைத் தடுக்க வர்த்தகம் ஒரு கருவியாகப் பயன்படுத்தப்பட்டது என்று அதிபர் டிரம்ப் பலமுறை கூறியுள்ளார். இது வர்த்தக ஒப்பந்தப் பேச்சுவார்த்தைகளில் ஏதேனும் தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறதா?" என்று நேர்காணலின் போது, முன்னால் அமர்ந்திருந்த ஒருவர் ஜெய்சங்கரிடம் கேள்வியெழுப்பினார்.
இதற்குப் பதிலளித்த எஸ். ஜெய்சங்கர்,"மே 9 ஆம் தேதி இரவு துணை அதிபர் ஜே.டி. வான்ஸ் பிரதமர் மோதியுடன் பேசியபோது நான் அறையில் இருந்தேன். சில விஷயங்களில் நாம் உடன்படவில்லை என்றால், பாகிஸ்தான் இந்தியா மீது பெரிய தாக்குதலை நடத்தலாம் என்று அவர் கூறினார்.
ஆனால் பாகிஸ்தானின் அச்சுறுத்தல்களால் பிரதமர் பாதிக்கப்படவில்லை. மாறாக, இந்தியாவிடமிருந்து நிச்சயமாக பதில் கிடைக்கும் என்று அவர் தெளிவாகக் குறிப்பிட்டார்" என்றார்.
பாகிஸ்தானுடனான எங்கள் அனைத்து பிரச்னைகளும் பரஸ்பரமானவை அதாவது இருதரப்பையும் சார்ந்தவை என்று பல ஆண்டுகளாக தேசிய அளவில் ஒருமித்த கருத்து உள்ளது என்று குறிப்பிட்டார் எஸ். ஜெய்சங்கர்.
தொடர்ந்து பேசிய அவர், "இது அந்த இரவைப் பற்றியது, உங்களுக்குத் தெரிந்தவாறே, அந்த இரவில் பாகிஸ்தான் எங்களை கடுமையாகத் தாக்கியது. நாங்கள் உடனடியாக பதிலளித்தோம். மறுநாள் காலை மார்கோ ரூபியோ எனக்கு போன் செய்து பாகிஸ்தான் பேச்சுவார்த்தைக்குத் தயாராக இருப்பதாகக் கூறினார். நான் உணர்ந்ததை மட்டுமே நான் உங்களுக்குச் சொல்ல முடியும். மீதமுள்ளவற்றை நீங்கள் புரிந்து கொள்ளலாம்" என்றும் தெரிவித்தார்.
2025 ஏப்ரலில், டிரம்ப் நிர்வாகம் சுங்க வரிகளுக்கு 90 நாள் இடைநிறுத்தத்தை அறிவித்தது. இந்த தடை ஜூலை 8-ஆம் தேதி முடிவடையும் எனக் கூறப்பட்டது.
செவ்வாயன்று, இந்தியாவுடனான வர்த்தக ஒப்பந்தம் குறித்து டிரம்ப் கூறுகையில் , "இந்தியாவுடன் நாம் ஒரு ஒப்பந்தம் செய்யப் போகிறோம் என்று நினைக்கிறேன், அது சற்று வித்தியாசமான ஒப்பந்தமாக இருக்கும்.
இதில், இந்தியாவுக்குச் சென்று போட்டியிட நமக்கு வாய்ப்பு கிடைக்கும். தற்போது இந்தியா யாரையும் தனது சந்தையில் எளிதில் நுழைய அனுமதிப்பதில்லை. ஆனால் இந்தியா இப்போது இதைச் செய்யும் என்று நான் நினைக்கிறேன், இது நடந்தால் குறைந்த வரிகளுடன் ஒரு ஒப்பந்தத்தை நாம் செய்யலாம்" என்றார்.
வர்த்தக ஒப்பந்தம் குறித்து பேசிய எஸ். ஜெய்சங்கர், "நாங்கள் ஒரு சிக்கலான வர்த்தக பேச்சுவார்த்தையின் மத்தியில் இருக்கிறோம். இது விரைவில் நிறைவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, இரு தரப்பினரும் அதில் ஈடுபட்டுள்ளனர்" என்றார்.
பாகிஸ்தானிடமிருந்து "பெரிய தாக்குதல்" இருக்கலாம் என்று அமெரிக்கா எச்சரித்த போதிலும், அணு ஆயுத அச்சுறுத்தல்கள் அல்லது ராஜ்ஜீய அழுத்தங்களால் பாதிக்கப்படாமல் இந்தியா உறுதியாக நின்று ராணுவ ரீதியாக பதிலளித்ததாக ஜெய்சங்கர் கூறினார்.
ஜெய்சங்கர் கூறுகையில், "கடந்த நாற்பது ஆண்டுகளாக நாம் பயங்கரவாதத்தை எதிர்கொண்டு வருகிறோம் . மும்பை தாக்குதல், நாடாளுமன்றத் தாக்குதல் மற்றும் சமீபத்திய பஹல்காம் தாக்குதல். இந்தத் தாக்குதல்கள் இந்தியாவுடைய சகிப்புத்தன்மையின் எல்லையைக் கடந்துவிட்டன" என்றும் தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர், "பயங்கரவாதிகளும் அவர்களின் ஆதரவாளர்களும் விட்டு வைக்கப்பட மாட்டார்கள் என்பதை நாங்கள் தெளிவுபடுத்தியுள்ளோம்.
அவர்கள் எல்லையைத் தாண்டி இருந்தாலும் சரி அல்லது வெளிப்படையாக தங்கள் தலைமையகத்தை நடத்தினாலும் சரி. அவர்கள் எங்கிருக்கிறார்கள் என்பது எங்களுக்குத் தெரியும், நாங்கள் அவர்களுக்குப் பதிலடி கொடுத்துள்ளோம்"என்றும் அவர் குறிப்பிட்டார்.
இந்தியாவும் பாகிஸ்தானும் அணு ஆயுத சக்தி கொண்ட நாடுகள். ஆனால் அணு ஆயுதம் தொடர்பான இரு நாடுகளின் கொள்கைகளும் வேறுபட்டவை.
தனது பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டால், அணு ஆயுதங்களைப் பயன்படுத்தலாம் என்று பாகிஸ்தான் அடிக்கடி கூறுகிறது.
இரு நாடுகளுக்கும் இடையே பதற்றம் நிலவியபோது, எந்தச் சூழ்நிலையில் அணு ஆயுதங்களைப் பயன்படுத்தலாம் என்பதை பாகிஸ்தான் ஆய்வாளர்கள் விளக்கிக் கொண்டிருந்தனர்.
பாகிஸ்தானின் பிரபல பத்திரிகையாளரும் ஆய்வாளருமான நஜம் சேதி பாகிஸ்தான் செய்தி சேனலான சாமா டிவியிடம் பேசுகையில், "இந்தியா இரண்டு சூழ்நிலைகளில் போரைத் தொடங்கியுள்ளது என்பதை பாகிஸ்தான் ஏற்றுக்கொள்ளும்.
ஒன்று தண்ணீரை நிறுத்துவதன் மூலம், மற்றொன்று கராச்சி துறைமுகத்தைத் தடுப்பதன் மூலம்.
இந்த இரண்டு சூழ்நிலைகளையும் பாகிஸ்தான் ஒரு போர் நடவடிக்கையாக எடுத்துக் கொள்ளும், அத்தகைய சூழ்நிலையில் அணு ஆயுதங்களைப் பயன்படுத்த எங்களுக்கு உரிமை உண்டு.
இந்த விஷயத்தில் பாகிஸ்தானின் சிந்தனை மிகவும் தெளிவாக உள்ளது. இவை இரண்டும் பாகிஸ்தானை எச்சரிக்கும் பகுதிகள்" என்று கூறினார்.
இந்தியா முதலில் அணு ஆயுதங்களைப் பயன்படுத்துவதில்லை என்ற கொள்கையைப் பின்பற்றுகிறது. ஆனாலும், "இதுவரை அணு ஆயுதங்களை முதலில் பயன்படுத்த மாட்டோம் என்பதே எங்கள் கொள்கை, ஆனால் எதிர்காலத்தில் இந்தக் கொள்கை சூழ்நிலையைப் பொறுத்தது" என்று ஆகஸ்ட் 2019 இல், இந்தியாவின் பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறியிருந்தார்.
பாகிஸ்தான் அணு ஆயுதங்களைப் பயன்படுத்துவதாக அச்சுறுத்தினாலும், அதற்கு அஞ்சப்போவதில்லை என்று இந்தியாவின் தற்போதைய தலைமை கூறுகிறது.
செவ்வாயன்று பேசிய ஜெய்சங்கரும், "நாங்கள் இனி 'அணுசக்தி அச்சுறுத்தலுக்கு' ஆளாக மாட்டோம். யாராவது நம்மை காயப்படுத்தினால், நாங்கள் பதிலடி கொடுப்போம்" என்று கூறினார்.
பயங்கரவாதத்தை முடிவுக்குக் கொண்டுவருவதைத் தவிர வேறு எந்தப் பிரச்னையிலும் பாகிஸ்தானுடன் பேச்சுவார்த்தை இருக்காது என்று எஸ். ஜெய்சங்கர் கூறுகிறார். தேவைப்பட்டால், இந்தியா மீண்டும் தாக்குதல் நடத்தும் என்றும் அவர் கூறுகிறார்.
"பயங்கரவாதிகள் தப்பிக்க முடியாத ஒரு கொள்கையை நோக்கி இப்போது நாங்கள் நகர்ந்துகொண்டுள்ளோம்.
பயங்கரவாதத்தின் பிரதிநிதிகள் இருந்தால் அதற்கு நாடு பொறுப்பல்ல என்று கூறுவதை நாங்கள் நம்பவில்லை. இதில் பாகிஸ்தான் அரசாங்கம் முழுமையாக ஈடுபட்டுள்ளது என்பது எங்களுக்குத் தெளிவாகத் தெரிகிறது." என்றார் ஜெய்சங்கர்.
பாகிஸ்தான் பிரதமர் ஷாபாஸ் ஷெரீப் அமைதிப் பேச்சுவார்த்தைக்கான தனது விருப்பத்தை வெளிப்படுத்தியுள்ளார், ஆனால் பயங்கரவாதத்தைத் தொடரும் அதே வேளையில் மற்ற பிரச்னைகள் குறித்தும் பாகிஸ்தான் பேச விரும்பினால், அது நடைமுறைக்கு சாத்தியமில்லை என்று இந்தியா தெளிவாகக் கூறியுள்ளது.
"பயங்கரவாதம் குறித்துப் பேச நாங்கள் தயாராக இருக்கிறோம், ஆனால் பயங்கரவாதத்தைத் தொடரும் அதே வேளையில் மற்ற பிரச்சினைகள் குறித்தும் விவாதிப்போம் என்ற எதிர்பார்ப்பு நடைமுறைக்கு ஏற்றதல்ல" என்று விளக்கினார் எஸ். ஜெய்சங்கர்.
"பயங்கரவாதம் என்பது அண்டை வீட்டாருக்கு அழுத்தம் கொடுத்து, இப்போதே வந்து பேசுங்கள் என்று சொல்வதற்கான ஒரு ராஜ்ஜீய வழியாக இருக்க முடியாது.
நீங்கள் ஒரே நேரத்தில் ஒரு நல்ல அண்டை வீட்டாராகவும் பயங்கரவாதியாகவும் இருக்க முடியாது. எனவே அவர்கள் பயங்கரவாதத்தை நிறுத்த வேண்டும்."
இஸ்ரேல்-இரான் மோதல் மற்றும் இரானின் அணுசக்தி நிலையங்கள் மீதான தாக்குதல்கள், இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான பதற்றம் குறித்த பிரச்னையை சர்வதேச அளவில் பின்னுக்குத் தள்ளியுள்ளன.
இந்த நெருக்கடியைத் தீர்க்க இந்தியா முன்வந்துள்ளதாக ஜெய்சங்கர் கூறுகிறார்.
"உண்மையில் நாங்கள் இரு நாடுகளுடனும், அதாவது இஸ்ரேல் மற்றும் இரானுடன் மிகச் சிறந்த உறவைக் கொண்டுள்ளோம்.
இரு நாடுகளுடனும் மிகவும் வெளிப்படையாகவும் நேர்மையாகவும் பேசும் திறன் கொண்ட சில நாடுகளில் நாங்களும் ஒன்றாக இருக்க வேண்டும். நாங்கள் பல ஆண்டுகளாக இதைச் செய்ய முயற்சித்து வருகிறோம்" என்று அவர் கூறினார்.
உலக அளவில் அமெரிக்கா ஒரு பெரிய மாற்றத்தைக் கொண்டு வருவதாகவும், தற்போது நாடுகள் கூட்டணிகளிலிருந்து விலகி தங்கள் சொந்த நலன்களை மட்டுமே பின்பற்றும் போக்கு அதிகரித்து வருவதாகவும் ஜெய்சங்கர் குறிப்பிட்டார்.
"அமெரிக்காவின் நிலைப்பாட்டில் ஏற்பட்ட மாற்றம், உலக அரசியல் அமைப்புக்கு மிகவும் அடிப்படையானது. இப்போது நீங்கள் 'கூட்டணிக்குப் பிந்தைய' சிந்தனையின் தோற்றத்தை காண்கிறீர்கள். அதாவது, கூட்டணிகள் உடனே முடிவடையப்போவதில்லை. ஆனால் இனிமேல் அவை உலக அரசியலின் மையமாக இருக்காது" என்று அவர் தெரிவித்தார்.
"சீனாவும் இந்தியாவும் உயர்ந்து வருகின்றன. ரஷ்யாவும் ஒரு சக்தியாக இருக்கிறது. எனவே, நாடுகள் தங்கள் நலன்களை இனிமேல் தனியாகவும், முன்பைவிட வலிமையாகவும் பின்பற்றும் காலகட்டத்தை நோக்கி நாம் நகர்கிறோம் என்று நான் நினைக்கிறேன். இனி உலக நாடுகள் எல்லாம் கூட்டணிகளை மையமாகக் கொண்டு செயல்பட வேண்டிய கட்டாயம் இருக்காது," என்று ஜெய்சங்கர் கூறினார்
பேச்சுவார்த்தையின் போது, அமெரிக்கா-சீனா பதற்றத்தில் இந்தியாவின் பங்கு குறித்து ஜெய்சங்கரிடம் கேள்விகள் கேட்கப்பட்டன.
"அமெரிக்காவிற்கும் சீனாவிற்கும் இடையிலான உறவு இப்போது முன்பு போல் இல்லை. இரு நாடுகளும் ஒன்றையொன்று உத்தி சார்ந்த போட்டியாளர்களாகக் கருதுகின்றன. இந்தியா தனது சொந்த நலன்களின் அடிப்படையில் இருவருடனும் உறவுகளை உருவாக்குகிறது" என்று குறிப்பிட்டார் ஜெய்சங்கர்.
தொடர்ந்து பேசிய அவர், "நாங்கள் சீனாவின் அண்டை நாடு. எங்களிடம் வர்த்தக உறவுகள் உள்ளன, சமநிலையற்றது என்றாலும் அவை பெரியளவிலான உறவுகள். நாங்கள் சீனாவுடன் நிலையான உறவைப் பேண விரும்புகிறோம், அதே நேரத்தில் அமெரிக்காவுடனான எங்கள் உத்தி சார்ந்த கூட்டணியையும் வலுப்படுத்துகிறோம்" என்றார்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு