65 பேர் பலி: கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்கள் ஓராண்டுக்குப் பிறகு எப்படி உள்ளன?
BBC Tamil July 05, 2025 09:48 PM
BBC கள்ளக்குறிச்சியில் ஒரே நாளில் கள்ளச்சாராயம் குடித்து குறைந்தது 65 பேர் உயிரிழந்து ஓராண்டாகிறது.

கள்ளக்குறிச்சியில் ஓராண்டுக்கு முன்பு கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தவர்களின் குடும்பங்கள் நொறுங்கிய வாழ்வை ஒட்ட வைக்க முயன்றுகொண்டிருக்கின்றன. உயிர் பிழைத்தவர்கள் மரணத்துக்கு நெருக்கமான ஒரு வாழ்வை வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.

கள்ளக்குறிச்சியின் மையப்பகுதியில் அமைந்திருக்கும் கருணாபுரம், ஜோகியர் தெரு ஆகிய பகுதிகளில் ஓராண்டுக்கு முன்பாக வார்த்தைகளால் விவரிக்க முடியாத ஒரு துயரம் நிகழ்ந்திருந்தது. அந்தப் பகுதியில் விற்ற கள்ளச்சாராயத்தை வாங்கிக் குடித்தவர்களில் சுமார் 65 பேர் உயிரிழந்தனர். அந்தப் பகுதிகளில் பல வீடுகளின் வாயிலில் சடலங்கள் கிடத்தப்பட்டிருந்தன. எங்கு பார்த்தாலும் துயரத்தின் ஓலம் கேட்டுக்கொண்டிருந்தது.

இப்போது ஓராண்டு கழிந்துவிட்ட நிலையில், இந்தப் பகுதியில் உள்ள சுவர்களில் ஓராண்டுக்கு முன்பாக இறந்தவர்களுக்கான கண்ணீர் அஞ்சலி போஸ்டர்கள் கண்ணில் படுகின்றன. மற்றபடி எல்லாம் இயல்பு நிலைக்குத் திரும்பிவிட்டதைப்போல வெளிப்பார்வைக்குத் தோன்றுகிறது. ஆனால், உண்மை நிலவரம் அப்படியில்லை.

மனைவி கர்ப்பமாக இருப்பதை தெரிந்து கொள்ளாமல் உயிரிழந்த கணவர்

இந்தப் பகுதியில் வசிக்கும் ராதாவின் கணவர் மணிகண்டன், கள்ளச்சாராயத்தால் மாண்டவர்களில் ஒருவர். மணிகண்டன் இறந்ததாக மருத்துவர்கள் அறிவித்த போதுதான் ராதாவுக்கு ஒரு உண்மை தெரியவந்தது. "என் கணவரை மருத்துவமனைக்குள் எடுத்துச் செல்லும்போது பரிசோதித்த மருத்துவர்கள், அவர் உயிரிழந்துவிட்டதாகச் சொன்னார்கள். நான் அங்கேயே மயங்கிவிழுந்துவிட்டேன். உடனடியாக அங்கிருந்த செவிலியர்கள் என்னைப் பரிசோதித்துவிட்டு, நான் கர்ப்பமாக இருப்பதாகச் சொன்னார்கள். எனக்கு அப்போதுதான் நான் கர்ப்பமாக இருப்பது தெரியும். இதைத் தெரிந்து கொள்ளாமலேயே அவர் செத்துப் போய்விட்டார்" என்று கதறி அழுதபடி அந்த நாளை நினைவுகூர்கிறார் ராதா.

இவருடைய கணவருக்கு ஏற்கெனவே ஒரு மனைவி இருந்தார் என்பதால், அரசு அளித்த பத்து லட்ச ரூபாய் இழப்பீட்டுத் தொகையை இருவரும் பகிர்ந்துகொள்ள வேண்டிவந்தது. இதற்குச் சில மாதங்களுக்குப் பிறகு ராதாவுக்கு பெண் குழந்தை பிறந்திருக்கிறது. ஏற்கெனவே இந்தத் தம்பதிக்கு ஒரு பெண் குழந்தை உண்டு. கணவர் இறந்துவிட்ட நிலையில், இந்த இரு குழந்தைகளையும் வைத்துக்கொண்டு, போக இடமில்லாமல் திணறிய இவருக்கு, உறவினர் ஒருவர் தற்போது அடைக்கலம் கொடுத்திருக்கிறார்.

"எனது கணவர் இல்லாத இந்த ஒரு வருடத்தில் ஏகப்பட்ட துயரத்தை அனுபவித்துவிட்டோம். இனி எப்படி மீதமிருக்கும் வாழ்க்கையைக் கடத்த போகிறோம் என்பதை நினைத்தாலே பயமாக இருக்கிறது" என்கிறார் ராதா.

BBC ராதா, கள்ளக்குறிச்சி
  • பூமி மீது மோதுமா? 4 சிறுகோள்களை தீவிரமாக கண்காணிக்கும் நாசா
  • சென்னை அருகே உள்ள ஆலம்பரைக்கோட்டைக்கும் முகலாயருக்கும் என்ன தொடர்பு?

கள்ளச்சாராயத்தால் தாயையும் தந்தையையும் ஒரு சேர இழந்தவர் சரஸ்வதி. பெற்றோர் இருக்கும் போதே கடினமான வாழ்க்கைதான் அவருக்கு. தாயும் தந்தையும் சமையல் வேலை பார்த்துவந்தனர். சரஸ்வதிக்கு சிறு வயதிலேயே திருமணமாவிட்டது. இரு குழந்தைகள் பிறந்த பிறகு கணவர் விட்டுவிட்டுச் சென்றுவிட, தன் பெற்றோரிடம் குழந்தைகளை விட்டுவிட்டு, சென்னையில் முதியவர்களை கவனிக்கும் வேலை பார்த்து வந்துள்ளார்.

"திடீர்னு தம்பி போன் செய்து, அவங்க ரெண்டு பேரும் சாராயம் குடித்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருப்பதாகச் சொன்னான். முதலில் என்னால் நம்பவே முடியவில்லை. பிறகு டிவி பார்த்தபோது, எங்கள் பகுதியில் இதுபோல நடந்திருப்பது தெரியவந்தது. நான் வேகமாக சென்னையில் இருந்து வந்து பார்த்தேன். முதலில் அம்மாவும் பிறகு அப்பாவும் அடுத்தடுத்து இறந்துவிட்டார்கள்" என்கிறார் சரஸ்வதி. தங்களுக்குக் கிடைத்த இழப்பீட்டுத் தொகையை சகோதர - சகோதரிகள் மூவரும் பிரித்துக் கொண்டிருக்கின்றனர்.

"பணம் ஒரு பிரச்னை என்பது இருக்கட்டும். இப்போது எனக்கென யாருமே இல்லை. முன்பு நான் ஊரிலிருந்து இங்கே வந்தால் நான் பேசவோ, விரும்பியதைச் செய்துகொடுக்கவோ அம்மாவும் அப்பாவும் இருந்தார்கள். இப்போது யாருமே இல்லாமல் அநாதையாக இருக்கிறேன். மனம் விட்டுப் பேசக்கூட ஆளில்லை" என அழுகிறார் சரஸ்வதி.

  • வாஸ்கோடகாமா கேரளாவில் ஒரு கொடூர வில்லனாக பார்க்கப்படுவது ஏன்?
  • அமெரிக்காவில் காரே இல்லாத தீவு: மக்கள் வசதி இருந்தும் கார் வாங்காமல் குதிரையில் செல்வது ஏன்?
பெற்றோர் இருவரையும் இழந்த குழந்தைகள்

கள்ளக்குறிச்சியில் நிகழ்ந்த இந்தக் கள்ளச்சாராய மரணங்களிலேயே பலரையும் அதிரவைத்த மரணம், வடிவுக்கரசி - சுரேஷ் தம்பதியின் மரணம்தான். இவர்களுக்கு மூன்று குழந்தைகள். மூன்று பேருமே பள்ளிக்கூடத்தில் படித்துவந்த நிலையில், மெத்தனால் கலந்த சாராயத்தால் பெற்றோர் இருவருமே இறந்துபோனார்கள். வாடகை வீட்டில்தான் குடியிருந்தார்கள் என்பதால், பெற்றோரின் மரணத்துக்குப் பிறகு எங்கே போவது எனத் திகைத்து நின்றார்கள் குழந்தைகள். இப்போது இந்த மூன்று பேரையும் இவர்களது தாய் வழிப் பாட்டியும் தந்தை வழிப் பாட்டியும் வளர்த்து வருகின்றனர்.

"என் அண்ணன் - அண்ணியின் மரணத்துக்குப் பிறகு, குழந்தைகள் மூன்று பேருமே அநாதைகளாகிவிட்டார்கள். அவர்களது வயதான பாட்டிகள்தான் கவனித்துக் கொள்கிறார்கள். குழந்தைகளை விடுதியில் சேர்க்கும்படி அறிவுரை சொல்கிறார்கள். ஆனால், குழந்தைகள் அதை ஏற்க மறுக்கிறார்கள்" என்கிறார் சுரேஷின் சகோதரியான அலமேலு. இழப்பீடாக அரசு கொடுத்த நிதியோடு, அ.தி.மு.க. சார்பில் மாதம் ஐந்தாயிரம் இந்தக் குடும்பத்துக்கு தரப்படுவதாகவும் சொல்கிறார் அவர். ஆனால், பெற்றோர் இருவருமே இல்லாத நிலையில், குழந்தைகள் பரிதவித்துப் போயிருக்கிறார்கள்.

BBC மெத்தனால் கலந்த சாராயத்தை குடித்து கண் பார்வை இழந்த மாயக்கண்ணன் (வலது) உடன் அவரது மகன் (இடது) எப்போதும் உடனிருக்கிறார்.

உயிரிழந்தவர்களின் கதை இப்படியிருக்க, சாராயம் குடித்து உடல் நலம் பாதிக்கப்பட்டு உயிர் பிழைத்தவர்களின் கதை இன்னும் கொடூரமாக இருக்கிறது. கருணாபுரம் பகுதியைச் சேர்ந்த 53 வயதான மாயக்கண்ணன் ஜூன் 18ஆம் தேதி சாராயம் குடித்து, உடல்நலம் பாதிக்கப்பட்டவர். ஜிப்மர் மருத்துவமனையில் சேர்ந்து சில மணி நேரங்களிலேயே இவரது கண் பார்வை மங்க ஆரம்பித்தது. பிறகு, பார்வை முழுமையாக பறிபோய்விட்டது. இதற்குப் பிறகு பல கண் மருத்துவமனைகளில் பரிசோதித்த நிலையிலும், இவரது நரம்புகள் முழுமையாக பாதிக்கப்பட்டிருப்பதால் பார்வை கிடைக்காது என மருத்துவர்கள் தெரிவித்துவிட்டனர்.

இப்போது குடும்பத்தைக் காப்பாற்ற இவரது மனைவி கூலி வேலைக்குச் செல்கிறார். எப்போதுமே இவரைப் பார்த்துக்கொள்ள ஒருவர் இருக்க வேண்டும் என்பதால், இவரது 21 வயது மகன் உடனிருக்கிறார். தாய் வீடு திரும்பிய பிறகு, இரவு நேரத்தில் மகன் முரசொலி மாறன் வேலைக்குச் செல்கிறார். இதேபோல, எவ்வளவு நாட்களைக் கடத்த முடியும் என்ற கேள்வி இவர்கள் தலை மீது தொங்கிக் கொண்டிருக்கிறது.

"இப்போது வாழ்க்கை நரகம்தான். இனி எதுவுமே இல்லை" என்கிறார் மாயக்கண்ணன். மகன் முரசொலி மாறன் பேசத் துவங்கினாலே அழுகிறார்.

  • செயற்கை மனிதன் சாத்தியமா? டி.என்.ஏ.வை உருவாக்கும் ஆராய்ச்சி தொடக்கம்
  • பெற்றோருக்கு நீங்கள் எத்தனையாவது குழந்தை என்பது உங்கள் குணத்தை தீர்மானிக்குமா?
"ஏழு மாதங்களாக வேலைக்கு போக இயலவில்லை" BBC மெத்தனால் கலந்த சாராயத்தை குடித்ததால் உடல் நலம் மிகவும் பாதிக்கப்பட்டு, ஏழு மாதங்கள் விஜயகுமார் வேலைக்குச் செல்லவில்லை.

இதேபோல, மெத்தனால் கலந்த சாராயத்தைக் குடித்து சிகிச்சைக்குப் பிறகு மீண்டவர்களில் ஒருவர் 43 வயதாகும் விஜயகுமார். இவர் ஒரு தேநீர் கடையில் மாஸ்டராக பணியாற்றிவந்தார். அதிகாலையில் வேலைக்குச் செல்வதற்கு முன்பாகவும் காலை உணவை உண்ட பிறகும் சாராயம் அருந்துவதை இவர் வழக்கமாக வைத்திருந்தார். ஆனால், ஜூன் மாதம் 19ஆம் தேதி எல்லாமே மாறிப் போனது. வழக்கம்போல அதிகாலை குடித்துவிட்டு வேலைக்கு வந்தவர், காலை உணவுக்குப் பிறகு மீண்டும் குடித்துள்ளார். அன்று மதியம் பணியாற்றும் கடையிலேயே மயங்கி விழுந்தார்.

மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட இவருக்கு பல நாட்கள் சிகிச்சையளிக்கப்பட்டது. சிறுநீரகம், கல்லீரல், கணையம் போன்ற உறுப்புகள் பாதிக்கப்பட்டன. இதில் சிறுநீரகம், கல்லீரல் பாதிப்புகளில் இருந்து சற்று மீண்டிருந்தாலும் கணைய பாதிப்பிலிருந்து அவரால் இன்னமும் மீள முடியவில்லை. கடுமையான சோர்வு, வயிறு உப்புதல் போன்ற பிரச்னைகள் இன்னமும் நீடிக்கவே செய்கின்றன. ஏழு மாதங்களுக்குப் பிறகு இப்போதுதான் அவர் மீண்டும் வேலைக்குத் திரும்பியிருக்கிறார். ஆனால், அவரால் முன்பைப் போல வேலை பார்க்க முடிவதில்லை. அடிக்கடி வயிறு உப்பிக்கொள்வதாகச் சொல்கிறார்.

"மொத்தம் 47 நாட்கள் மருத்துவமனையில் இருந்தேன். அதற்குப் பிறகு 7 மாதங்கள் வீட்டிலேயே இருந்தேன். எனக்கு நான்கு மகன்கள். மனைவிக்கு கால் பாதிக்கப்பட்டிருக்கிறது. அவரால் வேலைக்குப் போக முடியாது. என் ஒருத்தன் வருமானத்தில்தான் குடும்பம் நடந்துகொண்டிருந்தது. அன்றைய தினம் என் மாமியாரும் ஒரு பாக்கெட் சாராயம் குடித்திருந்தார். அவர் வீட்டிலேயே இறந்துவிட்டார். நானும் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுவிட்டதால், குடும்பத்தை நடத்தவே முடியவில்லை. ரேஷனில் வழங்கும் இலவச அரிசியில்தான் சாப்பிட்டோம். இப்போது ஏழு மாதங்களுக்குப் பிறகு வேலைக்கு வந்திருக்கிறேன் என்றாலும் முழுமையாக வேலை பார்க்க முடியவில்லை. அவ்வப்போது கை கால்கள் மரத்துப்போனதைப் போல இருக்கிறது. வெயிலில் சென்றால் மயக்கம் வருகிறது" என்கிறார் விஜயகுமார்.

கள்ளச் சாராயம் குடித்து இப்படி உயிர் பிழைத்தவர்களைப் பொறுத்தவரை, பொருளாதாரம்தான் மிகப் பெரிய பிரச்னை. உடல்நலம் கடுமையாக குன்றியிருப்பதால், வேலைக்குச் செல்ல முடியாத நிலையில் இருப்பதால், அவர்களது ஒட்டுமொத்தக் குடும்பமுமே மிக மோசமான பொருளாதார நெருக்கடியை எதிர்கொள்கிறது. இவர்களுக்கென வழங்கப்பட்ட ஐம்பதாயிரம் ரூபாய், சிகிச்சைக்காகவே காலியான நிலையில், மிகுந்த சிரமத்துடன் நாட்களைக் கடத்துகிறார்கள் இவர்கள்.

மெத்தனால் கலந்த கள்ளச்சாராயத்தை விற்ற கன்னுக்குட்டி, தாமோதரன், ஜோசப், சக்திவேல், சிவகுமார் ஆகிய ஐந்து பேர் தற்போது சிறையில் இருக்கின்றனர். கன்னுக்குட்டியின் வீட்டில் இருப்பவர்கள் இது குறித்து பேச தயாராக இல்லை. இந்தப் பகுதியில் மட்டுமல்ல, கள்ளக்குறிச்சி மாவட்டம் எங்குமே கள்ளச்சாராய விற்பனை தற்போது கிடையாது என்கிறது மாவட்ட நிர்வாகம். பிபிசியிடம் பேசிய மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ரஜத் சதுர்வேதி, கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாரய விற்பனையை முடக்க கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருப்பதாகத் தெரிவித்தார். கடந்த ஓராண்டில் 7,852 லிட்டர் சாராயமும் சுமார் 28 ஆயிரம் லிட்டர் சாராய ஊறலும் அழிக்கப்பட்டிருப்பதாக பிபிசியிடம் தெரிவித்தார். ஜூன் 15ஆம் தேதிவரை 30 பேர் மீது குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டிருப்பதாகவும் காவல்துறை தெரிவித்திருக்கிறது.

ஆனால், இப்பகுதியில் கள்ளச்சாராய விற்பனை என்பது சட்டம் - ஒழுங்கு விவகாரம் என்பதைத் தாண்டியதாகவே இருக்கிறது. வறுமை, சிறுவயது திருமணங்கள் போன்ற பல சமூகப் பிரச்னைகளின் ஒரு பகுதியாகவே இந்தப் பிரச்சனை இருக்கிறது.

BBC கள்ளக்குறிச்சி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ரஜத் சதுர்வேதி
  • இந்து, சமஸ்கிருதம், பிரியாணி: இந்தியா - இன்றைய இரான் இடையே நடந்த உணவு, மொழி, கலாசார பரிமாற்றம்
  • தூக்கத்தில் விந்து வெளியேறுவது ஆண் மலட்டுத்தன்மையின் அறிகுறியா?
கள்ளக்குறிச்சியில் ஓராண்டு முன்பு நடந்தது என்ன?

கடந்த 2024 ஜூன் 17 - 18ஆம் தேதிகளில் கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரம் பகுதியில் கள்ளச்சாராயம் குடித்ததால் குறைந்தது 65 பேர் உயிரிழந்தனர். 100க்கும் மேற்பட்டவர்கள், இந்தச் சாராயத்தைக் குடித்ததனால் ஏற்பட்ட உடல்நல பாதிப்புக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

கள்ளக்குறிச்சியின் மையப்பகுதியில் அமைந்திருக்கும் கருணாபுரத்தில் வசித்துவந்த கூலித் தொழிலாளர்களில் பலர் தாம் வேலைக்குச் செல்வதற்கு முன்பாக கள்ளச்சாராயம் அருந்துவதை வழக்கமாகக் கொண்டிருந்த நிலையில், ஜூன் 17ஆம் தேதி அவர்கள் அருந்திய சாராயத்தில் மெத்தனால் கலந்திருந்தது. இந்த மெத்தனால் கலந்த சாராயத்தை அருந்தியவர்களில் பலர், அன்று நண்பகலில் இருந்தே கண் பார்வை மங்குவது, வயிற்றுப்போக்கு, கை - கால் மரத்து போதல் போன்ற பிரச்னைகளுக்காக கள்ளக்குறிச்சி மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு வரத் துவங்கினர்.

இவர்களில் சுரேஷ் என்பவர் உயிரிழக்க, அப்பகுதியில் பதற்றம் தொற்ற ஆரம்பித்தது. மேலும் அதிக நபர்கள் மருத்துவமனையில் சேர ஆரம்பித்தனர். வெகு விரைவிலேயே பலரது நிலைமை மோசமாக ஆரம்பித்தது. இதற்குப் பிறகு அடுத்தடுத்து பலரது உடல்நிலை மோசமாகி, மரணமடையத் துவங்கினார்கள். கள்ளக்குறிச்சி அரசு தலைமை மருத்துவமனையில் ஆட்கள் குவிய ஆரம்பிக்க, பலர் சேலம் அரசு தலைமை மருத்துவமனைக்கும் புதுச்சேரியில் உள்ள ஜிப்மர் மருத்துவமனைக்கும் அனுப்பப்பட்டனர்.

இதற்குப் பிறகும் உயிரிழப்புகள் தொடர்ந்தன. முடிவில், மெத்தனால் கலந்த சாராயத்தைக் குடித்ததால் குறைந்தது 65 பேர் உயிரிழந்திருந்தனர். மருத்துவமனையில் சிகிச்சைபெற்றுவந்தவர்களில் சிலருக்கு முழுமையான பார்வையிழப்பு ஏற்பட்டது. பலர் நீடித்திருக்கக்கூடிய உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டனர். உயிரிழந்தவர்களின் சடலங்கள் மொத்தமாக வைத்து தகனம் செய்யப்பட்டன.

தமிழ்நாடு அரசு உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு பத்து லட்ச ரூபாயும் உடல் நலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு 50,000 ரூபாயும் நிவாரணத் தொகையாக அறிவித்தது.

  • கள்ளக்குறிச்சி கள்ளச்சாராயம்: அடுத்தடுத்து தொடரும் உயிரிழப்புகள் - என்ன நடக்கிறது?
  • கள்ளக்குறிச்சி: கள்ளச்சாராய வழக்கு சி.பி.ஐ-யிடம் ஒப்படைக்கப்பட்டது ஏன்?
  • கள்ளக்குறிச்சி: 'துடிதுடித்து இறந்தார், இதுக்கெல்லாம் காரணம் இவர்தான், ஆனால்…' - காணொளி
  • கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய மரணங்கள்: தலைவர்கள், பிரபலங்கள் இதுவரை கூறியது என்ன?

இந்த நிகழ்வுக்குப் பிறகு, மாவட்ட ஆட்சியர் இடமாற்றம் செய்யப்பட்டார். காவல்துறை கண்காணிப்பாளர், மதுவிலக்குப் பிரிவைச் சேர்ந்தவர்கள் என பத்து காவல்துறை அதிகாரிகள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர். கள்ளச்சாராயம் விற்றவர்கள், சப்ளை செய்தவர்கள், மெத்தனால் வழங்கியவர்கள் என மொத்தமாக 24 பேர் கைதுசெய்யப்பட்டனர். முதலில் இந்த விவகாரத்தை மாநில குற்றப் பிரிவு குற்றப் புலனாய்வுத் துறை விசாரித்துவந்தது. ஆனால், இந்த விவகாரத்தை சி.பி.ஐ. விசாரிக்க உத்தரவிட வேண்டும் என அ.தி.மு.க. உள்ளிட்ட கட்சிகள் வழக்குத் தொடர்ந்தன. அந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம் வழக்கை சி.பி.ஐயிடம் ஒப்படைக்க உத்தரவிட்டது. இப்போது இந்த வழக்கை சி.பி.ஐ நடத்திவருகிறது.

தமிழக அரசு இந்த விவகாரம் தொடர்பாக ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி பி. கோகுல்தாஸ் தலைமையில் ஒரு நபர் விசாரணை ஆணையம் ஒன்றை அமைத்தது. இந்த நிகழ்வு நடந்ததற்கான காரணம், அதற்கான சூழல், இதுபோல நடக்காமல் இருப்பதற்கான தீர்வு ஆகியவற்றை இந்த ஆணையம் பரிந்துரைக்க வேண்டும். மூன்று மாதத்திற்குள் அந்த ஆணையம் தனது அறிக்கையை சமர்ப்பிக்க வேண்டிய நிலையில், அதன் காலம் நீட்டிக்கப்பட்டிருக்கிறது.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.