விமானப்படை தளங்களின் ஓடுதளம் என்று யாராவது கேட்டால் உடனே அவர்களின் மனதில் தோன்றி மறைவது போர் விமானங்கள் பறப்பதும் அதனால் ஏற்படும் சத்தமும்தான். ஆனால் பஞ்சாபில் உள்ள இந்திய ராணுவத்திற்கு சொந்தமான ஓடுதளம் மோசடி வழக்கு பின்னணியில் பேசுபொருளாகியுள்ளது.
பஞ்சாபின் ஃபெரோஸ்பூரில் உள்ள ஃபதுவாலா கிராமத்தில் அமைந்திருக்கும் இந்திய விமானப்படைக்கு சொந்தமான ஓடுதளம் ஒன்றை விற்பனை செய்திருப்பதாக எழுந்த குற்றச்சாட்டைத் தொடர்ந்து முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது.
அண்டை நாடுகளுடன் இந்தியா போர் புரிந்த போது, இந்தியா-பாகிஸ்தான் எல்லையில் அமைந்திருக்கும் இந்த ஓடுதளத்தை இந்திய விமானப்படை பயன்படுத்தியது.
இந்த ஓடுதளம் மற்றும் அதனைச் சுற்றி அமைந்துள்ள 15 ஏக்கர் நிலத்தின் மதிப்பு தற்போது கோடிக்கணக்கில் இருக்கிறது. 1997-ஆம் ஆண்டு இந்த நிலத்தை விற்பனை செய்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. தற்போது இந்த வழக்கில் காவல் துறையினர் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த வழக்கில் தாய் மற்றும் மகன் மீது வழக்கை பதிவு செய்து விசாரித்து வருகின்றனர் காவல்துறையினர். இந்திய விமானப்படைக்கு சொந்தமான நிலத்தை தங்களின் சொந்த நிலம் என்று கூறி விற்பனை செய்ததாக இவர்கள் இருவர் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
அவர்களை தொடர்பு கொண்டு பேச முயன்ற போது, அவர்கள் பேச மறுத்துவிட்டனர்.
காவல்துறையினர் அளித்த தகவலின்படி, இந்தியா சுதந்திரம் அடைவதற்கு முன்பு இந்த நிலத்தை விவசாயிகளிடம் இருந்து கையகப்படுத்தி ஓடுதளம் அமைக்கப்பட்டது. இந்த நிலத்திற்கான இழப்பீடும் அவர்களுக்கு வழங்கப்பட்டது. ஆனால் வருவாய்துறை ஆவணங்களில் சில நில உரிமையாளர்களின் பெயர்கள் மாற்றப்படாமல் இருந்தது.
போதுமான ஆவணங்கள் இல்லாத காரணத்தை வைத்து, குற்றம்சாட்டப்பட்டவர்கள் அந்த நிலத்தை மீண்டும் விற்பனை செய்துள்ளனர். கையகப்படுத்தப்பட்ட நில உரிமையாளர்களின் குடும்ப உறுப்பினர்கள் இவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
பஞ்சாப் - ஹரியாணா உயர் நீதிமன்ற தலையீட்டிற்குப் பிறகே பஞ்சாப் காவல்துறை இதில் நடவடிக்கை மேற்கொண்டது. இதுவரை தனி நபர்கள் மீது மட்டுமே நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அரசு அதிகாரிகள் மீது எந்தவிதமான நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை.
இந்த வழக்கில் பஞ்சாப் - ஹரியாணா உயர் நீதிமன்றத்தை நாடிய ஓய்வுபெற்ற வருவாய்த்துறை கண்காணிப்பாளார் (கனூங்கோ) நிஷான் சிங் பிபிசி செய்தியாளர் சராப்ஜித் சிங் தலிவாலிடம் பேசிய போது, இந்திய விமானப்படை இந்த ஓடுதளத்தை 1962, 1965 மற்றும் 1971-ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற போர்களில் பயன்படுத்தியது என்று தெரிவித்தார்.
1932-ஆம் ஆண்டில் இருந்து இந்த ஓடுதளம் பயன்படுத்தப்பட்டு வந்துள்ளது என்பதையும் இந்திய விமானப்படை தன்னுடைய புகார் மனுவில் குறிப்பிட்டுள்ளது.
1932-ஆம் ஆண்டுக்கு முன்பு இந்த நிலத்தை விமானப்படை கையகப்படுத்தியது. தற்போது இந்த ஓடுதள நிலத்தின் உரிமையாளர் இந்திய விமானப்படையே என்று நிஷான் சிங் கூறுகிறார்.
காவல்துறை மேற்கொண்ட நடவடிக்கை என்ன?2023, டிசம்பரில், நிஷான் சிங் பஞ்சாப் - ஹரியாணா உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்தார்.
இந்த ஆண்டு ஏப்ரல் 30 அன்று வழக்கை நான்கு வாரங்களில் விசாரித்து முடிக்குமாறு பஞ்சாப் லஞ்ச ஒழிப்புத்துறை இயக்குநருக்கு உத்தரவு பிறப்பித்தது நீதிமன்றம். லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணையை நடத்தி தன்னுடைய அறிக்கையை ஜூன் 20 அன்று சமர்பித்தது. அதன் அடிப்படையில் ஜூன் 28 அன்று முதல் தகவல் அறிக்கையை பதிவு செய்தது காவல்துறை.
பஞ்சாப் காவல்துறை உஷா அன்சல் மற்றும் அவருடைய மகன் நவீன் அன்சல் ஆகியோருக்கு எதிராக குல்கர்ஹி காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்தது. தற்போது டெல்லியில் வசித்து வரும் அவர்கள் ஃபெரோஸ்பூரில் அமைந்திருக்கும் துமானி கிராமத்தை பூர்வீகமாகக் கொண்டவர்கள்.
இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 419, 420, 465, 467, 471 மற்றும் 120பி பிரிவுகளின் கீழ் அவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு டி.எஸ்.பி. கரண் சர்மா வழக்கை விசாரித்து வருகிறார்.
லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணையின் போது குற்றஞ்சாட்டப்பட்டவர்களுக்கு அந்த நிலம் இந்திய ராணுவத்திற்கு சொந்தமானது என்பது தெரியும் என்று தெரிய வந்துள்ளது என பிபிசியிடம் விவரிக்கிறார் கரண் சர்மா. தெரிந்திருந்தும் அந்த நிலத்தை அவர்கள் விற்றுள்ளனர் என்கிறார் அவர்.
"அந்த நிலம் ராணுவத்திற்கு சொந்தமாக இருந்த போதும், குற்றஞ்சாட்டப்பட்டவர்கள் அது அவர்களின் நிலம் என்று கூறுகின்றனர்," என்று தெரிவிக்கிறார் அவர்.
உயர் நீதிமன்றத்தின் உத்தரவின் பேரில் லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கை விசாரித்து அறிக்கையை நீதிமன்றத்தில் சமர்பித்தது. அந்த அறிக்கையின் அடிப்படையில் பஞ்சாப் காவல்துறை விசாரணை மேற்கொண்டு வருகிறது.
முதல் தகவல் அறிக்கையின்படி, லஞ்ச ஒழிப்புத்துறை தன்னுடைய விசாரணை அறிக்கையில் பின்வருமாறு குறிப்பிட்டுள்ளது: விமானப்படை ஓடுதளத்திற்கு தேவையான நிலத்தை ஃபதுவாலா மற்றும் இதர நான்கு கிராமங்களில் இருந்து விமானப்படை கையகப்படுத்தியது. அதன் பிறகு அங்கே விமான ஓடுதளம் அமைக்கப்பட்டது.
கையகப்படுத்தப்பட்ட சில நிலத்தின் உரிமையை ராணுவத்தின் பெயரில் அப்போது மாற்றவில்லை. வருவாய்துறை ஆவணங்களில் தனிநபர்களின் பெயர்களிலேயே நிலம் இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலைமையை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்டு, குற்றஞ்சாட்டப்பட்ட நபர்கள், அரசு அதிகாரிகளுடன் கூட்டு சேர்ந்து இந்திய விமானப்படைக்கு சொந்தமான நிலத்தை விற்றுள்ளனர் என்று மனுதாரரும் ஓய்வுபெற்ற வருவாய்துறை அதிகாரியுமான நிஷான் சிங், கூறுகிறார்.
நிலத்தின் உண்மையான உரிமையாளர் பெயர் மதன் மோகன் லால். அவர் 1991-ஆம் ஆண்டு மரணித்துவிட்டார் என்று நிஷான் சிங் தெரிவிக்கிறார்.
அவர் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள், அந்த நிலத்தை தாரா சிங், முக்தியார் சிங், ஜாகீர் சிங், சுர்ஜீத் கவுர், மஞ்சீத் கவுர் ஆகியோருக்கு போலி பட்டாக்கள் மூலம் 1997-ஆம் ஆண்டு விற்பனை செய்துள்ளனர்.
இந்த விவகாரம் வெளிச்சத்திற்கு வந்தது எப்படி?2021-ஆம் ஆண்டு நிஷான் சிங் உயர் நீதிமன்றத்தில் அளித்த மனுவின்படி, ஹல்வாரா விமானப்படை தளத்தின் படைத் தலைவர் (Commandant) மோசடி நடைபெற்றிருக்கிறது என்பதை அம்பலப்படுத்தினார். மேலும் இந்த விவகாரத்தை ஃபெரோஸ்பூர் துணை ஆணையர் விசாரணைக்கு உட்படுத்த வேண்டும் என்று கோரிக்கை வைத்தார். ஆனால் எதுவும் நடக்கவில்லை.
மீண்டும் 2023-ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் நிஷான் சிங் உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்தார். அதில் நிலத்தின் உண்மையான உரிமையாளர் மதன் மோகன் லால். அவர் 1991-ஆம் ஆண்டு உயிரிழந்தார். 1997-ஆம் ஆண்டு குற்றஞ்சாட்டப்பட்ட நபர்கள் போலி பத்திரங்கள் மூலம் இந்த நிலத்தை விற்பனை செய்ததாக கூறினார்.
2009-10 காலகட்டத்தில் அந்த நிலத்தின் உரிமையாளர்கள் என்று ஜமபாந்தி, சுர்ஜித் கெளர், மஞ்சித் கெளர், முக்தியார் சிங், ஜாகீர் சிங், தாரா சிங், ரமேஷ் காந்த் மற்றும் ராகேஷ் காந்த் ஆகியோர் அறிவித்தனர். உண்மையில் ராணுவம் இந்த நிலத்தின் உரிமையை யாருக்கு மாற்றவில்லை.
இந்த விவகாரத்தில் நிஷான் சிங் சுமார் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு நீதிமன்றத்தை நாடினார். இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், இதனை தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் என்று கூறியது.
உயர் நீதிமன்றம் வழக்கை விசாரித்து பஞ்சாப் லஞ்ச ஒழிப்புத்துறை இந்த விவகாரத்தை விசாரித்து நான்கு வாரத்திற்குள் அறிக்கை சமர்பிக்க வேண்டும் என்று ஏப்ரல் 30 அன்று உத்தரவு பிறப்பித்தது. இந்த விவகாரம் தொடர்பாக பஞ்சாப் ஆளுநரை நாடியது இந்திய விமானப்படை என்பது குறிப்பிடத்தக்கது.
அதே நேரத்தில், இந்த நிலத்தை வாங்கி ஏமாந்தவர்களும் பல்வேறு நீதிமன்றங்களை நாடி வருகின்றனர்.
விமானப்படைக்கு சொந்தமான நிலத்தை வாங்கியவர்கள், இந்த விவகாரம் தொடர்பாக தொடுத்த வழக்கில் மாவட்ட நீதிமன்றத்தில் வெற்றி பெற்றனர். ஆனால் இந்திய விமானப்படை அதற்கு எதிராக உயர் நீதிமன்றத்தை நாடியது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலத்தை வாங்கியவர்களில் ஒருவரான ஜாகீர் சிங், "எங்களுக்கு ராணுவத்தோடு எந்த பிரச்னையும் இல்லை. நாங்கள் நிலத்தை நேரடியாக உண்மையான உரிமையாளர்களிடம் இருந்து பெற்றோம். அதற்கு அதிக பணமும் கேட்டனர். தற்போது நீதிமன்றத்தில் இந்த நிலத்தின் உரிமை தொடர்பாக வழக்கு சென்று கொண்டிருக்கிறது," என்று கூறுகிறார்.
1975-ஆம் ஆண்டு முதல் இந்த நிலத்தை நாங்கள் குத்தகைக்கு எடுத்து விவசாயம் செய்து வருகின்றோம். 1997-ஆம் ஆண்டு இந்த நிலத்தை நாங்கள் வாங்கினோம். 2001-ஆம் ஆண்டு ராணுவம் எங்களை அங்கிருந்து வெளியேற்றியது. அதன் பிறகு பல்வேறு பிரச்னைகளை நாங்கள் நீதிமன்றங்களில் எதிர்கொண்டு வருகிறோம்," என்று அவர் தெரிவித்தார்.
"இந்த நிலத்தில் பொருத்தப்பட்ட எங்களின் மோட்டர் இன்னும் அங்கே ஓடிக் கொண்டிருக்கிறது. எங்களின் நிலத்தை எங்களுக்கு திருப்பி தர வேண்டும் என்பது மட்டுமே எங்களின் ஒரே வேண்டுகோளாக உள்ளது," என்று அவர் கூறினார்.
நில மோசடியில் ஏமாற்றம் அடைந்த மற்றொரு நபரான முக்தியார் சிங், அவருடைய அப்பா தாரா சிங் இந்த நிலத்தை வாங்கியதாகவும், அதனை முக்தியார், அவருடைய சகோதரர் மற்றும் அம்மாவின் பேரில் பதிவு செய்ததாகவும் கூறுகிறார்.
அரசு அதிகாரிகளை குற்றஞ்சாட்டும் முக்தியார் சிங், "பழைய ஆவணங்களைப் பார்த்தே நாங்கள் நிலத்தை வாங்கினோம். எங்களுக்கு படிப்பறிவு இல்லை. ஆனால் அரசு அதிகாரிகள் நன்றாக படித்தவர்கள். அவர்களுக்கு தெரியாதா இந்த நிலம் அரசுக்கு சொந்தமானது என்று?" என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.
"இது அரசின் நிலமாக இருந்தால் அதிகாரிகள் அதனை பதிவு செய்து ஏன் எங்களுக்கு தர வேண்டும்? எங்களின் பெயரில் பதிவு செய்யப்பட்டிருப்பதால் எங்களுக்கான உரிமை கிடைக்க வேண்டும். இந்த விவகாரம் தொடர்பாக 2001-ஆம் ஆண்டு முதல் நீதிமன்றத்தில் போராடி வருகிறோம்," என்று அவர் தெரிவித்தார்.
"பஞ்சாப் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் இந்த வழக்கை விசாரணை செய்து, காவல்துறையிடம் ஒப்படைத்துவிட்டனர். ஆனால் மேற்கொண்டு நடவடிக்கைகள் எடுத்திருக்க வேண்டும். மூத்த அதிகாரிகளின் உதவியோடுதான் இந்த மோசடி நடைபெற்றுள்ளது.
எனவே லஞ்சம் ஒரு முக்கிய பங்காற்றியுள்ளது. ஆனால் முதல் தகவல் அறிக்கையில் நிலத்தை விற்றவர்கள் பெயர்கள் மட்டுமே இடம் பெற்றுள்ளது. இதுவரை இந்த விவகாரத்தில் ஈடுபட்ட அதிகாரிகள் தொடர்பாக எந்த நடவடிக்கையும் இல்லை," என்று கூறுகிறார்.
"மேலும், என்னுடைய துறை சார்ந்த விவகாரமாக இருந்த போதும் நானே புகார் அளித்தேன். அரசோ ராணுவமோ இந்த புகாரை அளித்திருக்க வேண்டும்," என்றும் நிஷான் தெரிவிக்கிறார்.
இது குறித்து டி.எஸ்.பி. கரண் சர்மா பேசுகையில், "நாங்கள் விசாரணையை துவங்கியுள்ளோம். இந்த மோசடியில் ஈடுபட்டது யாராக இருப்பினும் அவர்கள் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்படும்," என்று கூறினார்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு