அமெரிக்காவின் டெக்சாஸில் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தில் குறைந்தது 24 பேர் உயிரிழந்துள்ளனர். ஒரு கிறிஸ்தவ கோடைக்கால முகாமில் இருந்த சிறுமிகளில் 23 முதல் 25 பேர் வரை காணவில்லை.
இந்தச் சம்பவம் அதிர்ச்சி அளிப்பதாகவும் பயங்கரமானது என்றும் அமெரிக்க அதிபர் டிரம்ப் குறிப்பிட்டுள்ளார்.
டெக்ஸாஸ் பகுதியில் திடீர் வெள்ளம் ஏற்பட்டது. குவாடலூப் ஆற்றில் திடீரென ஒரு மணிநேரத்திற்குள் 26 அடிக்கு நீர்மட்டம் உயர்ந்ததைத் தொடர்ந்து இந்த வெள்ளம் ஏற்பட்டதாக அதிகாரிகள் கூறினர்.
சான் அன்டோனியோவின் வடமேற்கே உள்ள கெர்வில்லேவில் கேம்ப் மிஸ்டிக் எனப்படும் கிறிஸ்தவ கோடைக்கால முகாமுக்குச் சென்ற சிறுமிகளில் 23 முதல் 25 சிறுமிகளைக் காணவில்லை என உள்ளூர் அதிகாரிகள் கூறுகின்றனர். அவர்களை மீட்புக் குழுவினர் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.
காணாமல் போன சிறுமிகளைத் தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருவதாக அதிகாரிகள் கூறுகின்றனர். அவர்கள் கூற்றுப்படி, ஹெலிகாப்டர், டிரோன்கள், படகுகள் மீட்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.
பல கவுன்டிகளில் அவசர நிலை பிறப்பிக்கப்பட்டுள்ளது. சாலைகள் அடித்துச் செல்லப்பட்டுள்ளன, தொலைபேசி இணைப்புகள் துண்டிக்கப்பட்டுள்ளன.
வீடுகள் மற்றும் வாகனங்கள் சேதமடைந்து கிடப்பதைக் காணொளிகளில் பார்க்க முடிகிறது.
காணாமல் போனவர்கள் அனைவரையும் கண்டுபிடிக்கும் வரை இரவு, பகல் பார்க்காமல் மீட்புப் பணி தொடரும் என டெக்சாஸ் ஆளுநர் கிரெக் அபட் கூறினார்.
டெக்சாஸின் துணைநிலை ஆளுநர் டான் பேட்ரிக் பேசும்போது, "இது ஓர் அழிவுகரமான வெள்ளம், சொத்துகளையும் துரதிர்ஷ்டவசமாக உயிர்களையும் பறித்துவிட்டது" எனக் குறிப்பிட்டார். மேலும், "குழந்தைகள் காணாமல் போனதாலேயே அவர்கள் இறந்திருக்கலாம் என்று அர்த்தமில்லை. அவர்கள் தொடர்புகொள்ள முடியாத நிலையில்கூட இருக்க வாய்ப்புள்ளது" என்றும் கூறினார்.
கேம்ப் மிஸ்டிக் முகாம், தங்களிடம் மின்சாரம், தண்ணீர் இல்லை என்றும் சாலை அடித்துச் செல்லப்பட்டதால் கூடுதல் உதவிகளைப் பெற முடியாமல் சிரமப்படுவதாகவும் கூறியுள்ளது.
இந்த வெள்ளம் குறித்துப் பேசிய கெர் கவுன்டியின் மூத்த அதிகாரி ராப் கெல்லி, தங்களிடம் எச்சரிக்கை அமைப்பு இல்லை என்று கூறினார்.
மேலும், வெள்ளிக்கிழமை ஏற்பட்ட இந்த வெள்ளம் 1987ஆம் ஆண்டு கெர் கவுன்டியின் தெற்கே உள்ள கம்ஃபோர்ட் நகரில் கிறிஸ்தவ முகாம் பேருந்தில் 10 இளம் வயதினர் உயிரைப் பறித்த வெள்ளத்தைவிட தீவிரமாக இருந்ததாகக் குறிப்பிட்டார்.
பிபிசியின் அமெரிக்க கூட்டாளியான சிபிஎஸ் செய்திகளின்படி, டெக்சாஸ் அவசர நிலை மேலாண்மைப் பிரிவு வியாழக்கிழமை பல கூட்டங்களை நடத்தியது.
ஆனால் தேசிய வானிலை சேவை இவ்வளவு பெரிய மழையைக் கணிக்கவில்லை என்று அதிகாரிகள் தெரிவித்தனர். 20 செமீ வரை மழை பெய்யும் என்றே கணிக்கப்பட்டு இருந்ததாக அதிகாரிகள் கூறுகின்றனர்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு