'க்வாட நெகடிவ்' (Gwada Negative) என்றழைக்கப்படும் உலகின் 48வது ரத்தப் பிரிவு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த ரத்தப்பிரிவு உலகில் ஒரே ஒரு பெண்ணுக்கு மட்டுமே இருப்பதாக அறியப்பட்டுள்ளது.
அவர் பிரான்ஸ் நிர்வாகத்தின் கீழ் இருக்கும் க்வாடலூப் (Guadeloupe) என்ற தீவை பூர்வீகமாக கொண்டவர். அந்த இடத்தை குறிக்கும் வகையிலேயே இந்த ரத்தப்பிரிவுக்கு 'க்வாட' நெகடிவ் என்று பெயரிடப்பட்டுள்ளது.
இந்த ரத்தப்பிரிவை பிரான்ஸ் நாட்டின் தேசிய ரத்த முகமையான Établissement Français du Sang (French Blood Establishment) கண்டறிந்துள்ளது. இந்த கண்டுபிடிப்பை சர்வதேச குருதியேற்றல் அமைப்பு (International Society for Blood Transfusion) அங்கீகரித்து, PIG7 எனப்படும் உலகின் 48வது ரத்தப்பிரிவாக அடையாளப்படுத்தியுள்ளது.
2025 ஜூன் மாதம் வரையில் உலகில் ஒரே ஒரு நபருக்கு மட்டுமே இந்த ரத்தவகை இருப்பதாக பதிவு செய்யப்பட்டுள்ளது.
ரத்தம் எவ்வாறு அரிதான வகையாகிறது?குறிப்பிட்ட ஒரு ரத்த வகை அரிதானதா என்பதை தீர்மானிக்க, பொதுவாக எல்லோரிடமும் காணப்படும் ஆன்டிஜன் அந்த ரத்த வகையில் இல்லை என்பதை உறுதி செய்ய வேண்டும். ஆயிரத்தில் ஒருவருக்கும் குறைவாக அந்த ரத்த வகை இருந்தால் அது அரிய ரத்த வகை எனப்படும்.
இப்போது கண்டறியப்பட்டுள்ள ரத்தப் பிரிவின் அரிய அம்சம் இதில் EMM antigen இல்லை என்பதே ஆகும். EMM antigen கிட்டத்தட்ட எல்லா மனிதர்களிலும் காணப்படுவதாகும். EMM antigen என்பது ரத்தத்தில் உள்ள சிவப்பு அணுக்களில் காணப்படுவதாகும். இது சில புரதங்களை செல்கள் மீது பொருத்த உதவியாக இருக்கும். நமது உடல், ரத்தத்தில் உள்ள சிவப்பு அணுக்களை தன்னுடைய செல்கள் தான் என்று கண்டறியும் 'குறியீடு'களாக EMM antigen செயல்படும்.
2011-ம் ஆண்டில், 54 வயதான குவாடலூப்பை சேர்ந்த அந்த பெண், தனது அறுவை சிகிச்சைக்கு முன்பாக சில ரத்தப் பரிசோதனைகளை மேற்கொண்டுள்ளார். அப்போது அவரது ரத்தத்தில் சில வித்தியாசங்கள் இருப்பதை பிரான்ஸ் நாட்டு மருத்துவர்கள் கவனித்தனர்.
ஏற்கெனவே உள்ள ரத்த வகைகளுடன் அவரது ரத்தம் பொருந்தவில்லை. ஆனால் எதனால் அவருக்கு அப்படி உள்ளது என்று கண்டறிவதற்கான நவீன தொழில்நுட்பங்கள் இல்லை.
பிரான்ஸ் தேசிய ரத்த முகமையை (EFS) சேர்ந்த ஆய்வாளர்கள் தியர்ரி பெய்ரார்ட் மற்றும் ஸ்லிம் அசௌசி உள்ளிடோர் கொண்ட குழு தொடர் ஆய்வுகள் நடத்தி வந்தனர். 2019ம் ஆண்டில், மரபணு வரிசைப்படுத்துதலில் நவீன வழிமுறைகள் நடைமுறைக்கு வந்தன.
அதிக எண்ணிக்கையிலான மரபணுக்களை மிக வேகமாக வரிசைப்படுத்தும் தொழில்நுட்பங்கள் உருவாகியிருந்தன. அதன் பின்னரே புதிய ரத்த வகைக்கு காரணமான தனித்துவமான மரபணு திரிபினை கண்டறிய முடிந்ததாக ஆய்வாளர் தியரி பெய்ரார்ட் கூறியுள்ளார். இந்த மரபணு திரிபின் காரணமாகவே EMM antigen உற்பத்தியாவதில்லை.
க்வாட ரத்த வகை கண்டறியப்பட்ட பெண்ணின் பெற்றோர் இருவருமே மேற்சொன்ன மரபணு திரிபினை பெற்றிருந்தனர். எனவே, இருவரிடமும் இருந்து இந்த மரபணு திரிபினை அந்த பெண் பெற்றுள்ளார். தற்போது வரை உலகத்தில் இந்த வகை ரத்தம் கண்டறியப்பட்டுள்ள நபர் இவர் ஒருவர் மட்டுமே என்பதால், அவரால் வேறு யாரிடம் இருந்தும் ரத்த தானம் பெற முடியாது என்று தியரி பெய்ரார்ட் கூறியுள்ளார்.
உலகில் கிட்டத்த அனைவருமே EMM antigen பெற்றிருப்பதால் அவரால் வேறு ஒருவரிடமிருந்து ரத்தம் தானமாக பெற முடியாது. எனவே இதே ரத்த வகை கொண்ட வேறு நபர்கள் அவர் பிறந்த க்வாடலூப் தீவிலோ அதன் அருகில் உள்ள பகுதிகளிலோ வாழ்கிறார்களா என்று கண்டறியும் பணி நடைபெற்று வருகிறது.
அரிய ரத்த வகை கொண்டவர்களுக்கு, அதே ரத்த வகையைத்தான் தானமாக பெற முடியும். ஒரு வேளை மாற்று ரத்தம் செலுத்தப்பட்டால், அவர்களிடம் இல்லாத ஆண்டிஜன் உடலுக்குள் சென்று விடும். அந்த ஆண்டிஜனை அவர்களின் உடல் ஏற்காது. அதனை உடல் தமக்கு அந்நியமாக கருதி தாக்கத் தொடங்கும்.
நுண் உயிரியலாளரான ஷண்முகப்பிரியா "ரத்த வகையை மாற்றி உள்ளே செலுத்துவது சில நேரங்களில் உயிருக்கே ஆபத்தாக மாறக்கூடும். பாம்பே குரூப் எனும் அரிய ரத்த வகையில் எச் ஆண்டிஜன் (H antigen) இருக்காது. அந்த ஆண்டிஜன் நம்மில் கிட்டத்தட்ட எல்லோருக்கும் உண்டு. எனவே பாம்பே ரத்த வகை கொண்டவர்களுக்கு ரத்தம் செலுத்தும் போது கவனமாக இருக்க வேண்டும். இது போன்ற அரிய வகை ரத்தம் கொண்டவர்களுக்கு தங்களுக்கு தாங்களே ரத்தம் செலுத்திக் கொள்ளும் முறை உள்ளது.
அவர்களது ரத்தத்தை தாங்களே தானமாக அளித்து சேகரித்து வைத்துக் கொள்ள முடியும். ரத்தத்தின் வெவ்வேறு கூறுகளை தனித்தனியாக சேமித்து வைக்க முடியும். சில கூறுகளை ஓராண்டு காலம் வரை வைத்துக் கொள்ள முடியும். ஆண்டிஜன்கள் இல்லாத பிளாஸ்மா போன்ற கூறுகளை எந்த கொடையாளரிடமிருந்தும் பெற்றுக் கொள்ள முடியும்" என்கிறார்.
அரிய வகை ரத்தம் கொண்ட கர்ப்பிணி பெண்களில் மாற்று ரத்தப்பிரிவு கொண்ட தங்கள் குழந்தையின் செல்களுக்கு எதிரான செல்களை தங்கள் உடல் உருவாக்கிவிடும் அபாயம் நிலவுகிறது.
"O நெகடிவ் போன்ற ரத்தப்பிரிவு கொண்ட கர்ப்பிணிகளுக்கு, பேறு காலத்தின் இறுதிக் கட்டத்தில் சில ஆண்டிபாடிகள் வழங்கப்படும். வழக்கமாக ரத்த ஓட்டம் தாயிலிருந்து குழந்தைக்கு செல்வதாகவே இருக்கும். ஒரு வேளை குழந்தையிடமிருந்து தாய்க்கு ரத்தம் ஓட்டம் இருந்தால் அதனால் நேரும் விளைவுகளை தடுக்க இந்த ஆண்டிபாடிகள் வழங்கப்படும்." என்று ஷண்முகப்பிரியா கூறுகிறார்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு