சென்னைக்கும் புதுச்சேரிக்கும் இடையில் கிழக்குக் கடற்கரையில் அமைந்திருக்கும் ஆலம்பரைக் கோட்டை, ஒரு காலத்தில் மிக முக்கியமான வர்த்தக மையமாக திகழ்ந்துள்ளது. ஆனால், 18ஆம் நூற்றாண்டில் இந்தக் கோட்டை முற்றிலுமாக சிதைந்து போனது. காரணம் என்ன?
17ஆம் நூற்றாண்டில் துவங்கி, காலனி ஆதிக்க காலம் நெடுக தமிழ்நாட்டின் கிழக்குக் கடற்கரையோரமாக பல கோட்டைகள் கட்டப்பட்டன. கட்டப்பட்ட காலத்திலும் அதற்கு அடுத்த சில நூற்றாண்டுகளிலும் அரசியல் முக்கியத்துவமும் வர்த்தக முக்கியத்துவமும் மிகுந்த இடங்களாக இந்தக் கோட்டைகள் திகழ்ந்தன. ஆனால், 19ஆம் நூற்றாண்டின் இறுதிக்குள் இந்தக் கோட்டைகள் தங்கள் அதிகார முக்கியத்துவத்தை இழந்தன. சில கோட்டைகள் சிதைந்தும் போயின. அப்படி சிதைந்துபோன ஒரு கோட்டைதான் ஆலம்பரைக் கோட்டை.
சென்னையிலிருந்து நீளும் கிழக்குக் கடற்கரைச் சாலையில் சுமார் 100 கி.மீ. தூரத்தில் அமைந்திருக்கிறது இடைக்கழிநாடு. காஞ்சிபுரம் மாவட்டம் செய்யூர் தாலுகாவில் அமைந்திருக்கும் இந்த கிராமம், பத்துப்பாட்டு நூலான சிறுபாணாற்றுப்படையோடு தொடர்புடையது. ஓய்மானாட்டுத் தலைவனான நல்லியக்கோடனை பற்றிப் பாடப்பட்ட சிறுபாணாற்றுப்படையை இயற்றியவர் இடைக்கழிநாட்டு நல்லூர் ஈத்தத்தனார் எனக் குறிப்பிடப்படுகிறார். இந்த இடைக்கழிநாடு கிராமத்தில்தான் அமைந்திருக்கிறது ஆலம்பரைக் கோட்டை.
'ஆலம்பர்வா', 'ஆலம்புரவி' என்றெல்லாம் வரலாற்று ஆவணங்களில் குறிப்பிடப்படும் ஆலம்பரைக் கோட்டை 17ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டிருக்கலாம் எனக் கருதப்படுகிறது. கிழக்குக் கடற்கரையில் முக்கியமான ஒரு வர்த்தகத்தலமாக இந்தக் கோட்டை இருந்திருந்தாலும், யாரால் கட்டப்பட்டது என்பது குறித்து தகவல்கள் ஏதும் கிடையாது. முகலாயர் ஆட்சியின் பிற்காலத்தில் இந்தக் கோட்டை கட்டப்பட்டதாகக் கருதப்படுகிறது என்கிறது தமிழ்நாடு மாநில தொல்லியல்துறை.
கர்நாடக பகுதிகளை கவனித்துக்கொள்ள முகலாயர்களின் ஆளுநர்களாக நியமிக்கப்பட்டவர்கள் கர்நாடக நவாப் அல்லது ஆற்காடு நவாப் எனப்பட்டனர். இப்படி முகலாயர்களால் நியமிக்கப்பட்டவர்களில் கடைசியாக நியமிக்கப்பட்டவர் முதலாம் சதத்துல்லா கான். ஔரங்கசீபின் மரணமடைந்து சில ஆண்டுகளுக்குப் பிறகு இவர் நியமிக்கப்பட்டார்.
ஔரங்கசீபின் மரணத்துக்குப் பின் முகலாய சாம்ராஜ்யம் பலவீனமடைய ஆரம்பித்திருந்தது. ஆகவே, தனித்துச் செயல்பட முடிவெடுத்தார் சதத்துல்லா கான். சதத்துல்லா கானுக்கு குழந்தைகள் ஏதும் இல்லாத நிலையில், தனது சகோதரனின் மகன் தோஸ்த் அலி கானை தனது வாரிசாக நியமித்தார். சதத்துல்லா கானின் மரணத்துக்குப் பிறகு, தோஸ்த் அலி கான் ஆற்காடு நவாப் ஆனார். இவரது காலகட்டத்திலிருந்துதான் ஆலம்பரைக் கோட்டையின் பெயர் குறிப்பிட்ட ஆவணங்கள் கிடைக்கின்றன.
இந்தக் காலகட்டத்தில் ஆலம்பரைக்கு அருகில் இருந்த பாண்டிச்சேரி ஃபிரெஞ்சுக்காரர்கள் வசம் இருந்தது. அப்போது அங்கே ஆளுநராக இருந்தவர் ஜோசப் ஃப்ரான்ஸ்வா தூப்ளே. இவரது மொழிபெயர்ப்பாளராகவும், பாண்டிச்சேரியின் முக்கிய வர்த்தகராகவும் இருந்தவர் ஆனந்தரங்கம் பிள்ளை. இவர் தனது தினசரி நடவடிக்கைகளை நாட்குறிப்புகளாக எழுதிவைத்தார். அதில் 1736லிருந்து ஆலம்பரை கோட்டை பற்றிய தகவல்கள் கிடைக்கின்றன.
கர்நாடக நவாபாக இருந்த தோஸ்த் அலி கான், தம் ராஜ்ஜியத்துக்கான காசுகளை பாண்டிச்சேரியில் அச்சடிப்பதற்கான அனுமதிப் பத்திரத்தை ஆலம்பரையிலிருந்து 1736ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 10ஆம் தேதி கொடுத்தனுப்பியதாக ஆனந்தரங்கம் பிள்ளை தனது நாட்குறிப்பில் குறிப்பிடுகிறார்.
பாண்டிச்சேரிக்குள் நாணய வார்ப்படம் அமைப்பதில், ஒரு பாதி பணி ஆலம்பரையைச் சேர்ந்த பொட்டி பட்டன் என்பவருக்குக் கொடுக்கப்பட்டிருக்கிறது என்றும் இந்த நாட்குறிப்பு கூறுகிறது. இதற்கடுத்த பல ஆண்டுகளுக்கு ஆலம்பரை பற்றிய தகவல்கள், ஆனந்தரங்கம் பிள்ளையின் நாட்குறிப்பில் ஆங்காங்கே காணப்படுகின்றன.
1740வாக்கில் தோஸ்த் அலி கான் மராத்தியர்களுடனான போரில் கொல்லப்பட்டார். இரண்டாவது கர்நாடகப் போரில் அப்போதைய ஆற்காடு நவாபான அன்வருதீனை போரில் தோற்கடித்த சாந்தா சாஹிப், 1749ல் புதிய நவாபானார். கர்நாடகப் போரில் இவர் தரப்புக்கு ஆதரவாக பிரெஞ்சு ஆளுநர் தூப்ளே செயல்பட்டார். இதனால், 1750ல் ஆலம்பரைக் கோட்டை பிரெஞ்சுக்காரர்களுக்குக் கொடுக்கப்பட்டது.
ஆனால், நீண்ட நாட்கள் இந்தக் கோட்டை பிரெஞ்சுக்காரர்கள் வசம் நீடிக்கவில்லை. வந்தவாசி போருக்குப் பின் பாண்டிச்சேரியும் ஆங்கிலேயர்களால் கைப்பற்றப்பட்டது. அப்போது ஆலம்பரைக் கோட்டையும் பிரிட்டிஷ்காரர்கள் வசம் வந்தது. ஆனால், பிரிட்டிஷ்காரர்கள் இந்தக் கோட்டையை பயன்படுத்த விரும்பவில்லை. கோட்டையைக் கைப்பற்றிய ஆங்கிலேயர்கள் இதன் பெரும்பகுதியை இடித்துத் தள்ளினர்.
ஆலம்பரைக் கோட்டையைப் பொறுத்தவரை, ஒரு வர்த்தகத் தளமாகவே பயன்பட்டது. 223 மீட்டர் நீளமும் 163 மீட்டர் அகலமும் கொண்ட இந்தக் கோட்டை, வங்கக் கடலை ஒட்டி செங்கலாலும் சுண்ணாம்பாலும் கட்டப்பட்டது. படகுகள் சரக்குகளை கோட்டையின் வாயிலுக்கே வந்து சேர்க்கும் வகையில் கோட்டையின் வடக்குச் சுவற்றை ஒட்டி கால்வாயும் வெட்டப்பட்டிருந்தது.
கிழக்குப் பகுதியில் சரக்குகளை இறக்கி ஏற்ற ஒரு படகுத் துறையும் இருந்தது. ஒரு மீட்டருக்கும் மேற்பட்ட அகலத்தில் இந்தக் கோட்டைச் சுவர்கள் அமைந்திருந்தன. 15 ஏக்கர் பரப்பில் இருந்த இந்தக் கோட்டைக்கு 12 கண்காணிப்புக் கோபுரங்கள் இருந்தன. இப்போது இவற்றில் சில கோபுரங்களே எஞ்சியிருக்கின்றன.
இந்தக் கோட்டைக்குள்ளேயே ஆற்காடு நவாபுக்காக ஒரு நாணய வார்ப்பட சாலையும் இருந்தது. இங்கு அச்சிடப்பட்ட நாணயங்கள் ஆலம்பரை வராகன் என குறிப்பிடப்பட்டன. (ஆலம்பரைக் கோட்டைக்குள் இருந்த நாணய வார்ப்படத்தில் செய்யப்பட்ட காசுகள் குறித்து பிரெஞ்சு கவர்னரான தூப்ளேவுக்கு சில மாற்றுக் கருத்துகள் இருந்தன. அங்கு அடிக்கப்படும் தங்க நாணயங்கள் சற்று மாற்றுக் குறைவாக இருப்பதாக கருதினார் அவர்).
சிதைந்த இந்தக் கோட்டையின் நடுவில் இஸ்லாமியத் துறவி ஒருவர் புதைக்கப்பட்ட இடம் இருக்கிறது. 2004 ஏற்பட்ட சுனாமியில் கடலை ஒட்டி அமைந்திருந்த கோட்டைச் சுவர்கள் சரிந்து விழுந்துவிட்டன. தற்போது கோட்டையின் உட்பகுதி முழுவதும் மண் மூடிக் காணப்படுகிறது.
2011 - 2012ஆம் ஆண்டில் இந்தக் கோட்டைக்குள் தமிழகத் தொல்லியல் துறை அகழாய்வு நடத்தியது. "இந்தக் கோட்டைக்குள் நடந்த அகழாய்வில் இரும்பு, ஈயம், செம்புப் பொருட்கள் கிடைத்தன. கிரானைட் பீரங்கிக் குண்டுகள், பார்சீலியன் பாத்திரங்கள், டெரகோட்டா விளக்கு, புகைக்கும் பைப்புகள், வளையல் துண்டுகள், செப்புக் கசடு, இரும்புக் கசடு, இரும்பு ஆணி, கண்ணாடி பாட்டில்கள் ஆகியவை கிடைத்தன.
நாணய வார்ப்படத்தில் இருந்திருக்கக் கூடிய உலையின் குழாய்களும் கிடைத்தன. இங்கு கிரானைட் குண்டுகளும் ஈயக் குண்டுகளும் கிடைத்திருப்பது, 18ஆம் நூற்றாண்டின் ஆங்கிலோ - பிரெஞ்சு யுத்தத்தில் இந்தக் கோட்டை முக்கியப் பங்கு வகித்திருக்கலாம் என்பதைச் சுட்டிக்காட்டுகிறது" என்கிறார் இங்கு அகழாய்வை நடத்திய தமிழக தொல்லியல் துறையின் இணை இயக்குநர் ஆர். சிவானந்தம்.
ஒரு காலத்தில் மிகுந்த பரபரப்புடன் இயங்கிய இந்தக் கோட்டையிருந்து நெய், துணி வகைகள் உள்ளிட்ட விலை உயர்ந்த பொருட்கள் ஏற்றுமதி செய்யப்பட்டன. தற்போது இந்தக் கோட்டைக்குள்ளிருந்து எடுத்துச் செல்ல எதுவுமில்லை, அமைதியைத் தவிர.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு