இது தெரியுமா ? இந்த 5 விஷயங்களை பின்பற்றினால் ரொம்பவே ஈஸியாக தூங்கிவிடலாம்..!
Newstm Tamil July 07, 2025 09:48 AM

தினமும் சீக்கிரம் தூங்க வேண்டும் எனப் படுக்கைக்குச் சென்றாலும் தூக்கம் வராமல் புரண்டு கொண்டிருப்பவர்களையும் நாம் பார்த்திருப்போம். இதற்கிடையே அமெரிக்காவில் ராணுவத்தில் பணிபுரிந்த ஒருவர் எளிதாகத் தூங்கும் வழிமுறையைப் பகிர்ந்துள்ளார்.

அனைவருக்கும் 6 முதல் 8 மணி நேரம் வரையிலான நல்ல தூக்கம் முக்கியம். அப்போதுதான் பகல் நேரத்தில் புத்துணர்ச்சியுடன் நம்மால் வேலைகளைச் சிறப்பாகச் செய்ய முடியும். அதிலும் குழந்தைகளுக்கும் வளர் இளம் பருவத்தில் உள்ளவர்களுக்கும் நல்ல தூக்கம் நிச்சயம் தேவை. முறையாகத் தூக்கம் கிடைக்கவில்லை என்றால் அவர்களின் வளர்ச்சியே கூட பாதிக்கப்படும் அபாயம் உள்ளது. மேலும், இரவு நேரங்களில் முறையாகத் தூங்கவில்லை என்றால் அது மோசமான உடல்நிலை பாதிப்புகளைக் கூட ஏற்படுத்தும் அபாயம் உள்ளதாக மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.

அதேநேரம் பலரும் இரவில் தூங்க முடியாமல் சிரமப்பட்டே வருகின்றனர். இரவில் நல்ல உறக்கம் முக்கியம் என்பதால் சீக்கிரம் தூங்கச் சென்றாலும் பலருக்கும் உடனே தூக்கம் வருவதில்லை. 10 மணிக்குப் படுக்கைக்குச் சென்றும் 1,2 மணி வரை கூட தூங்க முடியாமல் சிரமப்படும் நபர்களும் உள்ளனர். அவர்களுக்குத் தூக்கம் முக்கியம் எனத் தெரிந்தாலும் தூங்க முடிவதில்லை. ஆனாலும், கவலை வேண்டாம் எளிதாக எப்படித் தூங்கச் செல்வது என்பது குறித்த தகவல்களை அமெரிக்கா ராணுவ வீரர் ஒருவர் பகிர்ந்துள்ளார்.

இந்த முறைகளைப் பின்பற்றினால் வெறும் 120 நொடிகள் அதாவது இரண்டே நிமிடத்தில் தூங்கிவிடலாம். பொதுவாக ராணுவத்தில் ரொம்பவே ஸ்ட்ரிக்ட்டான ஷெட்யூல் கடைப்பிடிக்கப்படும். இதனால் தூங்கும் நேரத்தில் ஒழுங்காகத் தூங்கினால் மட்டுமே மறுநாள் சரியாக வேலை செய்ய முடியும். இதனால் மிக வேகமாகத் தூங்க அமெரிக்காவில் ராணுவத்தினர் இந்த முறையைத் தான் பயன்படுத்துவார்களாம். ‘Relax and Win: Championship Performance’ என்ற புத்தகத்திலும் இது குறித்து மிகத் தெளிவாக விளக்கப்பட்டுள்ளது.

ராணுவ வீரர்கள் எந்த இடத்தில் வேண்டுமானாலும் மிக விரைவாகத் தூங்கவே இந்த முறை முதலில் உருவாக்கப்பட்டது. உடலுக்கு மிக நல்ல ஒரு தளர்வைத் தர இந்த முறையை நாம் பின்பற்ற வேண்டும். இது சுமார் 96% பேருக்குச் சிறப்பாக வேலை செய்து தூக்கத்தைத் தருகிறது.

1) உங்கள் முகத்தில் உள்ள தசைகளைத் தளர்த்தவும். நாக்கு மற்றும் தாடை பகுதி தசைகள் மற்றும் உங்கள் கண்களைச் சுற்றியுள்ள தசைகளையும் தளர்த்தவும். உங்கள் உடல் முழுவதும் ஸ்கேன் செல்வதைப் போலக் கற்பனை செய்யுங்கள். தாடை மூடியிருக்க வேண்டும். மெல்லக் கண்களை மூடி ஆழமாகச் சுவாசிக்கவும்.

2) உங்கள் தோள்கள், கைகளை மெல்லத் தளர்த்தவும்.. உங்கள் தோள்பட்டை அப்படியே படுக்கையில் மூழ்குவதாகக் கற்பனை செய்யுங்கள். கைகளில் மேல் இருந்து கீழ் வரை மெல்லத் தளர்த்தவும். ஆழ்த்து சுவாசிப்பதைத் தொடர்ந்து செய்யுங்கள். ஆழ்த்து சுவாசிப்பது இதில் ரொம்பவே முக்கியம்

3) அடுத்ததாக உங்கள் மார்பு மற்றும் வயிற்றுப் பகுதியைத் தளர்த்துங்கள். பொதுவாக மார்பு, பின்புறம், வயிற்றுப் பகுதியில் தான் அழுத்தம் அதிகமாக இருக்கும். எனவே, இந்த பகுதிகளை நன்கு தளர்த்தவும். மூச்சை விடும்போது, வயிற்றுப் பகுதிகளில் உள்ள தசைகள் ரிலாக்ஸ் ஆவதை உறுதி செய்யுங்கள்

4) அடுத்து உங்கள் வலது தொடையில் தொடங்கி, உங்கள் கைகளைப் போலவே உங்கள் கால்களையும் தளர்த்துங்கள். உங்கள் காலை ஸ்கேன் செய்வது போலக் கற்பனை செய்யுங்கள். அழுத்தம் உங்கள் கணுக்கால் மற்றும் பாதம் வழியே வெளியேறுவது போலக் கற்பனை செய்யுங்கள். அடுத்தே இதை முறையை இடது காலிலும் செய்யுங்கள்

5) இப்போது உங்கள் உடலில் எந்தவொரு அழுத்தமும் இருக்காது. அடுத்து இதைச் செயல்முறையை மனதிற்குச் செய்ய வேண்டிய நேரம். நீங்கள் முழுமையாக இருண்ட இடத்தில் இருப்பதைப் போலக் கற்பனை செய்து கொள்ளுங்கள். இப்படி யோசிக்கப் பயமாக இருந்தால், எதையும் யோசிக்காமல் இருங்கள்

இந்த 5 ஸ்டேப்களையும் பின்பற்றினால் ரொம்பவே ஈஸியாக தூங்கிவிடலாம். பெரியவர்களுக்குக் குறைந்தது 6 மணி நேரத் தூக்கம் முக்கியம்.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.