"நான் யாரிடமும் சொல்லவில்லை. என் அக்கா புற்றுநோயால் போராடிக் கொண்டிருக்கிறார்."
எட்ஜ்பாஸ்டன் டெஸ்டில் இந்தியாவுக்கு வரலாற்று வெற்றியைப் பெற்றுத் தந்த பிறகு, ஆகாஷ் தீப் இதைச் சொல்லும்போது மிகவும் உணர்ச்சிவசப்பட்டார்.
முதல் இன்னிங்ஸில் நான்கு விக்கெட்டுகளையும், இரண்டாவது இன்னிங்ஸில் ஆறு விக்கெட்டுகளையும் ஆகாஷ் தீப் வீழ்த்தி, ஐந்து டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரை 1-1 என சமன் செய்ய உதவினார்.
இரண்டாவது டெஸ்டில் பந்து வீசும்போது, தனக்கு ஒரே ஒரு குறிக்கோள் மட்டுமே இருந்ததாக அவர் கூறினார். அது அவரது மூத்த சகோதரியின் முகத்தில் புன்னகையை வரவழைப்பது.
போட்டிக்குப் பிறகு, ஜியோ-ஹாட்ஸ்டாருக்காக வர்ணனை செய்து கொண்டிருந்த புஜாராவிடம் ஆகாஷ் தீப் பேசினார்.
"உங்கள் கையில் பந்து இருக்கிறது. உங்கள் கையில் ஸ்டம்ப் இருக்கிறது. நீங்கள் ஆறு விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளீர்கள். வீட்டில் உள்ள அனைவரும் மகிழ்ச்சியாக உள்ளார்களா?" என்று ஆகாஷ் தீப்பிடம் புஜாரா கேட்டார்.
இந்தக் கேள்விக்கு பதிலளித்த ஆகாஷ் தீப், "நான் யாரிடமும் சொல்லாத மிகப்பெரிய விஷயம் என்னவென்றால், என் அக்கா கடந்த இரண்டு மாதங்களாக புற்றுநோயுடன் போராடி வருகிறார். தற்போது அவரது உடல்நிலை சீராக உள்ளது" என்றார்.
"அவள் மிகவும் மகிழ்ச்சியாக இருப்பாள், ஏனென்றால் அவள் கடந்து செல்லும் மனநிலையைக் கருத்தில் கொண்டால், இந்த மகிழ்ச்சி அவளுக்கு மிகப்பெரிய விஷயமாக இருக்கும்."
"இந்தப் போட்டியை அவளுக்கு அர்ப்பணித்து விளையாடினேன். அவள் முகத்தில் ஒரு புன்னகையை வரவழைக்க வேண்டும்" என்று அவர் கூறினார்.
"என்னுடைய இந்த நிகழ்ச்சி உனக்காகத்தான் சகோதரி. நான் பந்தை கையில் வைத்திருக்கும் போதெல்லாம், உன் முகம் என் கண் முன்னே இருந்தது. உன் முகத்தில் மகிழ்ச்சியைக் காண விரும்பினேன். நாங்கள் அனைவரும் உன்னுடன் இருக்கிறோம்" என்று ஆகாஷ் தீப் கூறினார்.
இங்கிலாந்துக்கு எதிரான ஐந்து டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரின் முதல் போட்டியில் ஆகாஷ் தீப் அணியில் சேர்க்கப்படவில்லை.
இருப்பினும், ஜஸ்பிரித் பும்ராவுக்குப் பதிலாக அவர் எட்ஜ்பாஸ்டன் டெஸ்டில் சேர்க்கப்பட்டார். மேலும் ஆகாஷ் தீப் தனது தேர்வு சரியானது என்பதை நிரூபித்தது மட்டுமல்லாமல், 10 விக்கெட்டுகளை வீழ்த்தி வரலாற்றையும் படைத்தார்.
எட்ஜ்பாஸ்டன் டெஸ்டின் இரண்டு இன்னிங்ஸ்களிலும் சேர்த்து ஆகாஷ் தீப் 187 ரன்களுக்கு 10 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இது பிரிட்டன் மண்ணில் ஒரு இந்திய பந்துவீச்சாளரின் சிறப்பாக பந்துவீச்சாகும்.
இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ள, ஆகாஷ் தீப் ஒரு சிறப்பு உத்தியை வகுத்திருந்தார்.
"இந்தியாவில் இதுபோன்ற விக்கெட்டுகளில் நாங்கள் நிறைய விளையாடியுள்ளோம். விக்கெட்டுக்கு என்ன நடக்கிறது அல்லது என்ன நடக்கவில்லை என்பதை பார்க்க வேண்டியதில்லை. ஏனென்றால் அது எங்கள் கையில் இல்லை. நான் சரியான பகுதிகளில் பந்து வீச வேண்டியிருந்தது" என்று அவர் கூறினார்.
எட்ஜ்பாஸ்டன் டெஸ்டின் கடைசி இன்னிங்ஸில், இங்கிலாந்தின் பிரபல பேட்ஸ்மேன் ஜோ ரூட்டுக்கு ஆகாஷ் தீப் பந்து வீசினார். அவருடைய ஒரு பந்து பெரிதும் பேசப்பட்டது.
"ஆரம்பத்தில் நான் ஜோ ரூட்டுக்கு நேராக பந்துகளை வீசினேன். ஆனால் அந்த பந்தில், நான் கார்னரிலிருந்து கொஞ்சம் கோணமாக பந்து வீசினேன். அந்த பந்தில் நான் நினைத்தது நடந்தது" என்று அவர் கூறினார்.
இந்த போட்டியின் இரண்டு இன்னிங்ஸ்களிலும் ஹாரி புரூக்கின் விக்கெட்டை ஆகாஷ் தீப் வீழ்த்தினார்.
"இரண்டாவது இன்னிங்ஸில் ஹாரி புரூக் தற்காப்புடன் விளையாடினார். அவர் விக்கெட்டை மறைத்து விளையாடினார். இரண்டு-மூன்று ஓவர்கள் எப்படி பந்து வீசுவது என்று எனக்கு குழப்பமாக இருந்தது. நல்ல பகுதியில் பந்தை கடுமையாக வீசுவதே எனது ஒரே இலக்கு" என்று ஆகாஷ் தீப் கூறினார்.
எட்ஜ்பாஸ்டன் டெஸ்டில் கிடைத்த வெற்றி, தொடரின் மீதமுள்ள மூன்று போட்டிகளிலும் இந்திய அணிக்கு பயனளிக்கும் என்று ஆகாஷ் தீப் நம்புகிறார்.
"இந்த வெற்றியில் நாங்கள் மிகவும் மகிழ்ச்சியடைகிறோம். நாங்கள் அதை அனுபவிக்கிறோம். இந்த வெற்றியிலிருந்து எங்களுக்கு நம்பிக்கை கிடைக்கும். எங்கள் பீல்டிங்கும் நன்றாக இருந்தது" என்று அவர் கூறினார்.
இந்தியா - இங்கிலாந்து அணிகள் மோதும் மூன்றாவது டெஸ்ட் போட்டி ஜூலை 10-ம் தேதி லண்டனில் உள்ள லார்ட்ஸில் தொடங்குகிறது.
லார்ட்ஸில் விளையாட வாய்ப்பு கிடைத்தால், எட்ஜ்பாஸ்டனில் செய்த அதே திட்டத்துடன் பந்து வீச முயற்சிப்பேன் என்று ஆகாஷ் தீப் கூறினார்.
"எனது பலத்திற்கு ஏற்ப பந்து வீசுவேன். ஒரு நாள் அது பலனைத் தரும் அல்லது பலன் அளிக்காமல் போகலாம். ஆனால் நான் அதையே கடைப்பிடிப்பேன்" என்று அவர் கூறினார்.
ஆகாஷ் தீப் கடந்த ஆண்டு இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் இந்திய அணியில் அறிமுகமானார்.
அவர் பிகார் தலைநகர் பாட்னாவிலிருந்து சுமார் 180 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள ரோஹ்தாஸ் மாவட்டத்தில் உள்ள பட்டி கிராமத்தில் வசிப்பவர்.
இருப்பினும், ஆகாஷ் தீப் ரஞ்சி டிராபியில் பிகாருக்குப் பதிலாக மேற்கு வங்கத்திற்காக விளையாடியுள்ளார்.
2022 ஆம் ஆண்டு ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்காக ஐபிஎல்லில் அறிமுகமாகும் வாய்ப்பு அவருக்குக் கிடைத்தது.
இந்திய அணிக்காக அறிமுகமான பிறகு, ஐபிஎல்லில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அவரை ரூ.8 கோடிக்கு வாங்கியது.
இதுவரை, ஆகாஷ் தீப் இந்தியாவுக்காக எட்டு டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 25 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு