செங்கல்பட்டு மாவட்டம் வள்ளல்கோட்டையில் உள்ள முருகன் கோவிலில் நடைபெற்ற குடமுழுக்கு விழாவில் அரசியல் சர்ச்சை வலுப்பெறத் தொடங்கியது அதாவது தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் தலைவர் செல்வ பெருந்தகை, இந்த விழாவில் கலந்துகொள்ள வந்த போது, அவரை அதிகாரிகள் கோவிலுக்குள் அனுமதிக்கவில்லை என்ற குற்றச்சாட்டை அவர் முன்வைத்திருந்தார். அதேவேளை, முன்னாள் மாநில பாஜகத் தலைவர் தமிழிசை சௌந்தரராஜனுக்கு அனுமதி வழங்கப்பட்டதாக செல்வ பெருந்தகை வருத்தத்துடன் தெரிவித்திருந்தார்.
இதையடுத்து, “அனைவருக்கும் சம அனுமதி வழங்கப்பட வேண்டியது தவிர, அரசியல் அடிப்படையில் அதிகாரிகள் செயல்படக் கூடாது” என அவர் கடும் கண்டனம் தெரிவித்தார். மேலும், இது காலம் காலமாக நடைபெற்றுவருவதாகவும், அரசுக்கு கலங்கம் ஏற்படுத்தும் வகையில் ஒரு தொடர்ச்சியான அதிகார பலவீனம் எனவும் அவர் குற்றம்சாட்டினார்.
இந்த சர்ச்சைத் தீயை அணைக்க, இந்து சமய அறநிலைத்துறை அமைச்சர் சேகர் பாபு, நேற்று செல்வ பெருந்தகை அவர்களது இல்லத்திற்கு நேரில் சென்று சந்தித்தார். அவரிடம் நிகழ்ந்த சம்பவத்திற்காக தனிப்பட்ட முறையில் வருத்தம் தெரிவித்தார். மேலும், இந்த சம்பவம் முதலமைச்சரின் நல்லாட்சிக்குப் கலங்கம் ஏற்படுத்தக் கூடாது என்றும், இது போன்ற விவகாரங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்றும் தெரிவித்தார்.
அதன்பின், செல்வ பெருந்தகை கூறியதாவது, “அமைச்சர் சேகர் பாபு நேரில் வந்து நேர்மையான வருத்தம் தெரிவித்திருக்கிறார். இனி இந்த விவகாரம் முடிவடைந்ததாக கருதுகிறேன். அரசுக்கு அல்லது அமைச்சர் ஒருவருக்கும் இதனால் எந்த கலங்கமும் ஏற்பட வேண்டாம்” என தெரிவித்தார்.
அதோடு, அதிகாரிகள் செய்த தவறுகளுக்கு உரிய விசாரணை நடத்தப்படும் என்றும், தவறு செய்தவர்களுக்கு தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் சேகர் பாபு உறுதி அளித்துள்ளார். இந்தச் சந்திப்பு மற்றும் அதிகாரப்பூர்வ செயல்பாடு, அரசியல் சர்ச்சைகளுக்கு ஓர் அமைதி விளக்கை ஏற்றும் வகையில் அமைந்துள்ளது என்றே கூறலாம்.