உங்கள் சுவாசம் புத்துணர்வு இல்லாமல் துர்நாற்றத்துடன் இருப்பதாக கருதி, மற்றவர்களுடன் நெருங்கிச் செல்வதை தவிர்க்கிறீர்களா? கவலை வேண்டாம், இது சாதாரணமான ஒன்றுதான் என்பதுடன் அதற்கு தீர்வுகளும் இருக்கின்றன.
பற்களைச் சுத்தமாக வைத்திருப்பது என்பது பற்களுக்கும் ஈறுகளுக்கும் இடையே உள்ள இடைவெளிகளிலும், நாக்கின் பின்பகுதியிலும் தங்கிவிடும் பாக்டீரியாக்களுக்கு எதிரான முடிவில்லாத போராட்டம் போன்றது.
இந்த பாக்டீரியாக்களை அகற்றாவிட்டால், அவை அங்கு பெருகி, கடுமையான ஈறு நோய்களை ஏற்படுத்தலாம்.
ஆனால், இதைத் தடுக்க வழிகள் உள்ளன.
வாய் துர்நாற்றம் ஏற்பட காரணம் என்ன?உலகெங்கிலும், வாய் துர்நாற்றத்திற்கு முக்கிய காரணங்களில் ஒன்று பீரியோடோன்டிடிஸ், இது ஈறு விலகல் என்றும் அழைக்கப்படுகிறது.
"வயது வந்தவர்களில் பாதி பேர் ஏதோ ஒரு வகையில் ஈறு நோயால் பாதிக்கப்பட்டிருப்பார்கள்," என இங்கிலாந்தின் பர்மிங்காம் பல்கலைக் கழகத்தில் பல் மறுசீரமைப்பு மருத்துவத்தின் இணை பேராசிரியரான மருத்துவர் பிரவீன் ஷர்மா, பிபிசியின் வாட்ஸ் அப் டாக்ஸ்? என்ற நிகழ்ச்சியில் தெரிவித்தார்.
"துர்நாற்றத்தை, வாய் குழியிலிருந்து வரும் துர்நாற்றமாக நீங்கள் கருதலாம்," என்று அவர் வாயை குறிப்பிட்டு கூறுகிறார்.
"இது 90% வாய் துர்நாற்றங்களுக்கு காரணமாக இருக்கலாம்."
மீதமுள்ள 10% வாய் துர்நாற்றத்திற்கு வேறு காரணங்கள் உள்ளன.
"கட்டுப்படுத்தப்படாத நீரிழிவு நோய் இருந்தால், ஒரு குறிப்பிட்ட வகையான மூச்சு இருக்கும்," என்கிறார் டாக்டர் ஷர்மா.
"வயிற்றுப் பிரச்னைகள், இரையக உண்குழலியப் பின்னோட்ட நோய் போன்ற பிரச்னைகள் உள்ள நோயாளிகளுக்கு ஒரு வகையான புளிப்பான சுவாசம் இருக்கும். எனவே, உடல் முழுவதும் ஏற்படும் நோய்கள் வாய்க்குழியில் வெளிப்படும்.
இதைப் பற்றி செய்யக்கூடியது என்ன?
உங்கள் பற்கள் மற்றும் ஈறுகளுக்கு இடையே தேங்கும் பாக்டீரியாவை நீங்கள் சுத்தப்படுத்தாவிட்டால், அது நுண்ணிய புண்களை ஏற்படுத்தி அதற்கு பின் ஈறுகளில் ரத்தக் கசிவு ஏற்படலாம். இது ஜின்ஜைவைடிஸ், ஈறு நோயின் ஆரம்ப நிலை, ஆனால் இது சரிசெய்யக் கூடியது என்பது நற்செய்தி.
"ஜின்ஜைவைடிஸ் என்பது ஈறுகளில் ஏற்படும் வீக்கம், உங்கள் ஈறுகள் சிவப்பாக வீங்கி, மற்றும் பல் துலக்கும் போது ரத்தம் வடிவதையும் வைத்து நீங்கள் கவனிக்கலாம்," என்கிறார் மருத்துவர் ஷர்மா.
"இது மேலும் மோசமடைந்து பீரியோடோன்டைட்டிஸ் ஆக மாறும்."
சிவப்பு, வீக்கம் அல்லது பல் துலக்கும் போது ரத்தம் வடிதல் ஆகியவை ஏற்படுகிறதா என் உங்கள் ஈறுகளைப் பரிசோதியுங்கள், ஆனால் நடவடிக்கை எடுக்க அவகாசம் இருக்கிறது என்பதால் அதிகம் கவலைப்பட வேண்டாம்.
"பல் துலக்கும் போது வலிக்கும் ஈறுகளை துலக்குவதை இயல்பாகவே தவிர்ப்பது நோயாளிகள் செய்யும் ஒரு காரியம். ஏனெனில் 'ஓ, நான் ஏதோ தவறு செய்கிறேன், அதனால்தான் ரத்தம் வடிகிறது, என அவர்கள் நினைக்கிறார்கள் என்கிறார் மருத்துவர் ஷர்மா.
"இது கிட்டத்தட்ட தலைகீழாக உள்ளது - ரத்தம் வரும் ஈறுகளை ஒரு அறிகுறியாகக் கருதி, 'ஓ, நான் முன்பு சரியாக துலக்கவில்லை, இனி கொஞ்சம் நன்றாக துலக்க வேண்டும்,' என்று நினைக்க வேண்டும்." என்றார்.
சரியாக பல் துலக்குவதற்கு நீங்கள் நேரம் ஒதுக்கவேண்டும் என்கிறார் மருத்துவர் ஷர்மா.
"உங்கள் பற்களை துலக்கும் போதோ அல்லது பற்களை சுத்தப்படுத்தும் போதோ, நீங்கள் வேறு ஏதோ செய்து கொண்டிருக்கக் கூடாது," என்கிறார் அவர்.
நீங்கள் கண்ணாடி முன் நின்று முறையாக கவனம் செலுத்துவது சிறந்தது.
வலது கை பழக்கமுள்ள பலர் தங்களை அறியாமலே தங்களது இடதுபுறம் அதிக நேரம் துலக்குகின்றனர், இடது கை பழக்கமுள்ளவர்கள் தங்களது வலதுபுறம் அதிக நேரம் துலக்குகின்றனர். இது குறைவான கவனம் செலுத்தப்படும் பகுதியில் அதிக பாதிப்பை ஏற்படுத்த வாய்ப்பு உள்ளது.
நீங்கள் எந்த கையை பயன்படுத்துகிறீர்கள் என்பதை உணர்ந்து இரண்டு புறமும் கவனமாக ஒரே அளவு பல்துலக்குங்கள்.
பல் துலக்கும் நுட்பத்தை நன்கு தெரிந்துகொள்ளுங்கள்முதலில் பற்களுக்கிடையில் தூய்மைப்படுத்த தொடங்கலாம் என பரிந்துரைக்கிறார் மருத்துவர் ஷர்மா.
"பிளேக் (பற்களில் ஏற்படும் படிவு) அகற்றுவதற்கும், ஈறு ஆரோக்கியத்திற்கும் உதவுவதற்கு, பற்களுக்கு இடையில் தூய்மைப்படுத்தும் பிரஷ்களை (இன்டர்டெண்டல் பிரஷ்) பயன்படுத்துவது சிறந்தது," என்று அவர் கூறுகிறார்.
இன்டர்டெண்டல் பிரஷை பயன்படுத்திய பின்னர் உங்கள் வாயில் பிரஷை நகர்த்தும் போது அவசரப்படாமல் இருப்பது நல்லது. ஒவ்வொரு பல்லுக்கும் வெளிப்புறம், கடிக்கும் பகுதி மற்றும் உட்புறம் என மூன்று பரப்புகள் உள்ளன என்பதை நினைவில் கொள்ளுங்கள். அவை அனைத்துமே கவனமாக தூய்மைப்படுத்தப்பட வேண்டும். பல் துலக்குவதற்குத் தேவையான குறைந்தபட்ச நேரம் இரண்டு நிமிடங்கள் என்பது பலருக்கும் ஆச்சரியமளிக்கலாம்.
பலரும் பிரஷை பல்லுக்கு 90 டிகிரி கோணத்தில் பிடித்து முன்னும் பின்னும் அழுத்துவதன் மூலம் பல் துலக்குகிறார்கள், ஆனால் இந்த முறை ஈறு பின்னடைவை உண்டாக்கலாம்.
பிரஷ்ஷை பல்லுக்கு 45 டிகிரி கோணத்தில் பிடித்து மென்மையாக துலக்குங்கள். கீழ் பற்களின் ஈறு வரிசையை நோக்கி பிரஷின் நார்களை வைத்து மேற்பற்களின் ஈறு வரிசையை நோக்கி துலக்குங்கள். இது ஈறுவரிசையின் அடியில் மறைந்திருக்கும் பாக்டீரியாக்களை அகற்ற உதவும்.
உணவுக்குப் பின் பல் துலக்குவது சரியானது என நம்மில் பலருக்கு கற்பிக்கப்பட்டிருக்கலாம். ஆனால் அது அப்படியல்ல.
"காலை உணவுக்கு முன் பற்களை துலக்குவது சிறந்தது," என்கிறார் மருத்துவர் ஷர்மா. "அமிலத்தன்மை கொண்ட உணவுகளை உட்கொண்ட பிறகு பற்களைத் துலக்குவது பற்களின் கனிம பாகமான எனாமல் மற்றும் டெண்டினை மென்மையாக்கும் தன்மை கொண்டது என்பதால் அதை நீங்கள் செய்யக்கூடாது."
உணவில் உள்ள அமிலம் உங்கள் பற்களின் மேல் பாதுகாப்பாக உள்ள எனாமல் மற்றும் அதற்கு கீழ் உள்ள டெண்டினை மென்மையடைய வைக்கிறது. எனவே உணவு உட்கொண்ட உடனே பற்களை துலக்குவது உங்களது எனாமலை பாதிப்படைய வைக்கலாம்.
"நீங்கள் காலை உணவு உட்கொண்ட பிறகு பல் துலக்குவதை விரும்பினால், உங்கள் காலை உணவுக்கும் பல் துலக்குவதற்கும் இடையில் சிறிது நேர இடைவேளை விடவேண்டும்." என்கிறார் மருத்துவர் ஷர்மா.
நீங்கள் உங்கள் வாயைக் கொப்பளித்த பின்னர் சிறிது நேரம் காத்திருக்க வேண்டும்.
அதே போல் ஒரு நாளைக்கு இரண்டு முறை இரண்டு நிமிடங்கள் துலக்குவது சிறந்ததென்றாலும், சிலருக்கு ஒரு நாளைக்கு ஒருமுறை பல் துலக்குவது போதுமானதாக இருக்கும்.
நீங்கள் தூங்கும்போது எச்சில் சுரப்பது குறைகிறது, இது இரவு நேரத்தில் பாக்டீரியாக்கள் உங்கள் பற்களை அதிக சேதப்படுத்த அனுமதிக்கிறது. எனவே நீங்கள் உங்கள் பற்களை ஒரு நாளைக்கு ஒருமுறை மட்டும் முழுமையாக சுத்தப்படுத்தப் போகிறீர்கள் என்றால் அதற்கு இரவு நேரமே சிறந்தது.
நடுத்தர விறைப்புள்ள நார்களைக் கொண்ட பிரஷைப் பயன்படுத்துங்கள்.
பற்பசைகள் விலை உயர்ந்தவையாக இருக்க வேண்டியதில்லை.
"அதில் ஃபுளோரைட் இருக்கும்வரை எனக்கு மகிழ்ச்சியே," என்கிறார் மருத்துவர் ஷர்மா.
இந்த கனிமம் பல்லின் எனாமலை வலுப்படுத்தி பல் சொத்தையாவதற்கு கூடுதல் எதிர்ப்பை தருகிறது.
பல் சொத்தையாவதை தடுக்கும் வகையில் பல் துலக்கிய பின்னர், பற்பசையையும், ஃபுளோரைடையும் துப்புங்கள், ஆனால் வாய் கொப்பளிக்காதீர்கள்.
ஈறு நோயின் ஆரம்ப அறிகுறிகள் இருந்தால், மவுத்வாஷ் உபயோகிப்பதும் பயனுள்ளது, ஏனெனில் இது ப்ளேக் மற்றும் பாக்டீரியா உருவாவதைக் குறைக்க உதவுகிறது. ஆனால், இது பற்பசையில் உள்ள ஃபுளோரைடை நீக்கிவிடக் கூடும் என்பதால் பல் துலக்கிய பிறகு இதைப் பயன்படுத்த வேண்டாம்.
ஈறு விலகல் (பீரியோடோன்டிடிஸ்) அதிகரித்தால், பற்களுக்கு இடையே இடைவெளிகள் உருவாகத் தொடங்குவதை நீங்கள் பார்க்கலாம், மேலும் பற்களை தாங்கி நிற்கும் எலும்பு அரிக்கப்படும்போது, பற்கள் தளர்ந்து போகலாம்.
இந்த நிலை கட்டுப்படுத்தப்படாவிட்டால், பற்கள் உதிரும் அளவுக்கு நிலைமை மோசமாகலாம். நீங்கள் நீடித்த துர்நாற்றத்தையும் அனுபவிக்க நேரிடலாம். உங்களுக்கு இந்த அறிகுறிகள் இருந்தால் உடனடியாக உங்கள் பல் மருத்துவரை அணுகவும்.
இறுதியாக, உங்களது சுவாசத்தைப் புத்துணர்ச்சியுள்ளதாக்க சில குறிப்புகள்:
ஆனால் யாரிடம் கேட்கப் போகிறீர்கள் என்பதை தேர்வு செய்வதில் கவனமாக இருங்கள்!
29 ஏப்ரல் 2025 தேதியிட்ட பிபிசி-யின் What's Up Docs? பாட்காஸ்ட் எபிசோடை தழுவி எழுதப்பட்டது.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு