யவத்மாலில் ஒரு 16 வயது சிறுமியையும் அவரது தாயையும் ஒரு மந்திரவாதி, அகோரி சிகிச்சை என்ற பெயரில் ஒரு வருடம் ஒரு அறையில் பூட்டி வைத்த சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
காவல்துறையினர் அந்த மந்திரவாதிக்கு எதிராக ஆட்கடத்தல் உட்பட மந்திரவாத தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர் .
இந்த வழக்குதான் என்ன? மகாராஷ்டிராவில் மூடநம்பிக்கை ஒழிப்பு சட்டம் இயற்றப்பட்டு 12 ஆண்டுகள் கழித்தும் அகோரி சிகிச்சை என்ற பெயரில் இதுபோன்ற வக்கிரமான நடைமுறைகள் தொடர்வது ஏன்? பார்க்கலாம்.
இந்த சம்பவம் யவத்மால் நகரில் உள்ள வஞ்சாரி பைல் பகுதியில் நடைபெற்றது. குற்றம்சாட்டப்பட்ட மந்திரவாதியின் பெயர் மஹாதேவ் பரசுராம் பலாவே என்றும் அவர் வீட்டில் மந்திரவாதத்தை பயன்படுத்துகிறார் என்றும் யவத்மால் நகர காவல்துறையினருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது.
அந்த தகவலின் அடிப்படையில் காவல்துறையினர் அவர் வீட்டில் சோதனை நடத்திய போது ஒரு அதிர்ச்சியான சம்பவம் வெளிச்சத்திற்கு வந்தது.
யவத்மால் காவல்நிலைய காவல் ஆய்வாளர் ராம்கிருஷ்ண ஜாதவ் அளித்த தகவலின்படி, மஹாதேவ் பலாவே என்ற மந்திரவாதி சீமா(பெயர் மாற்றப்பட்டுள்ளது) மற்றும் அவரது 16 வயதான மகளை அகோரி சிகிச்சை என்ற பெயரில் ஒரு அறையில் பூட்டி வைத்திருந்தார்.
திக்ராஸ் பகுதியைச் சேர்ந்த சீமா தனது கணவரின் மரணத்திற்கு பிறகு அதிர்ச்சிக்குள்ளானர். அவர் மனச்சோர்வில் இருந்தார்.
யாரோ பில்லி சூனியம் செய்திருப்பதாக மூடத்தனமாக நம்பிய அவர் ஒரு மந்திரவாதியிடம் சிகிச்சைக்காக சென்றிருக்கிறார். அந்த மந்திரவாதி அவரையும் குணப்படுத்தமுடியும் என கூறியிருக்கிறார்.
அவர் மந்திரவாதியிடம் கடந்த ஜூலையில் சென்றிருக்கிறார். அப்போது முதல், அந்த மந்திரவாதி அவர்கள் இருவரையும் தனது வீட்டில் ஒரு அறையில் பூட்டி வைத்திருந்தார் .
குணப்படுத்துவதாக கூறி பலாவே என்ற அந்த மந்திரவாதி சீமாவுக்கு பல கொடூரங்களை செய்திருக்கிறார். அவர் அவரை அடித்து உதைத்திருக்கிறார்.
அவரது கொடூரங்கள் சீமாவின் உடலில் காயங்களாக காட்சியளிக்கின்றன. சில நாட்களுக்கு பின்னர் அவர் இதே போன்ற கொடுமையை சிறுமியான சீமாவின் மகள் உடலிலும் செய்யத் தொடங்கினார்.
அவர் அந்த சிறுமியை அடித்ததுடன், சவுக்காலும் அடித்திருக்கிறார். அவர் தனது உடலில் பல கொடுமைகளைச் செய்ததாக சிறுமி காவல்துறையிடம் அளித்த வாக்குமூலத்தில் கூறியுள்ளார்.
அழுக்கும், அருவருப்பும்அந்த மந்திரவாதி அவர்கள் இருவரையுமே அறையை விட்டு வெளியே செல்ல அனுமதிக்கவில்லை. இயற்கை உபாதைகளை கழிப்பது முதல் குளிப்பது வரை அனைத்தையும் அந்த அறையிலேயே செய்ய வைத்திருக்கிறார். அதன் விளைவாக அறை மிகவும் அசுத்தமாக இருந்தது.
அவர்கள் இருவரையும் அவர் பட்டினியாக வைத்திருந்தார். அதனால் காவல்துறை சோதனை நடத்தியபோது அவர்கள் இருவரும் மிகவும் பலவீனமான நிலையில் இருந்தனர்.
காவல்துறை மீட்ட பிறகு அவர்களுக்கு உணவு அளிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
மந்திரவாதியின் தற்கொலை முயற்சிகாவல்துறையினர் வீட்டில் சோதனை நடத்த சென்றனர். தாயும் மகளும் சிறை வைக்கப்பட்டிருப்பதை பார்த்தவுடன் காவல்துறையினர் அவர்களிடம் விசாரணை நடத்த தொடங்கினர்.
காவல்துறையினர் அந்த தாய்-மகளிடம் விசாரணை நடத்திக்கொண்டிருந்த போது, மந்திரவாதி தனது கழுத்தில் கத்தியால் குத்திக்கொண்டு தற்கொலை செய்துகொள்ள முயன்றார்.
அவர் உடனடியாக சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவர் தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
சீமாவின் மகள் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் பிஎன்எஸ் சட்டத்தின் 118(2), 137, 138 ஆகிய பிரிவுகள் மற்றும் சிறார் நீதிச் சட்டத்தின் 75ஆவது பிரிவு மற்றும் மந்திரவாத தடுப்பு சட்டத்தின் மூன்றாம் பிரிவின் கீழ் மந்திரவாதியின் மீது காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
காவல்துறையினர் மந்திரவாதியின் வீட்டை சோதித்தபோது, மந்திரவாதத்திற்கு பயன்படுத்தப்படும் பொருட்களை கண்டுபிடித்து அவற்றை பறிமுதல் செய்தனர்.
அங்கு வேறு ஏதேனும் புதைத்துவைக்கப்பட்டுள்ளதா என கண்டறிய காவல்துறையினர் தோண்டிப் பார்த்தனர். ஆனால் எதுவும் கண்டுபிடிக்கப்படவில்லை. இவையெல்லாம் நரபலி கொடுப்பதற்காக செய்யப்பட்டனவா என்பதை குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சட்டம் இருந்தும் இதுபோல் நடப்பது ஏன்?மகாராஷ்டிராவில் இதைப்போன்ற மூடநம்பிக்கைகள் சட்டப்படி குற்றமாகும். இதற்காக மூடநம்பிக்கை ஒழிப்புச் சட்டம் 2013ஆம் ஆண்டு இயற்றப்பட்டது.
ஆனால், இந்தச் சட்டம் வந்து 12 ஆண்டுகள் ஆன பிறகும், மகாராஷ்டிராவில் மந்திரவாதம் போன்ற நிகழ்வுகள் இன்னும் நடப்பதைக் காண முடிகிறது. இதனால், சட்டம் உண்மையில் அமல்படுத்தப்படுகிறதா இல்லையாவென்ற கேள்விள் எழுகின்றன.
மூடநம்பிக்கை ஒழிப்பு சட்டத்தை அமல்படுத்த மந்திரவாத எதிர்ப்புச் சட்ட பரப்புரை மற்றும் அமலாக்க குழு ஒன்று அமைக்கப்பட்டது. சமூக நீதிக்கான அமைச்சர்தான் இந்த குழுவிற்கு தலைவர். இந்த குழுவின் இணைத் தவர் ஷியாம் மானவ்.
இந்த சட்டம் என்றால் என்ன? அதன் மூலம் நடவடிக்கை எப்படி எடுக்கமுடியும்? என்பதை எடுத்துச் சொல்வதன் மூலம் இந்தக் குழு மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்பட்டது.
இந்தச் சட்டம் மக்களை சென்றடைவதையும் அந்த சட்டம் மதிக்கப்படுவதையும் உறுதிசெய்வதற்காக இந்தக் குழு அரசு அதிகாரிகள், கிராமப் பணியாளர்கள் அங்கன்வாடி பணியாளர்கள், ஆஷா பணியாளர்கள் மற்றும் காவல் அமைப்புகளுக்கு பயிற்சி அளிக்கும் என முடிவு செய்யபட்டது.
ஆனால் அரசின் அலட்சியத்தால் , அந்த குழு பணியாற்றவே இல்லை. இதன் விளைவாக, சட்டம் முறையாக அமல்படுத்தப்படுவதில்லை என இந்த குழுவின் இணைத் தலைவர் ஷியாம் மானவ் பிபிசி மராத்தியிடம் பேசும்போது தெரிவித்தார்.
இந்த அலட்சியம் குறித்து பேசிய மானவ், "2013ஆம் ஆண்டு இந்தச் சட்டம் இயற்றப்பட்டபோது, இந்தக் குழுவின் செயல்பாட்டுக்கு நிதி ஒதுக்கீட்டிற்கும் அனுமதி அளிக்கப்பட்டது. அந்த நேரத்தில், 2014-2015ஆம் ஆண்டில் ஒரு கோடி ரூபாய்க்கான அரசாணை மட்டுமே பழைய அரசின் பட்ஜெட்டில் ஒதுக்கீடு செய்யப்பட்டது. இந்தப் பணம் குழுவின் அலுவலகத்தை அமைப்பதற்கும். காவல்துறை பயிற்சிக்கும் பயன்படுத்தப்பட்டது," என்று கூறினார்.
"ஆனால் அதற்கு பின்னர் அலட்சியம் இருந்தது. நிதி ஒதுக்கீட்டிற்கு அரசு ஒப்புதல் அளித்தது. ஆனால் பணிகளுக்கான அரசாணைகள் வெளியிடப்படவில்லை. நாங்கள் அமைச்சகத்தையும், அமைச்சர்களையும் அடைய முயற்சிகளை மேற்கொண்டு சலிப்படைந்தோம். ஆனால் அரசாணை வெளியிடப்படாததால் கூடுதல் பயிற்சிகள் அளிப்பது சாத்தியமில்லை,"என்கிறார் மானவ்.
உத்தவ் தாக்ரே அரசு இருந்தபோது 12 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீட்டுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. அதை வைத்து விழிப்புணர்வு பணிகள் தொடங்கப்பட்டன. ஆனால் கொரோனா தொற்று ஏற்பட்டு அந்தப் பணி நிறுத்தப்பட்டது. அதன் பின்னர் ஷிண்டே அரசில் 22 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீட்டிற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. ஆனால் இதற்கான அரசாணையை வெளியிட செயலாளர் ஆறு மாதம் எடுத்துக்கொண்டதாக அவர் தெரிவித்தார்.
நிதி ஒதுக்கீட்டிற்கு அனுமதி அளித்த பின்னரும் பணத்தை பயன்படுத்தமுடியாது என அவர் தெரிவித்தார். இதற்கு கூட அவர்கள் திரும்பத் திரும்ப அமைச்சர்களிடமும் பல்வேறு துறைகளிடமும் செல்லவேண்டியிருக்கிறது.
ஒட்டுமொத்தத்தில் இந்த சட்டம் பொதுமக்களிடம் விளம்பரப்படுத்தப்படவில்லை. எனவே இதைப் போன்ற வேடதாரிகள் மீது எந்த கட்டுப்பாடும் இல்லை என அவர் தெரிவித்தார்.
மறுபுறம், மூடநம்பிக்கை ஒழிப்பு சட்டத்தின் விதிகள் தெளிவாக இல்லை என அனிஸ் அமைப்பை செர்ந்த ஹமீத் தாபோல்கர் கருத்து தெரிவித்தார்.
கண்காணிப்பு அதிகாரிகளின் கடமைகள் என்ன? அவர்களுக்கு இருக்கும் அதிகாரம் என்ன? அவர்கள் எப்படி நடவடிக்கை எடுக்கமுடியும்? இதுபோன்ற தெளிவான விதிகள் சட்டத்தில் இடம்பெறவேண்டும் எனகிறார் ஹமீத் தாபோல்கர்.
"மனநல சிகிச்சை வசதிகள் கிராமப்புறப் பகுதிகளிலும் கிடைக்கவேண்டும். மனநல மருத்துவரிடம் செல்லும்படி சொல்லப்படும்போது மக்கள் தாழ்வுமனப்பான்மையால் பாதிக்கப்படுகின்றனர்."
"இதனால்தான் இதுபோன்ற போலி மருத்துவர்களின் உதவி நாடப்படுகிறது. இதைப் போன்ற போலி மருத்துவர்கள் தவறான சிகிச்சை அளிப்பதை பார்த்தால் மக்களும் புகார் அளிக்க முன்வரவேண்டும் ," என்று அவர் வேண்டுகோள் விடுத்தார்.
இதற்கிடையில் இந்த விவகாரம் தொடர்பாக சமூகநலத்துறை அமைச்சர் சஞ்சய் ஷெர்சத்தை தொடர்புகொள்ள பிபிசி மராத்தி முயற்சி செய்தது. ஆனால் பதிலேதும் கிடைக்கவில்லை. அவர் பதிலளித்தால் அதை இங்கே பதிவிடுவோம்.
மூடநம்பிக்கை ஒழிப்பு சட்டம் என்பது என்ன?இந்த சட்டத்தின் முழுப் பெயர் மகாராஷ்டிரா (மனித பலி மற்றும் பிற மனிதாபிமானமற்ற, தீய மற்றும் பயங்கரமான பழக்கவழக்கங்கள் மற்றும் மந்திரவாதத்தைத் தடை செய்வது மற்றும் அவற்றை முழுமையாக ஒழிப்பது குறித்த) சட்டம் 2013.
இந்த சட்டத்தின் கீழ் குற்றமாக கருதப்படக்கூடியவற்றின் நீண்ட பட்டியலே உள்ளது.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு