''கடந்த காலத்தில் போராடியதற்கு மாறாக, திமுக அரசு இப்போது சர்வாதிகாரத்துக்கு துணை போகிறது'': திருச்சி வேலுச்சாமி கண்டனம்..!
Seithipunal Tamil July 28, 2025 10:48 AM

பிரதமர் மோடி தமிழகம் வருகைக்கு எதிர்ப்புத் தெரிவித்து காங்கிரஸ் கட்சியினர் இன்று திருச்சியில் சிலர் கருப்புக் கொடி ஏந்தியும், சிலர் கருப்புச் சட்டை அணிந்தும் போராட்டத்தில் ஈடுப்பட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 35 பேரை போலீஸார் கைது செய்துள்ளனர்.

தமிழகத்துக்கு நலத் திட்டங்களையும், நிதிகளையும் வழங்க மறுப்பதாக பிரதமர் மோடியை கண்டித்து காங்கிரஸ் மாவட்டப் பொருளாளர் முரளி தலைமையில் இந்தப் போராட்டம் மரக்கடை எம்ஜிஆர் சிலை அருகில் நடைபெற்றது.

இதில், அகில இந்திய செயலாளர் கிறிஸ்டோபர் திலக், மாநில செய்தித் தொடர்பாளர் திருச்சி வேலுச்சாமி, மாநில பேச்சாளர் குமரி மகாதேவன், தஞ்சாவூர் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் அலங்காரம் ஷேக் தாவுத், கோட்டத் தலைவர்கள் பகதுர்ஷா, வெங்கடேஷ் காந்தி, பிரியங்கா, அழகர், ஜெயம் கோபி, எட்வின், இளைஞர் காங்கிரஸ் பொதுச் செயலாளர் விஜய் பட்டேல் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

இவ்வாறு அனுமதியின்றி போராட்டத்தில் இவர்கள்கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த ஆர்ப்பாட்டத்துக்குப் பிறகு செய்தியாளர்களிடம் திருச்சி வேலுச்சாமி கூறியது: 

ஜனநாயக நாடுகளில் பிரதமர், குடியரசுத் தலைவர் உள்ளிட்டோருக்கு எதிர்ப்புத் தெரிவித்து ஆர்ப்பாட்டம், கருப்புக் கொடி காட்டுவது ஜனநாயக நடைமுறை. அதைத்தான் இப்போது நாங்கள் செய்கிறோம். ஆனால், இன்று சர்வாதிகார ஆட்சி நடைபெறுகிறதோ என்ற அச்சம் உருவாகியிருக்கிறது என்று தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் திமுக ஆட்சி நடைபெறும் நிலையில், பிரதமர் செல்லும் பாதையில் யாரும் செல்லக்கூடாது என வீட்டுக் காவலில் வைத்திருப்பதும், கடந்த காலத்தில் போராடியதற்கு மாறாக, திமுக அரசு இப்போது சர்வாதிகாரத்துக்கு துணை போகிறது என வன்மையாக குற்றம் சாட்டுகிறேன் என்றும் தெரிவித்துள்ளார். அத்துடன், கடந்த கால வரலாற்றில் இருந்து பாடம் கற்றுக் கொண்டு, கடந்த காலத்தில் என்ன சொன்னீர்களோ அதைச் செய்யுங்கள் என கேட்டுக் கொள்கிறேன் என்றும் அவர் மேலும் வலியுறுத்தியுள்ளார்.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.