மாநிலங்களவைக்கு தேர்வான அதிமுக எம்.பி.க்கள் ம.தனபால், இன்பதுரை ஆகியோர் இன்று உறுப்பினர்களாக பதவியேற்க உள்ளனர்.
தமிழகத்தில் இருந்து மாநிலங்களவைக்கு தேர்வு செய்யப்பட்டு உறுப்பினர்களாக இருந்த அன்புமணி ராமதாஸ், மு.சண்முகம், என்.சந்திரசேகரன், மு. முகமது அப்துல்லா, பி.வில்சன், வைகோ ஆகியாரது பதவிக்காலம் ஜூலை 24ம் தேதியுடன் முடிவடைந்தது. இதனையொட்டி மாநிலங்களவையில் அன்றையதினம் பிரிவு உபசார விழா நடைபெற்றது. கடந்த ஜூன் மாதம் நடைபெற்ற மாநிலங்களவை(ராஜ்ய சபா) தேர்தலில் திமுகவைச் சேர்ந்த பி.வில்சன், ராஜாத்தி (கவிஞர் சல்மா) , எஸ்.ஆர்.சிவலிங்கம், மக்கள் நீதி மய்யத்தைச் சேர்ந்த கமல்ஹாசன் மற்றும் அதிமுகவைச் சேர்ந்த ஐ.எஸ் இன்பதுரை, ம.தனபால் ஆகியோர் போட்டியிட்டனர். பின்னர் 6 பேரும் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்ட நிலையில் , புதிதாக தேர்வு செய்யப்பட்டுள்ள மாநிலங்களவை எம்.பி.கள் கடந்த ஜூலை 25ம் தேதி பதவியேற்பார்கள் என அறிவிக்கப்பட்டது.
அதன்படி ஜூலை 25 அன்று டெல்லியில் நாடாளுமன்ற மாநிலங்களவையில் பதவியேற்பு விழா நடைபெற்றது. அதில் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன், திமுகவைச் சேர்ந்த பி.வில்சன், ராஜாத்தி (கவிஞர் சல்மா) , எஸ்.ஆர்.சிவலிங்கம் ஆகிய 4 பேரும் தமிழில் உறுதிமொழியேற்று பதவியேற்றனர். அவர்களுக்கு துணை சபாநாயகர் ஹரிவன்ஷ் பதவி பிரமானம் செய்து வைத்தார். இந்நிலையில் அதிமுகவைச் சேர்ந்த இன்பதுரை, தனபால் ஆகியோ இன்று ( திங்கள் கிழமை) பதவியேற்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி மாநிலங்களவையில் இன்று இருவரும் எம்.பி.,களாக பதவியேற்கின்றனர்.