வாணியம்பாடி பகுதியில் க்யூஆர் கோடு மூலம் பிச்சை எடுத்து வரும் ஒருவர் வைரலாகியுள்ளார். பொதுமக்கள் அனைவரும் பயன்படுத்தும் வகையிலும் ஒன்றிய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன்படி, பண மதிப்பு இழப்பு நடவடிக்கைக்கு பிறகு ஒவ்வொரு நபரும் டிஜிட்டல் பண பரிவர்த்தனைகளை வெவ்வேறு முறையில் பயன்படுத்தி வருகின்றனர்.
அதன்படி, பொதுமக்கள் பணத்தை கையில் வைத்துக்கொள்ளாமல் ஸ்மார்ட் போன்களில் க்யூ ஆர் கோடுகளை ஸ்கேன் செய்து தங்களது வங்கி கணக்கில் இருந்து நேரடியாக பணத்தை செலுத்துகின்றனர்.
தற்போது அரசு பஸ்களிலும் இந்த வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதனால் பெரிய வணிக நிறுவனங்கள், ஷாப்பிங் மால்கள், கல்வி நிறுவனங்கள், மருத்துவமனைகள், ரயில் நிலையங்கள் மட்டுமின்றி சிறிய மளிகை கடைகள், சாலையோரம் உள்ள தள்ளுவண்டி கடைகள், பூக்கடைகள், டீக்கடைகள், காய்கறி கடைகள் என அனைத்து கடைகளிலும் வியாபாரிகள் க்யூ ஆர் கோடுகள் பயன்படுத்தும் வழிமுறை முன்னிலை பெற்றுள்ளது.
இந்நிலையில் திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்தவர் 55 வயது நபர் ஒருவர் வாணியம்பாடி பஸ் நிலையம், புத்துக்கோயில் உள்பட மக்கள் அதிகம் கூடும் இடங்களில் பிச்சைகேட்டு பிழைப்பு நடத்தி வருகிறார். பிட்சை கேட்கும் போது பலரும் சில்லறை இல்லை என்று சொல்லிவிட்டு செய்வதால், இது குறித்து யோசித்த அவர், தற்போது க்யூஆர் கோடு டிஜிட்டல் கார்டை கையில் வைத்துக்கொண்டு பொதுமக்களிடம் பிச்சை கேட்டு வருகிறார்.
இதனால் பிச்சை போட மனமிருந்தும் கையில் சில்லரை இல்லாத பொதுமக்கள், க்யூஆர் கோடை ஸ்கேன் செய்து பணத்தை செலுத்திவிட்டு செல்கின்றனர். இதுகுறித்து பிச்சையெடுக்கும் அந்த நபர் கூறியுள்ளதாவது:
தன்னிடம் 03 வங்கிகளில் சேமிப்பு கணக்கு உள்ளதாகவும், பிச்சை எடுக்கும் பணத்தை அதில் சேமித்து வருவதாக கூறியுள்ளார். அத்துடன், 03 வங்கிகளின் ஏடிஎம் கார்டுகளை பயன்படுத்தி தேவைப்படும்போது பணத்தை எடுத்துக்கொள்வேன் என்றும் குறிப்பிட்டுள்ளார். பிச்சை கேட்டால் சில்லரை இல்லை என கூறிவிட்டு சென்றுவிடுவைத்தால் அவருக்கென க்யூஆர் கோடு அட்டையை வாங்கி பிச்சை எடுத்து வருவதாக தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் அவருக்கு பொதுமக்களும் ஸ்கேன் செய்து ரூ.10, ரூ.20 என செலுத்திவிட்டு செல்வதாக கூறியுள்ளார். யாசகம் கேட்பவரின் இந்த செயலை ஆச்சரியத்துடன் பார்க்கும் பொதுமக்கள், எல்லாம் டிஜிட்டல் இந்தியாவின் செயல் என்று கூறிவருகின்றனர்.