பிரதமர் மோடி பற்கேற்ற அரசு நிகழ்ச்சிகளில் அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, டி.ஆர்.பி.ராஜா, அனிதா ராதாகிருஷ்ணன், கீதா ஜீவன், சிவசங்கர், தூத்துக்குடி எம்.பி. கனிமொழி மற்றும் விசிக தலைவர் தொல்.திருமாவளவன் பங்கேற்றனர்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கொடுத்தனுப்பிய மனுவை அவர் சார்பில் பிரதமர் மோடியிடம் கொடுத்தார் நிதியமைச்சர் தங்கம் தென்னரசு. இந்த மனுவில் கல்வி நிதி, ரயில் திட்டங்கள், மீனவர்களுக்கு இலங்கைக் கடற்படையால் ஏற்படும் பிரச்சனைகள் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் இடம் பெற்றிருந்தன.
மற்றொரு முக்கியமான கோரிக்கையான 1503.44 ஏக்கர் நிலத்தை மீண்டும் தமிழ்நாடு அரசிடம் ஒப்படைக்க வேண்டும் என்ற கோரிக்கை பலரால் கவனிக்காமல் விடப்பட்டுள்ளது.
”1971-1975-ல் சேலத்தில் உருக்காலை அமைக்க 3,973.08 ஏக்கர் நிலத்தை தமிழக அரசு வழங்கியது. இதில் 1,503.44 ஏக்கர் நிலம் இன்னும் பயன்படுத்தப்படாமல் உள்ளது. இந்த நிலத்தை பாதுகாப்புத் தொழில் பெருவழிச் சாலை அமைக்கும் திட்டத்தை நிறுவுவதற்கு ஏதுவாக திரும்ப வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று மனுவில் கூறப்பட்டுள்ளது.
கலைஞர் ஆட்சியில் சேலத்தில் உருக்காலை அமைக்க ஒன்றிய அரசுக்கு தமிழ்நாடு அரசால் கொடுக்கப்பட்டது தான் இந்த 3,973.08 ஏக்கர் நிலம். இதில் 50 ஆண்டுகளாக 1,503.44 ஏக்கர் நிலத்தை ஒன்றிய அரசு பயன்படுத்தாமல் உள்ளது என்பது மிகவும் ஆச்சரியமான ஒன்றாகும். தற்போதைய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இந்த விவகாரத்தை ஒன்றிய அரசின் கவனத்திற்கு கொண்டு வந்துள்ளதும், அந்த நிலத்தை தொழில் பெருவழிச்சாலை (Industrial Garridor) அமைக்க பயன்படுத்த விளைவதும் மிகவும் முக்கியமானதாகும்.
சேலம் மாவட்டத்திற்கு பெரும் பலனளிக்கும் இந்தத் திட்டத்திற்கு பாஜகவுடன் கூட்டணி சேர்ந்த எடப்பாடி பழனிசாமியும் குரல் கொடுப்பாரா?