திருநெல்வேலியில், தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுகமங்கலம் கிராமத்தைச் சேர்ந்த 28 வயது ஐ.டி ஊழியர் கவின்குமார் ஆணவக் கொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழ்நாட்டையே உலுக்கியிருக்கிறது.
கொலையாளி சுர்ஜித்தின் தந்தை-தாய் இருவரும் காவல் உதவி ஆய்வாளர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இளைஞர்களிடையே நிலவும் சாதிய மனப்பான்மை, தென் மாவட்டங்களில் அதிகரிக்கும் சாதிய கொடூரங்கள், ஆணவக் கொலைக்கான சிறப்புச் சட்டத்தின் அவசியம் என பல்வேறு விவாதங்களை எழுப்பியிருக்கிறது இந்த கொலை சம்பவம்.
இது குறித்து தனது கருத்துக்களை சமூக வலைதளங்கள் மூலம் பதிவு செய்துள்ளார் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர் வேல் முருகன்.
அவரது பதிவில், "நெல்லையில் ஐ.டி. ஊழியர் கவின்குமார் ஆணவக் கொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழகத்தை உலுக்கியுள்ளது. மாற்றுச் சமூகத்தைச் சேர்ந்த பெண்ணுடன் பேசிப் பழகியதற்காக சுர்ஜித் என்பவரால் கொலை செய்யப்பட்ட இந்தச் சம்பவம், சமூகத்தில் இன்னும் நிலவும் பாகுபாடுகளையும், வன்முறையையும் வெளிப்படுத்துகிறது.
குற்றவாளி சுர்ஜித் மீது கொலை மற்றும் வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், இந்தக் கொலைக்குத் தூண்டுதலாக இருந்ததாகக் கூறப்படும் சுர்ஜித்தின் பெற்றோர், காவல் உதவி ஆய்வாளர்களாகப் பணிபுரிந்தவர்கள் என்பதால், பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
இத்தகைய ஆணவக் கொலைகள் சமூகத்தில் அன்பு, சமத்துவம் மற்றும் நீதியைப் பாதிக்கும் கொடூரச் செயல்களாகும். இவற்றைத் தடுக்க அரசுக் கடுமையான சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். அதேநேரம், மக்கள் மத்தியில் சாதி, மதப் பாகுபாடுகளுக்கு எதிரான விழிப்புணர்வை ஏற்படுத்துவது அவசியம்.
கவின்குமாரின் கொலைக்கு நீதி கோரிப் போராடும் அவரது உறவினர்கள் மற்றும் கிராம மக்களின் குரலுக்கு அரசு செவிசாய்க்க வேண்டும். நாம் அனைவரும் ஒருங்கிணைந்து, சமூக நல்லிணக்கத்தை வளர்த்து, ஆணவக் கொலைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க உறுதியேற்போம். சமத்துவமும் நீதியும் நிலவும் சமூகத்தை உருவாக்குவது, நம் அனைவரின் பொறுப்பாகும்." எனக் கூறியுள்ளார்.
வேங்கைவயல் : ``தமிழக காவல்துறை மீது நம்பிக்கை இல்லை..!" - திருமாவளவன்